பாஜகவின் உ.பி. தேர்தல் உத்தி: மீண்டும் பிளவுவாத அரசியல்

பாஜகவின் உ.பி. தேர்தல் உத்தி: மீண்டும் பிளவுவாத அரசியல்
Updated on
2 min read

‘வாக்காளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசுவதில்லை’ என்று கூறிக்கொண்டே பிரிவினை விதைகளைத் தூவுகிறார் மோடி

பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரை உத்தர பிரதேசத் தேர்தல் வெற்றி என்பது, ஒரு பிரதமராக அவரது ஆட்சிக்கான மதிப்பீடாக மட்டும் அல்ல; 2019 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான பாதையையும் தீர்மானிக்கக் கூடிய விஷயம். பாஜகவின் பிரதான பேச்சாளராக, உத்தர பிரதேசத்தின் மூலைமுடுக்கெல்லாம் அவர் சுற்றிவருவது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல. ஆனால், கட்சியின் முதல் வேட்பாளரே அவர்தானோ எனும் அளவுக்குக் கடுமையாகப் பிரச்சாரம் செய்துவருகிறார். பிரச்சினை அதுவல்ல. காவிப் படையின் பிரதான தளபதியாக மேடைகளில் முழங்கும் மோடி, “வாக்காளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசுவதில்லை” என்று கூறிக்கொண்டே பிரிவினை விதைகளை அவரே தூவுகிறார். தேர்தல் களங்களில், ஏளனமும் ஆக்ரோஷமும் கலந்து அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் பாணிப் பேச்சைத்தான் இந்தத் தேர்தலிலும் அவர் பயன்படுத்துகிறார்.

முஸ்லிம் இளவரசர்கள் குறியீடு

தனது பிரதான எதிரிகளான சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணியைக் குறிப்பிட்டுப் பேசும் அவர், அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி ஜோடியை, ‘ஷேஹ்ஸாதே’ என்று விளிக்கிறார். ஷா வம்சத்து இளவரசர்களைக் குறிக்கும் அந்த உருது வார்த்தையைப் பயன்படுத்தி, அவர்களது எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதையே விமர்சிக்கிறார்.

ஒவ்வொரு கூட்டத்திலும், ஒரு முதல்வராக அகிலேஷ் யாதவின் செயல்பாடுகளை சரமாரியாக விமர்சிக்கும் மோடி, சமாஜ்வாதி கட்சி பயன்படுத்தும் ‘காம் போல்தா ஹை’ (நிறைவேற்றப்பட்ட பணிகள் பேசுகின்றன) எனும் வாசகத்தை வைத்தே கேலிசெய்கிறார். உடனடியாக, இந்த வாசகத்தை வைத்தே சமாஜ்வாதி ஆட்சியின் தோல்விகளைக் கிண்டல் செய்யும் நூற்றுக்கண வாட்ஸப் குறுந்தகவல்களை பாஜகவின் சமூக ஊடக அணி அனுப்புகிறது.

யாதவ்களின் அரசா அகிலேஷின் அரசு?

சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் அகிலேஷ் யாதவின் தோல்வியைப் பிரதானப்படுத்திப் பேசும் மோடி, பாலியல் பலாத்காரச் சம்பவங்களைக் குறிப்பிடுவதன் மூலம் பெண்களின் வாக்குகளைக் குறிவைப்ப தோடு மட்டுமல்லாமல், சாதிய வன் முறைகளில் பாதிக்கப்படும் தலித்துகள் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வதற்கே பாடுபடுவதைச் சுட்டிக்காட்டி, அவர்களையும் தன் பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறார். காவல் நிலையங்களில் யாதவ் சமூகத்தினரைப் பணியமர்த்துவதன் மூலம், காவல் நிலையங்களை சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தின் நீட்சியாக அகிலேஷ் மாற்றிவருகிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார்.

மீண்டும் மதப் பிளவு அரசியல்

பிப்ரவரி 19-ல் பதேபூரில் பேசிய மோடி இன்னும் ஒரு படி மேலே சென்றார். “ஒரு கிராமத்துக்கு இடுகாடு கிடைத்தால், அங்கு சுடுகாடும் கிடைக்க வேண்டும். ரம்ஜான் பண்டிகையின்போது மின்சாரம் கிடைக்கிறது எனில், தீபாவளி சமயத்திலும் மின்சாரம் கிடைக்க வேண்டும்” என்று பேசினார். பாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தாததன் மூலம், இந்துக்களுக்கு ஒரு சேதியை அவர் ஏற்கெனவே சொல்லிவிட்டார்.

ஆனால், அது மட்டும் போதவில்லை. வெறுப்பை உமிழும் பேச்சுக்குச் சொந்தக்காரரான கோரக்பூர் மக்களவை உறுப்பினர் யோகி ஆதித்யநாத் மேற்கு உத்தர பிரதேசத்தில் முதன்முறையாகப் பிரச்சாரத்துக்கு அழைக்கப்பட்டிருப்பதன் தொடர்ச்சி இது. இத்தனைக்கும் மோடிக்கோ, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கோ பிடித்தமானவர் அல்ல யோகி ஆதித்யநாத். அதிரடியாகப் பேசும் இவர், கைரானா பகுதியிலிருந்து இந்துக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம், ராமர் கோவில் விவகாரம், பொது சிவில் சட்டம், முத்தலாக் போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசினார். பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் இந்த விவகாரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

2007 மற்றும் 2012 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில், பாஜக களத்திலேயே இல்லை. சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ஆனால், காவிப் படை கபளீகரம் செய்த 2014 மக்களவைத் தேர்தலின்போது மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71-ஐ கைப்பற்றியதைத் தொடர்ந்து, முன்பைவிட அதிக நம்பிக்கையுடன் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக. எனினும், இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கியபோது, பாஜகவுக்குப் பெரிதாக எந்த அலையும் இல்லை. 2014-க்குப் பிறகு அக்கட்சிக்கான ஆதரவு குறைந்துதான் இருக்கிறது.

பழைய கணக்குகள் திரும்புமா?

மேற்கு உத்தர பிரதேசத்தில், குறிப்பாக 2013-ல் நடந்த முஸாஃபர் நகர் கலவரம் போன்ற சம்பவங்கள், மதரீதியான பிளவை ஏற்படுத்தியது, 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்தது. இன்றைக்கு மதரீதியான வெறுப்பின் சுவடுகள், அழிக்க முடியாத கறைபோல், உத்தர பிரதேசத்தின் சமூகப் பரப்பில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அத்துடன் பணமதிப்பு நீக்கம், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சாதி கூட்டணிகள், தனிப்பட்ட பகைகள் என்று பல விஷயங்களும் இந்தத் தேர்தலில் இடம்பெற்றிருக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த யாதவ்களும் தலித்துகளும் இந்தத் தேர்தலில் முறையே சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஆதரவாகத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார்கள். செல்வாக்கு வாய்ந்த ஜாட் மக்கள், ராஷ்ட்ரிய லோக் தளக் கட்சியின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். ஆனால், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உயர் சாதியினரில் பெரும்பாலானோரும், யாதவ்கள் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இணைந்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாஜகவின் கல்யாண் சிங்குக்கு 1990-களில் ஆதரவு தெரிவித்ததுபோல் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்பதுதான். இவர்களின் வாக்குகளையே இப்போது பிரதானமாக நம்பியிருக்கிறது பாஜக. பின்னணியில் பெரிய அளவிலான பிரச்சினைகள் இல்லாத இந்தத் தேர்தலில் மோடியையே தனது ஒரே அஸ்திரமாகப் பயன்படுத்தும் பாஜக, கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் அமைதியான வாக்காளர்களையும், தேர்தலில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருக்கும் வாக்காளர்களையும் திரட்டுவதன் மூலம் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடலாம் என்று கருதுகிறது. அதனால்தான் பழைய கணக்கை நம்பும் பாஜக பழைய உத்தியையும் கையில் எடுத்திருக்கிறது.

- ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: வெ.சந்திரமோகன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in