

நியாயப்படி அப்போது தமிழகத்திலிருந்து மிக அதிக எம்.பி-களை அளித்த தி.மு.க-வுக்கு - கருணாநிதிக்குத்தான் பிரதமர் பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஜெயலலிதாதான்
அடுத்த பிரதமர் என்ற முழக்கம் அ.தி.மு.க-வினரால் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. கூடவே அ.தி.மு.க-வினர் முன்வைக்கும் இன்னொரு முழக்கம் : நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்பது. ஒருவர் எப்படி நிரந்தர முதல்வராகவும் பிரதமராகவும் ஒரே சமயத்தில் இருக்க முடியும் என்ற புதிரைப் புரிந்துகொள்ள முதலில் அ.தி.மு.க-வின் அம்மாயிஸத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.
அ.தி.மு.க-வினரின் ‘ஞ' போல் வளையும் மரியாதைக் கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக அவர்கள் முடியுமானால் ஜெயலலிதாவுக்குதான் அடுத்த நோபல், ஜெயலலிதாதான் அடுத்த ஐ.நா. சபைப் பொதுச்செயலாளர், அவர்தான் அடுத்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் என்றெல்லாம்கூட சொல்ல விரும்பக்கூடும். அதையெல்லாம் தமிழக அரசியல் கலாச்சாரத்தின் வெகுஜனப் பொழுதுபோக்குக் கூறுகள் என்ற அளவில் ஒதுக்கிவைத்துவிட்டு நிஜமாகவே, ஜெயலலிதா இந்தியப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறதா, அல்லது அது அ.தி.மு.க-வினரின் பகல் கனவு மட்டும்தானா என்று ஆராயலாம்.
தமிழ் பிரதமர்
தமிழர்கள் பிரதமரைவிட உயர் பதவியான இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்கெனவே வந்திருக்கிறார்கள். காரணம் அது ஒருவிதத்தில் நியமனப் பதவி மாதிரிதான். மத்தியில் ஆளும் கட்சி விரும்புகிறவரை அதற்குக் கொண்டுவந்துவிட முடியும். தவிர, எப்போதும் பிரதமர் பதவி வட இந்தியாவிலேயே இருந்துவருவதால், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் பதவிகளைத் தென்னிந்தியருக்கு ஒரு ‘கோட்டா’ போல அளித்து சமன்செய்வதை நேரு காலம் முதல் பின்பற்றிவந்திருக்கிறார்கள்.
காமராஜர் நிராகரித்த வாய்ப்பு
பிரதமராகும் வாய்ப்பு தமிழகத் தலைவர்களுக்கு இதற்கு முன்பு இருந்ததா என்றால், அது ஓரிரு முறை மட்டுமே இருந்திருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஓரளவேனும் அறியப்பட்டிருக்கக்கூடிய தலைவராக இருந்தவர்கள் மிகக் குறைவு. காங்கிரஸுக்குள் மாநிலத் தலைவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருந்த காலத்தில் இருந்த தமிழகக் காமராஜர் அப்படி அறியப்பட்டிருந்தவர்களில் ஒருவர். அவர் பிரதமராகும் வாய்ப்பு, நேரு- சாஸ்திரி காலத்துக்குப் பின்னர் கனிந்திருந்தது. ஆனால் அவர் அதை விரும்பவில்லை. இந்தியாவின் பிரதமராக வருபவருக்கு, இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளில் ஒன்றேனும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் தனக்கு அப்படித் தெரியாத நிலையில் தான் பிரதமராகும் வாய்ப்பு இருந்தும்கூட ஆக விரும்பவில்லை என்றும் காமராஜரே தன்னிடம் சொன்னதாகப் பிரபலப் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருக்கிறார்.
தமிழருக்கு வாய்ப்பு வரும் நிலையே இந்திய அரசியலில் அடுத்த சுமார் 30 ஆண்டுகளுக்கு இருக்கவில்லை. ஒற்றைக் கட்சியே வலிமையாக டெல்லியில் ஆட்சி நடத்தும் காலம் முழுக்கவும் அது பெரும்பாலும் காங்கிரஸாகவே இருந்தது. அதில் இந்திரா காலத்திலிருந்து காமராஜர் போன்ற மாநிலத் தலைவர்கள் உருவாகவே முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. இதனால் காங்கிரஸே பல மாநிலங்களிலும் பலவீனமாகி, இனி டெல்லியில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி உதவியுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைமை 1996-ல் ஏற்பட்டது.
கூடிவந்த இன்னொரு வாய்ப்பு
அப்போதுதான் இன்னொரு முறை ஒரு தமிழர் பிரதமராகும் வாய்ப்பு இருந்தது என்று சொல்லலாம். அன்றைய நிலை என்ன என்று சற்று விவரமாகக் கவனிப்பது இன்றைய அரசியல் ஆரூடங்களுக்குப் பயன்படும். அப்போது பா.ஜ.க-வின் 15 நாள் அரசு கவிழ்ந்த பின் காங்கிரஸ் அல்லாத ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. அதன் 179 எம்.பி-களில் தமிழகத்திலிருந்து தி.மு.க-வும் தமிழ் மாநில காங்கிரஸுமாக அனுப்பியவர்கள் மட்டும் 39 பேர். மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணியிலிருந்து 33 பேர். பிகாரிலிருந்து 25 பேர். உத்தரப் பிரதேசத்திலிருந்து 20 பேர். கர்நாடகத்திலிருந்து 16 பேர். ஆந்திரத்திலிருந்து 16 பேர். மொத்தத்தில் 179 எம்.பி-களில் 83 பேர் தென் மண்டலம். அதில் மிகப் பெரிய பங்களிப்பு தமிழ்நாட்டுடையதுதான். இடதுசாரி ஜோதிபாசுவும் தெலுங்கு தேசமும் பிரதமர் பதவியை விரும்பாத நிலையில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்குமே வாய்ப்பு மிஞ்சியது.
தமிழ்நாட்டிலிருந்து யார் என்றபோதுதான் அந்தத் தவறு நிகழ்ந்தது. மூப்பனாரைக் கேட்டார்கள். அவர் மறுத்துவிட்டார். அதன் விளைவாக, கர்நாடக தேவ கௌடா பிரதமரானார். நியாயப்படி அப்போது தமிழகத்திலிருந்து மிக அதிக எம்.பி-களை அளித்த தி.மு.க-வுக்கு - கருணாநிதிக்குத்தான் பிரதமர் பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மூப்பனாரைவிட அரசியல் அனுபவமும் நிர்வாக அனுபவமும் அரசுப் பொறுப்பில் இருந்த அனுபவமும் பல மடங்கு பெற்றவர் கருணாநிதி. அவர் பிரதமராகிவிட்டால் தி.மு.க-வில் அடுத்த முதல்வர் யார் என்ற சிக்கலும் கிடையாது. பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின் என்று வரிசையாகப் பலர் இருந்தனர். ஆனால், கருணாநிதியைப் பிரதமராக வரவிடக் கூடாது என்பதற்காகவே மூப்பனார் பெயர் சொல்லப்பட்டு, தமிழக வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டது (இதை அப்போதே நான் எழுதியிருக்கிறேன்).
இன்னொரு வாய்ப்பா 2014?
அப்படி ஒரு வாய்ப்பு 2014-ல் வரும் என்பதுதான் ஜெயலலிதாவைப் பிரதமராக்க விரும்புவோரின் கணக்கு. காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை என்பதே பெருவாரியான கருத்துக் கணிப்புகளின் முடிவாகும். காங்கிரஸுக்கு சுமார் 130 இடங்களும் பா.ஜ.க-வுக்கு சுமார் 150 இடங்களும் கிட்டலாம் எனப்படுகிறது. எஞ்சியிருக்கக்கூடிய 260 இடங்களை பல்வேறு மாநிலக் கட்சிகள், இடதுசாரிகள் பங்குபோடப்போகின்றன. இடதுசாரிகள் இந்த முறை மேற்கு வங்கத்திலேயே முன்பைவிட அதிகமாக வென்று சுமார் 25 இடங்கள் வரை அடையலாம் என்பது கணிப்பு.
மோடியை முன்னிறுத்தியதால், பா.ஜ.க-வுடன் கூட்டுசேர விரும்பாத பல தேசிய, மாநிலக் கட்சிகள் இடதுசாரிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணிக்கு முயற்சிப்பார்கள். அப்போது
மூன்றாவது அணியில் மிக அதிக எம்.பி-களை வைத்திருக்கக்கூடிய கட்சியின் தலைவருக்கே பிரதமர் வாய்ப்பு என்றாகும்போது, முலாயம், மாயாவதி, நிதீஷ், ஆகியோரைவிட அதிகமாக ஜெயலலிதாவிடம் 35 எம்.பி-கள் வரை இருப்பார்கள்; அப்போது உடன் இருக்கக்கூடிய இடதுசாரிகளும் ஜெயலலிதாவை ஆதரிப்பார்கள் என்பது அவர்கள் வியூகம். ஒருவேளை காங்கிரஸ் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க விடாமல் தன் ஆதரவுடன் அமைப்பதையே விரும்பும் பா.ஜ.க. அப்போது வெளியில் இருந்துகொண்டு ஜெயலலிதாவை ஆதரிக்கக்கூடும்; ஜெயலலிதா பிரதமராகிவிடலாம் என்பது இன்னொரு வியூகம். இந்த வியூகங்களின்படி எல்லாம் நடந்தால், ஜெயலலிதாவுக்குப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எல்லாம் அப்படி நடக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எதுவும் நடக்கலாம்.
தகுதியானவரா?
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்தானா ஜெயலலிதா? பிரதமராக மோடிக்கோ ராகுலுக்கோ தகுதி உண்டா உண்டா என்று கேள்வி எழுப்புவதுபோல இதையும் அலசத்தான் வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஆங்கிலம், ஹிந்தி உடபட பல மொழிகள் தெரியும் என்பதால் மட்டுமே காமராஜருக்கு இல்லாத தகுதி அவருக்கு இருப்பதாகக் கருதிவிட முடியாது. மன்மோகன் சிங்கை விட மோசமாகவா இருக்கப்போகிறார் என்ற வாதங்களும் உதவாது.
கூட்டணியின் அடிப்படை ஜனநாயகம்
ஜெயலலிதா ஒரு முதல்வராக எப்படிச் செயல்பட்டிருக்கிறார், ஒரு கட்சித் தலைவராக எப்படிச் செயல்பட்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, அவர் கட்சியில் துளியும் உள்கட்சி ஜனநாயகம் என்பதே இல்லை என்பது நாம் கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான அம்சம். காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிக் கட்சிகள் எல்லாவற்றிலும் எத்தனை கோளாறுகள் இருந்தாலும், அவை எல்லாவற்றிலும் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கவும் விவாதிக்கவும் இடம் இருந்துகொண்டே இருப்பதுதான் அவற்றை உயிரோடு வைத்திருக்கின்றன. ஜெயலலிதாவின் அ.தி.மு.க அப்படிப்பட்ட கட்சி அல்ல. ஒரு தனியார் முதலாளி நடத்தும் நிறுவனம்போல, முதலாளியைத் தவிர வேறு யாருக்கும் எதையும் சொல்ல உரிமையற்ற இடமாகவே அது இருக்கிறது.
சரியாக ஓராண்டு முன்னால் எழுதிய ஒரு கட்டுரையில் சொன்னேன்: “ஊழல் அராஜகம், குடும்ப சுயநலம், என்று எத்தனையோ கோளாறுகள் நிரம்பிய ஆட்சியை அளித்தவர் என்றாலும், கருணாநிதியை எந்தப் பிரஜை விரும்பினாலும் சந்திக்க முடியும் என்ற நிலை எப்போதும் இருந்திருக்கிறது. சந்திக்க முடியாவிட்டாலும்கூட ஒருவர் தன் குறையை அவர் தீர்க்கிறாரோ இல்லையோ, அவருக்குத் தெரியப்படுத்தவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது. இப்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விஷயத்தை எடுத்துச்செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலேயே தெரியாத நிலை. முதல்வர் கவனத்துக்குப் பிரச்சினையை எடுத்துச்செல்வது எப்படி என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக்கொண்டிருக்கிறார்கள். தன் குடிமக்களுடன் எந்தத் தகவல்தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும் ? என்ன நிர்வாகம் செய்ய முடியும் ? அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரை முதல்வரை அணுகி, சங்கடமான செய்திகளைப் பேசத் தயங்கும் சூழலில் தன் மக்களின் நிலைபற்றி, நிர்வாகத்தின் குறைகள்பற்றி அவருக்கு யார் தகவல் சொல்வார்கள் ? உளவுத் துறை மட்டும்தானா? இப்படிப்பட்ட முதல்வர் நமக்கு எதற்கு என்பதுதான் என் கேள்வி.”
இப்படிப்பட்ட அணுகுமுறையில் இருக்கும் ஒருவரால் இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறான சிக்கல்கள் உள்ள ஒரு பெரிய நாட்டை நிர்வகிக்க முடியுமா? காவல் துறை, உளவுத் துறை, அச்சப்படும் நிர்வாக இயந்திரம், அடிமை மனநிலையுடைய கட்சியினரை மட்டும் கொண்டு ஒரு நாட்டை ஒருபோதும் ஆள முடியாது. 2016-க்குள் ஜெயலலிதாவின் இந்தப் போக்கு மாற்றம் அடைந்து ஜனநாயகபூர்வமான, மக்களிடம் செவிகளுடைய ஒரு முதல்வராகச் செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்துக்கொண்டால் மட்டுமே அவரைப் பிரதமர் பதவிக்கும் தகுதியானவர் என்று ஏற்க முடியும்.
இப்போதைய நிலையிலேயே அவர் பிரதமரானால், இந்தியாவுக்கு நேரும் தொடர் விபத்துகளில் இன்னொன்றாகவே அது இருக்கும். ஒரு தமிழர் முதன்முறையாகப் பிரதமர் ஆகிறார் என்று மட்டும் மகிழ்ச்சி அடைய முடியாது. 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலில் தமிழர்கள் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்று மகிழ்ச்சி அடைவது போன்றது அது.
ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com