Last Updated : 18 Jun, 2016 09:11 AM

 

Published : 18 Jun 2016 09:11 AM
Last Updated : 18 Jun 2016 09:11 AM

உட்தா பஞ்சாப் சர்ச்சை

இந்திய சினிமா, பொழுதுபோக்குச் சாதனமாக உருவானதற்கு தணிக்கை முறையும் ஒரு காரணம்



திரைப்படத் தணிக்கை 1918-ல் பிரிட்டிஷ் அரசால் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே அதன் நோக்கம், இந்த ஊடகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான். சினிமா சார்ந்த சட்டதிட்டங்களும் இதைச் சார்ந்தே இருந்தன. இது ஒரு எதிர்மறை அணுகுமுறை. இத்தணிக்கை முறை பல பத்தாண்டுகளாக - 1952 வரை போலீஸார் கையில்தான் இருந்தது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்திய சினிமா பெரும்பாலும் ஜனரஞ்சகப் பொழுதுபோக்குச் சாதனமாக உருவானதற்கு, அதன் முளைவிடும் பருவத்திலேயே திணிக்கப்பட்ட தணிக்கை முறையும் ஒரு காரணமாகும். அதே நிலை இப்போது மறுபடியும் தலைதூக்குகிறது.

‘உட்தா பஞ்சாப்’ போன்ற படம் தணிக்கை செய்யப்படும்போது, படத்தின் மையக் கருத்தைக் கணக்கில்கொள்ளாமல், தனித் தனிக் காட்சிப் படிமங்களை மட்டும் ஒழுக்கரீதியில் கண்காணித்துக் கத்தரி போடுகிறார்கள். போதை மருந்துக்கு ஒரு தலைமுறையே பலியாவதைக் கண்டு துடித்த ஒரு படைப்பாளியின் ஆதங்க வெளிப்பாடு அது. தீர்க்கமான கள ஆய்வின் அடிப்படையில், யதார்த்த பாணியில் உருவாக்கப்பட்ட படம் என்றறிகிறேன். சினிமாவின் தாக்கம் யதார்த்த பாணி படத்தில் ஆழமாக இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ‘காக்கா முட்டை’ போல. ‘உட்தா பஞ்சாப்’ படத்தின் கருவை அறிந்து, அதன் மூன்று பிரதான நடிகர்களும் தங்கள் சம்பளத்தில் பாதியைத்தான் ஏற்றுக்கொண்டார்களாம்.

பரவும் கொடிய நச்சு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கணிப்பின்படி, டெல்லியில் 1.2% மக்கள் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதில் 99% ஆண்கள். இது பன்னாட்டு விகிதத்தைவிட நான்கு மடங்கு அதிகம். அங்கு புழக்கத்தில் இருப்பது ஹெராயின் எனப்படும் கொடிய நச்சு. பஞ்சாபில் போதை மருந்துப் பழக்கம் ஒரு கொள்ளை நோயைப் போல் பரவிவருகிறது என்கிறார்கள். அது மட்டுமல்ல.. இந்த போதை மருந்து உலகில் பல அரசியல்வாதிகள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது செய்தி. இதை சுட்டிக்காட்டியதற்குத்தான் ‘உட்தா பஞ்சாப்’ 89 வெட்டுகளை வாங்கியது.

நம் நாட்டு சினிமா வரலாற்றில் பல படங்கள் இவ்வாறு சிதைக்கப்பட்டிருக்கின்றன. நாத்திக வாதம், பகுத்தறிவு வாதம் இவற்றைப் பேசுபொருளாகக் கொண்ட ‘பராசக்தி’ (1953) படத்தைத் தனிக் குழு ஒன்று பார்த்துத் தலையசைத்த பின்புதான் வெளியானது. (சென்னையில் தணிக்கை அதிகாரியாகப் பதவி ஏற்றிருந்த மணிக்கொடி எழுத்தாளர் ஸ்டாலின் சீனிவாசன் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை). எஸ்.பாலசந்தர் இயக்கிய ‘அவன் அமரன்’ (1958) படம் இடதுசாரிக் கருத்தாக்கத்தைக் கொண்டிருந்ததால் குதறப்பட்டு வெளியானது. (திரைக்கதை வசனம் என்.நாகராஜன்) ஆனால், இணங்காத இளம் மனைவியிடம் பலாத்காரமாக உறவுகொள்ளும் கணவனைப் பற்றிய ‘என் ராசாவின் மனசிலே’ (1992) படம் ஒரு பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. எந்த விமர்சகரும் இதைச் சுட்டிக்காட்டவும் இல்லை. தனித் தனிக் காட்சி பிம்பங்களைக் கவனித்து, படத்தின் சாராம்சத்தைக் கோட்டைவிட்டதற்கு எடுத்துக்காட்டுகள் பல உண்டு.

தீக்கிரையாக்கப்பட்ட ‘கிஸ்ஸா குர்ஸி கா’

ஆதிக்க அரசுகள், கருத்துகளைப் பரப்பும் ஊடகங்கள் மீது தனிக் கவனம் செலுத்தி நெருக்குவதற்கு உலகெங்குமிருந்து எடுத்துக்காட்டுகள் காட்ட முடியும். நம் நாட்டில் நெருக்கடி நிலைமை காலத்தில் அன்றைய அரசியலைப் பகடி செய்த ‘கிஸ்ஸா குர்ஸி கா’ (1977) என்ற படத்தின் எல்லா பிரதிகளும் மாஸ்டர் நெகட்டிவும் மாருதி தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே தீக்கிரையாக்கப்பட்டதை மறக்க முடியாது. அண்மையில், பெங்களூரில் பேசிய கோபாலகிருஷ்ண காந்தி, “நாட்டில் இப்போது பிரகடனப்படுத்தப்படாத நெருக்கடி நிலைமை நிலவுகிறது” என்றார். பூலன் தேவி பற்றிய பேண்டிட் க்வீன் (1994) என்ற படமும் சர்ச்சையில் சிக்கி, பின்னர் உச்ச நீதிமன்றம் சில வன்முறைக் காட்சிகளையும், நிர்வாணக் காட்சி ஒன்றையும் அனுமதித்து... பின்னர் வெளியிடப்பட்டது.

கதையின் கரு, ஓட்டம், திரைப்படத்தின் தன்மை இவற்றை உணராமல் தணிக்கைக் குழு விட்டேற்றியாகப் படத்தின் சில பகுதிகளை நீக்கிவிடுவது பெரும் தவறு. படம் சூசகமாக உறுதிப்படுத்தும் கருத்துகள் யாவை, இந்த ஊடகத்தின் இயல்பு என்ன என்பதை அறிய சினிமா பற்றிய அறிவு தேவையாகிறது. அதாவது, சினிமா ரசனை. தணிக்கை வாரியத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் இந்த ரசனை ஓரளவாவது இருக்க வேண்டும்.

நடைமுறைக்கு வராத பரிசீலனைகள்

அந்த அறிவின் அடிப்படையில்தான் தணிக்கை விதிகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இந்திய சினிமா தணிக்கைச் சட்டத்தின் ஒரு நோக்கம் சினிமாவை மேம்படுத்துவது. சினிமாவைப் பார்ப்பதற்கு, அது சார்ந்த முடிவுகள் எடுப்பதற்கு, அது பற்றி எழுதுவதற்குப் புரிதல் ஏதும் தேவையில்லை என்பது நம் பொதுப்புத்தியில் உறைந்துபோன ஒரு கருத்தாக்கம். சினிமாவுக்குரிய நியாயங்கள், பண்புகள் பற்றிய பரிச்சயம் படித்துப் பட்டம் பெற்றவர்களிடம்கூட இல்லை. நான் திரையில் பார்க்கிறேனே, புரிகிறதே என்பதுதான் இவர்கள் வாதம். ஆட்டம்பாட்டம் நிறைந்த, நேரம்கொல்லிப் பொழுதுபோக்குப் படங்களையே பார்த்துப் பார்த்து, இதுதான் சினிமா என்ற கருத்து நம்முள் வேரூன்றிவிட்டது. சினிமாவின் சாத்தியக்கூறுகள் பற்றியோ நியதிகள் பற்றியோ தெரிந்துகொள்ள நாம் ஆர்வம் காட்டுவதில்லை.

அவ்வப்போது பரிசீலனைக் குழுக்கள் அமைத்து, இந்த தணிக்கை முறை பற்றி அலச அரசு முனைகிறது. ஆனால், அவர்களது எந்தப் பரிந்துரையும் நடைமுறைக்கு வருவதில்லை. இந்தக் குழுக்களும் படத்தின் சாராம்சம் பற்றியோ, சினிமா பற்றியோ அக்கறை காட்டியதில்லை. ஆனால், 1968-ல் நீதிபதி ஜி.டி.கோஸ்லா (காந்திஜி கொலை வழக்கை விசாரித்தவர்). தலைமையில் ஏற்படுத்தப்பட்ட பரிசீலனைக் குழு இந்தப் பொதுப்போக்கிலிருந்து வேறுபட்டிருந்தது. தணிக்கை விதிகளை அது கடுமையாக விமரிசித்தது. “இவ்விதிகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்தால் ஒரு இந்தியப் படத்துக்குக்கூட சான்றிதழ் தர இயலாது” என்றது. ‘உட்தா பஞ்சாப்’ பட சர்ச்சையின் பின்னணியில் இந்த வாக்கியம் ஆழ்ந்த அர்த்தம் பெறுகிறது.

- கட்டுரையாசிரியர் எழுத்தாளர், திரைப்பட வரலாற்றாய்வாளர், கானுயிர் ஆர்வலர். தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x