

ஆவணங்கள் முக்கியமானவை. தனியார் ஆவணமாக இருக்கலாம். அரசு ஆவணமாக இருக்கலாம். அவை எல்லாமே மனித உயிரோடும்கூட விளையாடக்கூடியவை.
ஒரு சின்ன ரசீது பேரறிவாளன் வாழ்க்கையைக் குறிவைக்கப் போதுமான ஆவணமாகக் கருதப்பட்டுவிட்டது என்று தகவல்கள் வருகின்றன. இரண்டு பேட்டரி செல்கள் வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு பேட்டரி செல்களை வாங்கியதற்கான ரசீது பேரறிவாளன் சட்டைப் பையில் இருக்கிறது. எனவே பேரறிவாளன் மரண தண்டனைக்கு உகந்த குற்றவாளியாகக் கருதப்படுகிறார். எத்தனை கடைகளில் இரண்டு பேட்டரி செல் விற்பதற்கு ரசீது கொடுக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என்ற ஆதாரமான கேள்விக்கே இடமில்லை.
ஆவணங்களின் வலிமை அதுதான். அதனால்தான் அவை காக்கவும் படுகின்றன, அழிக்கவும் படுகின்றன. பல சமயம் காணாமலும் போகின்றன.
ஒளிந்துகொண்ட ஒலிப்பதிவு
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மடாதிபதியும் அவரது சார்பில் ஒரு பெண்ணும் நீதிபதியிடம் லஞ்சப் பணம் கொடுக்கக் கால அவகாசம்பற்றிப் பேசியதாகச் சொல்லப்பட்ட ஓர் ஒலிப்பதிவு ஆவணம் வெளியானதை இப்போது மறுபடியும் நினைவுபடுத்திக்கொள்ளலாம். அது அசல் ஒலிப்பதிவுதானா, இல்லை போலியானதா என்பதை மூவரின் குரல் பதிவுகளையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்து உண்மையைக் கண்டறியும்படி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சில மாதங்கள் கழித்துக் காவல் துறை அளித்த பதிலின்படி, அந்த ஒலிப்பதிவு ஆவணம் ‘கரெப்ட்' ஆகிவிட்டதால் அதில் எதையும் கேட்கமுடியவில்லை. அதே ஒலிப்பதிவு துல்லியமாகக் கேட்கும் விதத்தில் இன்றும் இணையத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறது. ஆனால் நீதிமன்றம், காவல்துறையைப் பொறுத்தமட்டில் அசல் ஆவணம் ‘கரெப்ட்' ஆகிவிட்டதால் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியவே முடியாமல் விஷயமே காலாவதியாகிவிட்டது.
தொலைக்கும் வல்லமை
நிலக்கரி ஒதுக்கீட்டு ஆவணங்கள் அடங்கிய சில கோப்புகள் எங்கே என்று நீதிமன்றம் கேட்டபோது, தேடுகிறோம் என்றார்கள். தேடித்தேடிப் பார்த்து அவை தொலைந்துபோய்விட்டன என்று பதில் சொல்லிவிட்டார்கள். மின் கட்டண ரசீதையோ, ரேஷன் கார்டையோ தொலைத்துவிட்டால் நம் கதி அவ்வளவுதான். ஆனால் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் தொலைத்துவிட்டு எதுவும் ஆகாமல் இருக்கும் வல்லமை அரசு இயந்திரத்துக்கே உண்டு.
தொலைக்கும் வழிகள்
ஆவணங்களைத் தொலைக்கப் பல வழிகள் இருக்கின்றன. தீ விபத்து எளிமையான வழி. யாரும் யார்மீதும் இதற்காகப் பழிபோடவே முடியாது. எல்லாம் ‘அவன்’ செயல். பழியெல்லாம் ‘ஷார்ட் சர்க்யூட்’ என்ற பெயரில் கடவுளைப் போல கண்ணுக்குத் தெரியாத மின்சாரத்தின் மீதுதான். சில அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட பிரிவில் மட்டும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதையும் தற்செயல் என்றே நாம் நம்ப வேண்டும்.
பிரிட்டன் அமைத்துக்கொடுத்த பாதை
அரசு தன் வசமுள்ள ஆவணங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் எப்படி ரகசியப்படுத்த வேண்டும், எப்படி அழிக்க வேண்டும் என்பதையெல்லாம் நவீன உலகத்தில் எல்லா நாடுகளுக்கும் சொல்லிக்கொடுத்த வழிகாட்டி பிரிட்டன்தான். சேனல் 4 படங்கள் வாயிலாக இலங்கை அரசின் போர்க்குற்றங்களை ஆதாரத்தோடு வெளிப்படுத்துவதை இன்று ஊக்குவிப்பதும் அதே பிரிட்டன்தான். (இப்போதும் அந்தப் போரில் இலங்கை அரசுக்கு தன் ஆயுத உதவி எவ்வளவு என்ற கோப்பை பிரிட்டன் வெளிப்படுத்தாது.) சாம்ராஜ்ஜியமாக இருந்து அடிமை நாடுகளைத் தன்கீழ் வைத்திருந்த பிரிட்டன் அவற்றில் அரசு இயந்திரத்தை உருவாக்கியது போலவே, விடுதலை அளித்துவிட்டு வெளியேறும்போது எந்தெந்த ஆவணங்கள் அழிக்கப்பட வேண்டும், அகற்றப்பட வேண்டும் என்று மிக விரிவான திட்டமே தீட்டியிருக்கிறது.
சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னரே…
பிரிட்டிஷ் ராணியின் ஆட்சிக்கோ, அதன் ராணுவம், காவல் துறை, அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளூரில் அதுவரை உதவிய உளவாளிகள், யாருக்கும் எந்த தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஆவணக் கோப்புகளையெல்லாம் அழிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. தங்கள் அரசு பாரபட்சமாகவோ இனவெறியுடனோ மத எதிர்ப்புடனோ ஏதேனும் செய்ததாக ஆவணத்தின்மூலம் கருத வாய்ப்பிருந்தால், அந்த ஆவணத்தை அழிக்கச் சொல்லியிருக்கிறது. பல அடிமை நாடுகளில் சுதந்திரம் அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் செய்வதற்கு ஓராண்டு முன்பிருந்தே இந்த வேலைகள் தொடங்கப்பட்டன. ஏனென்றால் அவ்வளவு ஆவண அகற்றலும் அழித்தலும் செய்ய வேண்டியிருந்தது. ஆட்சி மாற்றத்துக்கு முந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளும் உள்நாட்டு அதிகாரிகளும் ஒன்றாக வேலை செய்துவந்தபோதே, எந்தெந்த கோப்புகளை பிரிட்டிஷ் அதிகாரி மட்டுமே பார்க்கலாம் என்பது பிரிக்கப்பட்டுவிட்டது. புது அரசிடம் ஒப்படைக்கச் சில கோப்புகளைத் திருத்தியும் புதிதாகவே உருவாக்கியும் கொடுத்தார்கள்.
ஆவணங்களை எப்படி அழிப்பது என்பதையும் துல்லியமாகத் தங்கள் அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் அரசு தெரிவித்தது. எரிப்பதாயிருந்தால், நன்றாக எரித்துச் சாம்பலானதும், சாம்பலை ஒரே இடத்தில் வைக்காமல் பிரித்துப் பல இடங்களில் சிதற வைத்துவிட வேண்டும். கடலில் ஆவணங்களைக் கொட்டுவதானால், கனமான பெட்டிகளில் வைத்து ஆழ்கடலில், கடல் நீர்ப்போக்கு அதை வேறு இடத்துக்கு அடித்துக் கொண்டுபோய்விடாத பகுதியாகப் பார்த்து, கடற்கரையிலிருந்து எளிதில் அடைய முடியாத இடத்தில் கொட்ட வேண்டும்.
அம்பலமாக்கிய ‘கார்டியன்’
பல்லாயிரக் கணக்கான ஆவணங்கள் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டது போலவே மேலும் ஆயிரக் கணக்கானவை இவ்வாறு அழிக்கப்பட்டன. பிரிட்டனுக்கு வந்த ஆவணங்களிலும் பெரும்பாலானவை இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. கென்யா நாட்டினர் சிலர், 1950-ல் நடந்த புரட்சியின்போது தங்கள் மனித உரிமைகளை பிரிட்டிஷ் அரசு மறுத்துத் துன்புறுத்திச் சித்திரவதை செய்ததற்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் தொடுத்த ஒரு வழக்கால், இப்படி மறைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட சில ஆவணங்கள்பற்றி அரசு ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. இந்த விவரங்களை அண்மையில் ‘கார்டியன்’ ஏடு வெளியிட்டது.
நெருக்கடிநிலை பிரகடனமா, அப்படியென்றால்?
ஆவணங்களை ரகசியமாக வைத்திருக்க ஒரு காலக்கெடுவை எல்லா அரசுகளும் பின்பற்றும். அதன்பின் அவை பொதுப்பார்வைக்கு வர வேண்டும். இந்தியாவில் அண்மையில் அவ்வாறு நெருக்கடிநிலை பிரகடனம் தொடர்பான ஆவணங்களைப் பார்வையிட ஒருவர் மனு போட்டபோது, அந்த ஆவணங்கள் ஏதும் இல்லை என்று பதில் வந்தது. எந்த அடிப்படையில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது என்பதற்கான அரசுக் கோப்பே இல்லையாம்.!
லட்சுமணனிலிருந்து தேஜ்பால்வரை…
இன்று ஆவணங்கள் காவல் துறை காட்டும் ரசீதுகள், அரசுக் கோப்புகள் மட்டுமல்ல, நவீன தொழில்நுட்பம் மேலும் பல ஆவணங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அந்த வசதியில்தான் பல புலனாய்வு முயற்சிகள் புதிய ஆவணங்களையே உருவாக்குகின்றன. செல்போன், மின்னஞ்சல், கண்காணிப்பு கேமராக்கள், வீடியோ, தொலைக்காட்சிப் பதிவுகளும் இன்று முக்கிய ஆவணங்கள். பி.ஜே.பி. தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்குவதை வீடியோ பதிவின் மூலமும், குஜராத் முஸ்லிம்கள் படுகொலையில் அரசு, காவல்துறை, மோடிகட்சியினரின் உதவியுடனே கலவரம்செய்ததாகப் பெருமையாகப் பல இந்துத்துவ ஊழியர்கள் அளித்த வீடியோ பதிவு பேட்டிகளின் மூலமும் அம்பலப்படுத்தியது தெஹல்கா. இன்று அதன் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதுள்ள பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுக்குப் பெரும் ஆதாரமாக செல்போன் பதிவுகளும் மின்னஞ்சல்களும் கேமரா பதிவுகளுமே இப்போது முன்வைக்கப்படுகின்றன. நரேந்திர மோடியின் உத்தரவின்படி அமித் ஷாவும் குஜராத் காவல் அதிகாரிகளும் ஒரு பெண்ணை சட்டவிரோதமாகக் கண்காணித்துவந்ததாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுபற்றிய முதல் தகவல் வெளியானதே அமித் ஷாவும் காவல் அதிகாரியும் நடத்திய உரையாடல் பதிவின் அடிப்படையில்தான்.
நீரா ராடியா டேப்களின் அடிப்படையில் தொழிற்துறை- அரசியல் கூட்டு ஊழல்கள் தொடர்பான இன்னும் பல விசாரணைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆவண அரசியல் முன்னெப்போதையும்விட இன்னும் மும்முரமாகத் தொடரும். சில காணாமல் போகும். சில அழிக்கப்படும். எனவே எந்த ஆவணத்துக்கும் ஒரு ‘பேக் அப்' வைத்துக்கொள்வதுதான் இனி அடுத்த ஆவண அரசியல் அத்தியாயம்.
ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக விமர்சகர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com