ஆர்க்டிக் மீது ஆசை!

ஆர்க்டிக் மீது ஆசை!
Updated on
2 min read

ஆர்க்டிக் பிரதேசத்தையும், வட துருவத்தையும் படிக்காமல் நம்மில் எவரும் புவியியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க முடியாது. கடுங்குளிர் நிலவும் பனிக் கடலான ஆர்க்டிக் பெருங்கடலையும், கனடா, ரஷ்யா, அமெரிக்கா, டென்மார்க், நார்வே, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது ஆர்க்டிக் பிரதேசம். இதன் மையப்பகுதி வட துருவம்.

ஊசி போல் குத்தும் குளிரோ, உறைய வைக்கும் குளிரோ அல்ல… உயிரை வாங்கும் குளிர் நிலவும் பகுதி இது. இதனை மையமாக வைத்துத்தான் இப்போது புதுப் பிரச்சினைக்கு தொடக்கப் புள்ளியை வைத்துள்ளது கனடா. வட துருவம் உள்பட ஆர்க்டிக் பிரதேசத்தின் பெரும் பகுதி முற்றிலும் தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடி, அதனை தங்களுக்குப் பாத்தியப்பட்டது என்று தீர்ப்புக் கூற வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபையிடம் மகஜர் கொடுத்துள்ளது கனடா அரசு.

ஆர்க்டிக் பிரதேசத்தின் பெரும் பகுதி இதுவரை எந்த நாடுகளுமே தங்களுக்கு என்று உரிமை கொண்டாடாத, அனைவருக்கும் உரிமையான பொது இடம். பல்வேறு நாடுகள் அங்கு ஆய்வுக் கூடங்களை அமைத்துள்ளன. ஆனால் இப்போது திடீரென கனடா ஆர்க்டிக் பகுதியை சொந்தம் கொண்டாட காரணம் ஏதும் இல்லாமல் இல்லை. இன்றைய உலகின் ஓட்டத்துக்கு இன்றியமையாத தேவையாகி விட்ட பெட்ரோலியமும், எரிவாயுவும் ஆர்க்டிக் பிரதேசத்தின் சில பகுதிகளில் கொட்டிக் கிடக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளதுதான் கனடாவின் இந்த உரிமை கொண்டாடும் கோரிக்கைக்கு முழுமுதற் காரணம். உலகில் இதுவரை எடுக்கப்படாமல் உள்ள பெட்ரோலிய வளத்தில் 30 சதவீதமும், இயற்கை எரிவாயுவில் 15 சதவீதமும் ஆர்க்டிக் பிரதேசத்தில்தான் முழுமையாக மறைந்துள்ளது என்பது புவியியல் ஆய்வாளர்களின் சமீபத்திய கண்டுபிடிப்பு. இவற்றை எடுப்பதில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும், இப்போதைக்குக் கிடைக்கும் பகுதியை வளைத்துப் போட்டுவிட்டால் கிடைத்தவரைக்கும் லாபம். இந்தப் போட்டியில் முந்திக் கொண்டுள்ளது கனடா.

ஐ.நா.விதிப்படி ஒரு நாடு தனது நிலப்பரப்பின் எல்லையில் இருந்து 200 கடல் மைல் தொலைவு வரை உரிமை கொண்டாட முடியும். இதற்கு மேலும் உள்ள கடல் பகுதியை சொந்தமாக்க அக்கடல் படுகை தங்கள் நாட்டு எல்லைக்கு உட்பட்டது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். இதற்காக பணத்தைக் கொட்டி தனது ஆய்வாளர்களையும், விஞ்ஞானிகளையும் ஆர்க்டிக் பிரதேசத்தில் குவித்துள்ள கனடா, தனக்கான ஆதாரங்களை தயாரிக்கும் பணியில் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளது.

கனடாவின் திட்டத்தை உடனடியாகப் புரிந்து கொண்ட ரஷ்யா, ஆர்க்டிக் பிரதேசத்தில் தனது பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அப்பகுதியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறு தனது ராணுவத் துறைக்கு அதிபர் புதின் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சர்வதேச அளவில் பரப்பளவில் ரஷியா முதலிடத்திலும், கனடா இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இது விஷயத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை அமெரிக்கா விரைவில் அறிவிக்க இருக்கிறது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆர்க்டிக் பிரதேசத்தில் வருவதால் அமெரிக்காவும் அங்கு பெரும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடி களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கெனவே புவி வெப்பமயமாதல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் சூடேறி வரும் ஆர்க்டிக் பிரதேசத்தில், இப்போது சர்வதேச நாடுகளின் அரசியல் நடவடிக்கைகளால் புதிய பனிப்போர் தொடங்கியுள்ளது.

இறுதியாக பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து நாடுகளுமே அங்குள்ள பெட்ரோலிய வளத்தை பங்கிட்டுக் கொள்ள ஒப்புக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த ஆர்க்டிக் ஆதிக்கப் போட்டியில் வெல்லப்போவது யாராக இருந்தாலும், அழியப் போவது இங்குள்ள சுற்றுச்சூழல்தான் என்பது கிரீன் பீஸ் அமைப்பினரின் எதிர்ப்புக் கோஷமாக உள்ளது. ஆர்க்டிக் பிரதேசத்தில் பெட்ரோலியத்தை தோண்டி எடுப்பதால் இப்பகுதியில் ஏற்படும் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும், அதன் தொடர் விளைவுகளால் உலகுக்கு ஏற்படும் தீங்குகளையும் சுட்டிகாட்டி கிரீன் பீஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதனை எந்த வல்லரசும், நல்லரசும் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. என்ன விலை கொடுத்தும் அங்குள்ள எண்ணெய் வளத்தை அடைந்தே தீருவது என்ற நோக்குடன் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக உலகை மாற்றும் நாசவேலை கூடுதல் வேகமெடுத்துள்ளது என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in