

தன்னுடைய படம் ‘மார்ஃபிங்’ செய்து ஆபாசமாக வெளியிடப்பட்டதை அவமானமாகக் கருதி தற்கொலை செய்துகொண்டுள்ளார் ஒரு பெண்.
மிகுந்த துயரத்துடன் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெற்றோர், உற்றோர், சுற்றத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தச் சமயத்தில் சமூக நலம் கருதி ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது: ‘மார்ஃபிங்’கில் சுலபமாக யாரையும் எப்படியும் சித்தரித்துவிடலாம் என்னும்போது அதை எப்படி அவமானமாகக் கருத முடியும், ஏன் கருத வேண்டும்?
இறந்தவருக்காக இரங்கல் தெரிவிப்பது, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவது, குற்றவாளியையும் பொறுப்பற்ற காவல்துறை அதிகாரிகளையும் தண்டிப்பது ஆகிய அத்தியாவசிய நடைமுறைகளைத் தாண்டி ஒன்றை நாம் உணர வேண்டும்.
ஒருவர் உடலை ரகசிய கேமராக்கள் மூலம் படம் எடுத்து வெளியிட்டால் படம் எடுத்தவரும், பார்ப்பவரும்தான் அவமானப்பட வேண்டும்; அந்த உடலுக்கு உரியவர் அவமானப்பட வேண்டிய அவசியமில்லை; ஏனெனில் உடல் இயற்கையானது.
அது போன்ற படங்கள் வெளியானால் அதனால் அவமானப்பட வேண்டியதில்லை என்ற எண்ணத்தினை உருவாக்க வேண்டியதும் மிக அவசியமாகும். இல்லாவிட்டால் கொலை செய்ய அரிவாளையோ கத்தியையோ எடுத்துக்கொண்டு ரயில் நிலையம் போகின்ற பொறுக்கிகூட கம்ப்யூட்டரில் போட்டோ ஷாப்பிலேயே வேலையை முடித்துவிடுவான்.