புரட்சி என்பது பொதுமக்களின் திருவிழா!

புரட்சி என்பது பொதுமக்களின் திருவிழா!
Updated on
2 min read

மெல்லிய தென்றல் சில தருணங்களில் உள்ளங்களில் பெரும் புயல்களைக் கிளர்த்துவது உண்டு. இதன் எதிர்நிலையும் சாத்தியம்தான் போலும்! தமிழக இளைய சமுதாயத்தின் பேரெழுச்சி மனதைத் தென்றலாய்த் தீண்டுகிறது. உலகம் கண்டிராத மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை அவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பான விவாதத்துக்குள் இந்தக் கட்டுரையில் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த எழுச்சி, பொதுப்புத்தியில் எவ்வாறு பார்க்கப்படுகிறது, அதற்கும் இந்த எழுச்சியின் பின் காணப்படும் புதிய தலைமுறை உளவியலுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை நாம் அறிய முனைய வேண்டும்.

இப்போராட்டத்தை நடத்தும் மாணவர்கள் ஊடகங்களிடம் பேசும்போது, “அரசியல் தலைவர்கள் யாரும் வர வேண்டாம், நடிகர்/நடிகைகள் வர வேண்டாம்” என்று கூறினார்கள். அப்படி வந்த அரசியல் கட்சித் தலைவர்கள் எவரையும் அவர்கள் அனுமதிக்கவும் இல்லை. இது, “அரசியலே மோசம்; அதனால் அரசியலே வேண்டாம்” என்ற பார்வையில்தான் பார்க்கப்படுகிறது. நான் இதை அவ்வாறு பார்க்கவில்லை.

வேறுபாடுகள் கடந்த நிலை

ஒரு பொதுப் பிரச்சினை சார்ந்து, பொதுவான எழுச்சி ஏற்படும்போது, இதுபோன்ற கட்சி சார்பற்ற தன்மை, மக்களைப் பெருவாரியாகத் திரட்டுவதில் முக்கியப் பங்களிப்பாற்றுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல், ஒரு கட்சி சார்பு இருக்கலாம். ஆனால், அந்த வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து இப்போது ஒன்றுபட்டு நிற்கிறார்கள். “காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பதிலும் மத்திய அரசு தட்டிக்கழித்தது. ஜல்லிக்கட்டு தடையிலும் தட்டிக்கழிக்கிறது” என்று அவர்கள் கூறுவதில் முற்றிலும் அரசியல் இல்லை என்று கூற முடியுமா? லட்சக்கணக்கில் திரண்டுள்ள மாணவர்கள், இளைஞர்களில் ஒருவருக்குக்கூட அரசியல் சார்போ, கட்சி சார்போ இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. அதனால், இதனை அரசியல் நீக்கம் என்பதைவிடக் கட்சி சார்புகள் நீக்கம் என்பதாகவே பார்க்கிறேன்.

அடுத்து, இதில் மாணவிகள், இளம் பெண்களின் பங்கேற்பும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. அதேபோல, இப்போராட்டங்களில் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். அதைவிட இந்த எழுச்சியை மூலதனமாக்கி, அவர்களிடையே அன்னா ஹசாரேக்களை, கேஜ்ரிவால்களை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கவில்லை என்பதும் முக்கியமானது.

தன்னியல்பான எழுச்சி

இப்படியொரு மாபெரும் எழுச்சி தன்னியல்பாக எழுவதன் சாத்தியங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. சில அதிகார மையங்களோ, அரசியல் சக்திகளோ தூண்டிவிடுவதால் மட்டும், உடன்பாடில்லாத ஒரு கருத்துக்காக லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள் என்றும் கூற முடியாது. காலம் காலமாக உள்ளே கொதித்துக்கொண்டிருந்து, அதன் உச்சநிலையில் தற்போது வெடித்திருக்கிறது. ஒரு நாலாயிரம், ஐயாயிரம் ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ஒரு இனத்தின் அடையாளத்துடன் தொடர்புடைய உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்பட்டுவந்ததால் ஏற்பட்ட கோபக்கனலின் திரட்சி வெளிப்பாடே இது. தனித்த பண்பாடுகள் மீது ஒற்றைத்தன்மை கொண்ட பண்பாட்டினைத் திணிப்பதற்காக மேற்கொண்டு வரப்பட்ட பண்பாட்டு அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியாகும் இது.

சமீபகால வரலாற்றை உற்றுநோக்கினால், ஆங்காங்கு நடைபெற்ற கிளர்ச்சிகளில் இதன் ஊற்றினைக் காண முடியும். மே 17 இயக்கத்திலிருந்து கடந்த பெருமழை வரை பல சந்தர்ப்பங்களில் இதே இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டதைக் கண்டு வந்துள்ளோம். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இளைஞர்களின் உளவியலைக் கவனித்தால், அந்த உளவியலில் தலைமுறை இடைவெளி காணப்படுவதையும் உணர முடியும். அதாவது, முந்தைய தலைமுறை இளைஞர்கள் தங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகத் தங்களது விருப்பங்கள், தேர்வுகளைப் பலி கொடுத்தனர். பெற்றோரின் வர்க்கக் கூச்சம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய தலைமுறை இளைஞர்கள் தாமே முடிவெடுக்கத் தலைப்படுகின்றனர்.

இளைஞர்களின் தனிப் பாதை

புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பின் சூழ்ந்துள்ள சமூகப் பாதுகாப்பற்ற நிலை அவர்களைச் சிந்திக்க வைத்துள்ளது. இந்தப் புதிய தலைமுறைக்கு, முந்தைய தலைமுறைபோல அறுபது வயது வரை வேலைவாய்ப்பு கிடையாது. ஓய்வூதியம் கிடையாது. அதிகபட்சம் 40 வயதுக்குள் தங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டிய நிலையில், ஒவ்வொன்றையும் தாமே முடிவுசெய்ய வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர். தம்முடைய படிப்பு, வேலை, திருமணம் எல்லாவற்றிலும் தாமே முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் அவர்கள், தமக்கான அரசியல் முடிவுகள் மீதும் இப்போது தமக்கான பங்கிருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த உளவியலே மே 17 இயக்கம் முதல் கடந்த பெருமழை வரை தம்மைச் சுற்றிக் கடுமையான சூழல் நிலவியபோதெல்லாம் அவர்களை வெளியே கொண்டுவந்தது. இந்தப் பிரக்ஞை நிலை பரவலாக்கத்துக்கு அவர்கள் முழுவதும் நவீன தொலைத்தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தியது கண்கூடானது.

அவர்கள் எந்த அரசியல் கட்சித் தலைமையையும் பின்பற்றவில்லை. தமக்கென ஒரு தலைமையை உருவாக்கிக்கொள்ளவும் இல்லை. இது ஒரு நிறுவனமாக உருவாவதையும் அவர்கள் விரும்பவில்லை. தங்களுக்கு எந்த அரசியல் கட்சியோ, நிறுவனங்களோ ஆதரவளிப்பதையும் ஏற்கவில்லை. நம்முடைய இன்றைய அரசியல் அமைப்பில் உள்ள கசப்பான இடங்களை இத்தகைய போராட்டங்கள் துல்லியமாகவே வெளிப்படுத்துகின்றன. முக்கியமாக, நகர்மயமாக்கல் அதிகரித்துவரும் சூழ்நிலையில், இளைய சமுதாயத்தின் பார்வை கிராமப்புறம் நோக்கித் திரும்பியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கடைசியாகக் கூற வருவது என்னவென்றால், நீண்ட காலமாக வறண்டு கிடந்த அரசியல் நிலத்தில் குறிஞ்சி பூத்ததுபோல இளைஞர்கள் பூத்துக் குலுங்குகின்றனர். அவர்கள் பிரபல வாதத்தின் பின் செல்கிறார்கள், இதையும் கொண்டாட்டமாகப் பார்க்கிறார்கள் என்று அரசியல் கட்சிகள் புறணி பேசுவதில் எந்த அர்த்தமுமில்லை. புரட்சி என்பது பொதுமக்களின் திருவிழாதான். இவர்கள்தான் நம்முடைய நாளைய சமூகம். அவர்களின் உளவியலைப் புரிந்து கொள்வது உடனடித் தேவை. முகத்தைத் திருப்பிக்கொண்டிருக்காமல் அவர்களோடு கலந்துரையாடி, மக்களுக்கான அரசியலை அவர்களிடத்தில் கொண்டுசேர்ப்பதே அரசியல் பேசுவோர் முன்னுள்ள பெரும் பணி! செய்வீர்களா?

- அப்பணசாமி, ஊடகவியலாளர்.
‘கொடக்கோனார் கொலை வழக்கு’ நாவல் ஆசிரியர்.
தொடர்புக்கு: Jeon08@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in