Last Updated : 12 Nov, 2014 09:55 AM

 

Published : 12 Nov 2014 09:55 AM
Last Updated : 12 Nov 2014 09:55 AM

வண்ணத்துப்பூச்சி மூலதனத்துக்கு வந்தனம் சொல்கிறார் மோடி

காப்பீட்டுத் துறைக்கு மூலதனத்தைவிட அதன் நோக்கங்களே முக்கியமானவை.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 24-ல் தொடங்குகிறது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான மசோதா இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி 2008-ல் கொண்டுவந்த மூல மசோதாவில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு (எப்.டி.ஐ.) 49%-க்கு உயர்த்தப்படும் என்று இருந்தது. புதிய பாஜக அரசோ 49% வரம்புக்குள் அந்நிய முதலீட்டாளர்களையும் உள்ளடக்கலாம் என்ற திருத்தத்தோடு முன்மொழிந்துள்ளது.

கடந்த காலங்களில், காப்பீட்டுத் துறைக்குள் அந்நிய நேரடி முதலீடாக வந்த அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி., ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே இந்திய இணைவினைகளிலிருந்து வெளியேறிவிட்டன. மலரில் தேன் வற்றிவிட்டால், வேறு மலர் தாவும் வண்ணத்துப் பூச்சி போன்று தங்காத முதலீடுதான் அந்நிய நேரடி முதலீடு. ஊக வணிகம் மூலம் அது நடத்தும் சூதாட்டத்தையும், லாபம் சற்றுக் குறைந்தாலே நாட்டை விட்டு ஓடி, சரிவை ஏற்படுத்துவதையும் இந்தியப் பங்குச் சந்தைகளில் காண்கிறோம்.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் ஏறுவதற்கு 136 நாட்கள்கூட எடுத்ததுண்டு. ஆனால், 1,000 புள்ளிகள் வீழ்வதற்கு ஒரே ஒரு நாள் போதுமானதாக இருந்ததும் உண்டு. இந்த சகுனி ஆட்டத்துக்கு முக்கியக் காரணியாக அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பல நேரங்களில் இருந் திருக்கிறார்கள். அதே நேரத்தில் பங்குச் சந்தை சரியும் போது, அரசாங்கம் அலாரம் அடித்தால் உடனே சந்தைக்குள் சென்று சரிவை நிறுத்தும் பணியை எல்.ஐ.சி. செய்துவந்திருக்கிறது.

இப்படி நிலையற்ற வண்ணத்துப்பூச்சி மூலதனத்துக்குத்தான் வந்தனம் சொல்கிறார் மோடி. இதுதான் இந்திய மக்களின் சேமிப்புகளுக்கு அவர் தரும் உத்தரவாதமா?

‘மேக் இன் இந்தியா’

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்தியாவுக்குள் குறைந்தபட்சம் 5 முதல் 7 பில்லியன் டாலர் வரை அந்நிய முதலீடுகள் வரும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறுகிறார். ஆனால், காப்பீட்டுத் துறைக்கு மூலதனத்தைவிட அதன் நோக்கங்களே முக்கியமானவை என்பதை ஜேட்லி கருத்தில் கொள்ள வேண்டும். எல்.ஐ.சி-யின் மூலதனம் ரூ. 100 கோடி. அது, 2012-13- ல் திரட்டிய மொத்த பிரிமிய வருவாய் ரூ. 2,08,804 கோடி.

இந்தியாவில் காப்பீட்டு இணைவினையில் ஈடுபட்டுள்ள ‘ஏகோன் ரெலிகேர்’ நிறுவனத்தின் மூலதனம் (காப்புகள் உள்ளீட்டு) ரூ. 1,200 கோடி. ஆனால், அதன் மொத்த பிரிமியத் திரட்டலோ ரூ. 431 கோடிதான். மூலதனத்துக்கும் வணிகத்துக்கும் குறிப்பிடத் தக்க தொடர்பு எதுவும் காப்பீட்டுத் துறையில் கிடையாது என்பதை இதுபோன்ற தகவல்கள் நிரூபிக்கவில்லையா! ‘அந்நிய முதலீடுகள் தேவை’ என்கிற அரசின் வாதம் இந்தப் புள்ளிவிவரங்களின் முன்பு நொறுங்கிப்போகிறது.

‘மேக் இன் சீனா’

அந்நிய நேரடி முதலீடுகள் இந்திய நலனுக்கு உதவுமேயானால், அதை வரவேற்பதில் தவறில்லை. ஆனால், இந்தியாவில் உருவாகும் மூலதனம்கூட இங்கு தங்காமல் ‘மேக் இன் அமெரிக்கா’, ‘மேக் இன் சீனா’என்று ஓடுவது ஏன் என்பதே கேள்வி. மோடியின் ‘மேக் இன் இந்தியா’முழக்கம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகக் கூறிய டாட்டா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி, ரூ. 10,700 கோடி முதலீட்டில் தனது ஜாக்குவார் லேன்ட் ரோவர் முதல் தொழிற்சாலையை சீனாவில் கடந்த அக்டோபரில் தொடங்கியுள்ளார்.

அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் டெக்ஸ்டைல்ஸ் ரூ. 240 கோடியில் குஜராத்தில் திட்டமிட்டிருந்த முதலீட்டை அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்துக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறது.

கூண்டுக் கிளிகள்

ஐ.ஆர்.டி ஏ. போன்ற கண்காணிப்பு ஆணையங்கள் இருப்பதால் அச்சம் தேவையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.அமெரிக்காவின் மிகப் பெரிய நிதிநிறுவனமான ‘லாங் டெர்ம் கிரெடிட் மேனேஜ்மென்ட்’ (எல்.டி.சி.எம்) வீழ்ச்சி அடைந்தபோது, அதன் ஆலோசகர்களாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்கள் இருந்தார்கள். இந்தியப் பங்குச் சந்தையில் ஹர்ஷத் மேத்தா மோசடி நடந்தபோது ‘செபி’என்கிற பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையம் இல்லை. ஆனால், ‘செபி’ உருவாக்கப்பட்ட பின்னரும் கேதன் பரேக் மோசடி நடக்கவில்லையா? கட்டுப்பாட்டு ஆணையங் களெல்லாம் சர்வ வல்லமை படைத்தவை அல்ல. ஆட்சியாளர்களின், பொருளியல் கட்டமைப்பின் கூண்டுக் கிளிகள்தானே அவையெல்லாம்?

அண்மையில், பி.ஏ.சி.எல். என்கிற மிகப் பெரிய கட்டுமான நிறுவனம், அங்கீகாரமற்ற திட்டங்கள் வாயிலாக ஏப்ரல் 1, 2012-க்கும் பிப்ரவரி 25, 2013-க்கும் இடையில் மட்டும் ரூ. 49,100 கோடியைத் திரட்டியுள்ளதாக செபி நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால், 5.85 கோடி வாடிக்கையாளர்களிடம் 11 மாதங்களாக இவ்வளவு தொகை திரட்டப்பட்டதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க செபிக்கு 18 மாதங்கள் பிடித்திருக்கிறது.

காப்பீட்டுத் துறை மசோதாவிலேயே, தப்பிப்பதற்கு ஏதுவாகச் சில ஓட்டைகள் விடப்பட்டிருக்கின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் திறக்கப்படும் நிறுவனங்களுக்கு தேசியச் சட்டங்களில் தளர்வுகள் உண்டு. இந்த மண்டலங்கள் ‘நாட்டுக்குள் நாடு' என்கிற அந்தஸ்தோடு இருப்பதால் 49% வரையறைகள்கூட காற்றில் பறக்க விடப்படும். எனவே, நிபுணத்துவமும் கட்டுப்பாட்டு ஆணையங்களும் கடிவாளங்களாகச் செயல்படும் என்பது பகற் கனவே!

கைகேயியின் இரண்டாவது வரம்

தனியார் காப்பீட்டு நிறுவனங்களில்தானே அந்நிய முதலீட்டு வரம்பு உயரப்போகிறது; இதனால், பொதுத் துறை நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு என்று கேட்பவர்கள் உண்டு. இந்த மசோதாவில் உள்ள ஒரு பேராபத்தைக் கூர்மையாகச் சுட்ட வேண்டியுள்ளது. பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு வழிசெய்யும் அம்சமே அது.

எல்.ஐ.சி-யின் பங்கு விற்பனைக்கும் 2008-ல் முன் மொழியப்பட்ட எல்.ஐ.சி. சட்டத் திருத்த மசோதா மூலம் முயற்சி செய்தார்கள். அதில், எல்.ஐ.சி-யின் அரசுத் தன்மையை நீர்த்துப்போகச் செய்தல், அதற் குள்ள அரசு உத்தரவாதத்தைப் பறித்தல் போன்ற அபாயங்கள் இருந்தன. ஆனால், தொழிற்சங்கங்களின் தொடர் இயக்கங்கள் காரணமாகவும், மக்கள் கருத்து திரட்டப்பட்டதாலும் அந்த அம்சங்கள் கைவிடப்பட்டு, 2012-ல் சட்டமாக்கப்பட்டது.

எனவே, ஒரு துறையில் அந்நிய முதலீட்டின் பிரவேசம் அதிகரிக்க வேண்டுமெனில், பொதுத்துறையை அந்தத் துறையிலிருந்து ‘சற்றே விலகியிரும்' என்று சொல்வது உலகமயப் பாதையின் பொதுவிதி. எனவே, 49% ஆக அந்நிய முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டாலும் அது முடிவல்ல. 74% ஆக மேலும் உயர அது எத்தனிக்கும். இன்னொரு புறம் பொதுத் துறையை நோக்கிக் கத்தியையும் வீசும்.

ராமாயணத்தில், கைகேயி பரதன் நாடாள வேண்டும் என்கிற ஒரு வரத்தோடு நின்றுவிடவில்லை. ராமன் நாட்டில் இருந்தால் மக்கள் பரதனை நாடாள விட மாட்டார்கள் என்பதால், ராமன் 14 ஆண்டு வனவாசம் போக வேண்டுமென்ற இரண்டாவது வரத்தையும் கேட்டாள். கைகேயியின் ‘ராணி தந்திரமே' இன்றைய உலகமயத்தின் தாரக மந்திரம். அந்நிய முதலீடு “வருது... வருது...” என்றால், பொதுத் துறையை “விலகு... விலகு...” என்கிறார்கள். அரசியலில் ராம பக்தர்களாக உள்ளவர்கள், பொருளாதாரத்தில் ‘காப்பீட்டுத் துறை ராமனுக்கு வனவாசம்: அந்நிய முதலீட்டுக்கு அரியாசனம்’ என்கிறார்கள்!

- க. சுவாமிநாதன்,
தென்மண்டலக் காப்பீட்டுத் துறை ஊழியர்
கூட்டமைப்பின் பொதுச் செயலர்,
தொடர்புக்கு: swaminathank63@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x