மாணவர் ஓரம்: பாராலிம்பிக்கின் தந்தை!

மாணவர் ஓரம்: பாராலிம்பிக்கின் தந்தை!
Updated on
1 min read

பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகள் ஞாயிறு அன்று நிறைவுபெற்றன. ஆகஸ்ட் மாதம் நடந்த ஒலிம்பிக் போட்டிகளைவிட பாராலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு அதிகப் பதக்கங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. மாற்றுத் திறனாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்த நிகழ்வு இது. பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டவர்களில் பலர், லுட்விக் குட்மேனின் பெயரை ஒரு கணமேனும் நன்றியுடன் நினைத்திருப்பார்கள். மாற்றுத் திறனாளிகளுக்காகத் தனியாக ஒரு ‘இணை ஒலிம்பிக்’ போட்டிகள் நடக்க வழிவகுத்தவர் அவர். ஜெர்மனியில் வாழ்ந்த யூதரான குட்மேன், புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர்.

ஹிட்லரின் நாஜிப் படைகளின் அடக்கு முறைகளிலிருந்து தப்பி, பிரிட்டனுக்குச் சென்ற அவர், பக்கிங்ஹாம்ஷைரில் ஸ்டோக் மாண்டிவில் மருத்துவமனையைத் தொடங்கினார். முதுகுத்தண்டில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தார். அந்த நிலையில் இருப்பவர்களில் பலர் நம்பிக்கையின்மையாலும் சரியான பராமரிப்பு இல்லாமலும் உயிரிழந்த நிலையில், தனது துணிச்சலான அணுகுமுறை மூலம் சிறப்பான சிகிச்சையளித்தார் குட்மேன். அதற்கு அவர் பயன்படுத்தியது விளையாட்டு. சக்கர நாற்காலியில் இருந்தபடியே ஈட்டி எறிதல், கூடைப் பந்து போன்ற விளையாட்டுகளில் கலந்துகொண்ட நோயாளிகள் உடலிலும், மனதிலும் பலம் பெற்றனர்.

1948-ல் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய அதே நாளில், அவரது மருத்துவமனை வளாகத்தில் வில் வித்தை, ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. சக்கர நாற்காலிகளுடன் நோயாளிகள் அதில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். அவரது முயற்சியின் காரணமாக, 1960-ல் முதன்முதலாக பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கின. சக்கர நாற்காலியில் அமர்ந்த மாற்றுத் திறனாளிகள் மட்டுமே பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டனர். 1976-ல்தான் வேறு உடல்குறை மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொள்ளத் தொடங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in