

ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதும்போது சில ஒலிகளைத் தமிழில் எழுதவே முடியாது. Thanks-ல் உள்ள A ஒலியைப் போல. சில ஒலிகளை வேறு வேறு விதங்களில் எழுதலாம். Inch, Punch, Lunch முதலான சொற்களில் உள்ள N ஒலியைப் போல. இவை இன்ச், பன்ச், லன்ச் எனவும் இஞ்ச், பஞ்ச், லஞ்ச் எனவும் எழுதப்படுகின்றன.
N என்னும் சொல் வருவதால் ன் என்னும் எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் எனச் சிலர் கருதுகிறார்கள். இதே தர்க்கம் Ink, Pink ஆகிய சொற்களுக்குப் பொருந்தாது. இங்கும் N உண்டு. ஆனால், அது ங் என்பதாக எழுதப்படுகிறது. N என்னும் ஒரே எழுத்து இரண்டு இடங்களில் இரண்டு விதங்களில் எழுதப்படுவதற்குப் பொருத்தமான காரணம் ஏதாவது உள்ளதா?
க, ச, ட, த, ப, ற ஆகிய வல்லின எழுத்துக்களுக்குப் பக்கத்தில் வரும் எழுத்தைக் குறித்துதான் இத்தகைய ஐயங்கள் வருகின்றன.
இந்தச் சொற்களைப் பாருங்கள்: இங்கு, பஞ்சு, கண்டு, பந்து, வம்பு, இன்று. இந்தச் சொற்களை உன்னிப்பாகக் கவனித்தால், க, ச, ட, த, ப, ற ஆகிய வல்லின எழுத்து ஒவ்வொன்றும் தனக்கு அடுத்து வரும் மெல்லின எழுத்தின் மெய்யெழுத்து வடிவத்தையே தனக்கு முன் ஏற்கிறது. வேறு மெல்லின எழுத்தை ஏற்பதில்லை (உ-ம்:பங்கு, தந்தம்). பங்து என்றோ, கம்கு என்றோ மன்சள் என்றோ வருவதில்லை. ஒரு வல்லினம் தனக்கு அருகில் இல்லாத மெல்லின எழுத்தை ஏற்று அமையும் சொல் ஏதும் இல்லை. இதன் அடிப்படையில், மஞ்சள், தஞ்சம், பஞ்சு என்பன போன்று இஞ்ச், பஞ்ச் என எழுதுவதே பொருத்தமானகத் தோன்றுகிறது.
ங் - க -, ஞ் – ச, ந் - த முதலான ���ணைகள் உருவான விதத்தையும் கவனிக்க வேண்டும். இந்த இணைகளை உச்சரித்துப் பாருங்கள். ங, க ஆகிய இரண்டும் ஒரே இடத்திலிருந்து உருவாகின்றன. அதுபோலவே ஞ - ச, ண - ட, ந - த, ம - ப, ன - ற ஆகிய இணைகளின் ஒலிகளும் ஒரே இடத்திலிருந்து உருவாகின்றன. எனவே இவை இணைந்து வருகின்றன. எனவே ன் – ச ஆகியவற்றை இணைப்பதற்குப் பதிலாக ஞ் - ச ஆகியவற்றை இணைப்பதே தமிழ் ஒலிப் பண்புக்கு இயல்பானது.
எனவே, ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய இயல்பான இணைகளை அடியொற்றி இஞ்ச், பஞ்ச் என எழுதலாம்.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in