Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

தமிழ் வளர்ப்பு - பாரதி விடுத்த கோரிக்கை

[ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின் புதிய நூல்கள்]

அன்பர்களே,

ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின் தமிழ் புதுமை, தெளிவு, முதலிய பல குணங்களுடையதாய்த் தமிழ்நாட்டில் எல்லா ஜனங்களாலும் மிகவும் அன்புடனும் ஆதரவுடனும் போற்றப்பட்டு வருகிறதென்ற விஷயம் உங்களுக்குத் தெரியாததன்று.

இவர் இயற்றிய “ஞானரதம்” என்ற கதையைப் பற்றி எழுதுகையில், மிகவும் கீர்த்திபெற்ற ஆசிரியராகிய மஹேச குமார சர்மா, இதைப்போல் அற்புதமான கதை தமிழ் பாஷையில் வேறு கிடையாதென்று சொல்லுகிறார். அங்ஙனமே ஸ்ரீமான் பாரதி இயற்றிய “கண்ணன் பாட்டு” முதலிய நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்தியிருக் கும் “தேசபக்தன்” உதவிப் பத்திராதிபராகிய ஸ்ரீமான் நெல்லையப்பபிள்ளை நமது பாரதியாரைத் தெய்வீகப் புலவரென்றும், தமிழ்நாட்டின் தவப்பயனென்றும், ஜீவன் முக்தரென்றும் கொண்டாடுகிறார். இவர் நூல்களில் ஏற்கெனவே வெளிப்பட்டிருக்கும் பகுதிகளைப் படித்தவர்களனைவரும் மேலே காட்டிய வியப்புரைகளை எளிதில் அங்கீகாரம் செய்வார்கள்.

பூமண்டல நிறைந்த கீர்த்தி

ஆனால் இவருடைய கீர்த்தி தமிழ்நாட்டில் மாத்திரமே பரவியிருப்பதாக நினைத்துவிடக் கூடாது. இவருடைய பாட்டுக்கள் பல தெலுங்கு பாஷையில் மொழிபெயர்க்கப்பட்டு ஆந்திர தேசத்தா ரால் கொண்டாடப்படுகின்றன. ஐர்லாந்து தேசத்து மஹா கவிகளில் ஒருவரும், ஜப்பான் தேசத்தின் ராஜதானியாகிய டோக்யோ நகரத்திலுள்ள Imperial University (இம்பீரியல் யூனிவர்ஸிடி) என்ற ஸாம்ராஜ்ய ஸர்வ கலா ஸங்கத்தில் இங்கிலீஷ் ஆசிரிய ராக விளங்கியவருமாகிய ஜேம்ஸ்-எச்- கஸின்ஸ் (James H. Cousins) என்பவர் இவருடைய தமிழ் பாட்டுக்கள் சிலவற்றை இங்கிலீஷில் மொழிபெயர்த்து மேல்நாட் டார் வியப்புறும்படி செய்திருக்கிறார். மேலும், மேற்படி கஸின்ஸ் என்ற வித்வான் 1916 டிஸம்பர் 8-ஆம் தேதியன்று பிரசுரமான “காமன்வீல்” பத்திரிகையில் வெர்ஹேரன் (Verhaeren) என்ற பெல்ஜியம் தேசத்துக் கவிச் சக்ரவர்த்தியைப் பற்றி எழுதியிருக்கும் நீண்ட வ்யாஸத்தினிடையே மேற்படி வெர்ஹேரனையும் நம் இந்தியா தேசத்துப் புலவர் சிலரையும் சீர் தூக்கிப் பார்க்குமிடத்தே பின்வருமாறு சொல்லுகிறார்:-

[“The Seeing eye apprehends Beauty not only in the thing seen but through it; and the more faithfully the thing is seen as channel and symbol, the more certainly will both it and the seer be dignified, not degraded. Verhaeren came within sight of imaginative freedom; but it is in the poetry of Tagore and Naidu, Ghose and Bharati, and their spiritual comrades of the Irish School that the purest and truest expression of realized Beauty can be found”:-]

இதன் பொருள் பின்வருமாறு:

“ஒரு வஸ்துவின் புறத்தே காணப்படும் ஸௌந்தர்யத்தை மட்டுமன்றி அதனை ஊடுருவிப் பார்த்து (அதில் மறைந்துகிடக் கும்) உள்ளழகையும் உணரும் சக்தி ஞான திருஷ்டிக்குரியதாகும். புறத்தோற்றம் வெறுமே வாய்க்கால் போன்றது; வெறும் அடையாளமென்பதை ஒரு புலவன் எத்தனைக்கெத்தனை தெளிவாகக் காண்கிறானோ, அத்தனைக்கத்தனை அந்த வஸ்துவுக்கும் அந்தப் புலவனுக்கும் அதிக மஹிமையேற்படும். இங்ஙனம் விமோசனம் படைத்த ஞானதிருஷ்டி யெய்தும் பருவத்தை வெஹ்ஹெரன் கவி மிகவும் நெருங்கிவந்தார். ஆனால் ரவீந்த்ரநாத் டாகுர், ஸரோஜினி நாயுடு, அரவிந்த கோஷ், சுப்பிரமணிய பாரதி, இவர்களுடைய கவிதையிலும், இவர்களைப் போன்ற ஞானத் தெளிவு கொண்ட ஐரிஷ் கவிஞர் சிலரின் கவிதையிலேயுந் தான் ஸௌந்தர்ய தெய்வத்தைப் ப்ரத்தியக்ஷமாகக் கண்டு, அதை உண்மையாகவும் சுத்தமாகவும் உணர்த்தும் சக்தி காணப்படுகிறது” என்கிறார்.

இங்கனம் கீர்த்தி வாய்ந்த கவியரசர் ஒருவர் தமிழ் நாட்டில் இருப்பது நமக்கெல்லாம் சால மிகப் பெருமையன்றோ? இவர் தமிழ் நாட்டையும் தமிழ் பாஷையையும் மேம்படுத்தியதற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? எனினும், இவருக்கு நாம் செலுத்த வேண்டிய கடமையில் ஒரு சிறிதளவு செலுத்துவதற்குரிய சந்தர்ப்பம் இப்போது வாய்த்திருக்கிறது. அது யாதெனில் சொல்லுகிறேன்.

ஸ்ரீமான் பாரதியார் பன்னிரண்டு வருஷம் ப்ரிட்டிஷ் இந்தியாவை விட்டுப் புதுச்சேரி யில் வன வாஸம் செய்துகொண்டிருந்தார். அந்தக் காலத்தையெல்லாம், அவர் அங்கு வீணே கழிக்கவில்லை. ஏராளமான நூல்க ளெழுதிக் குவித்துக்கொண்டிருந்தார்.

பாரதியார் நூல்களை அச்சடிக்கிற மாதிரி அவற்றையெல்லாம் இப்போது அச்சிடப் போகிறார். அவற்றை 40 புஸ்தகங்களாகப் பிரித்து ஒவ்வொரு புஸ்தகத்திலும் 10000 பிரதிகள் அச்சிட உத்தேசித்திருக்கிறார். 40X10000 (நாற்பதைப் பத்தாயிரத்தால் பெருக்கும் போது) 4 லக்ஷம் சுவடிகளாகின்றன. இந் நான்கு லக்ஷம் புஸ்தகங்களும் தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக ஸாதாரணமாகவும், அதிக விரைவாகவும், விலைப்பட்டுப் போகுமென்பதில் சிறிதேனும் ஸந்தேகத்துக்கிடமில்லை. இங்ஙனம் நிச்சயமாக அறிந்துகொள்ள எத்தனையோ காரணங்களிருக்கின்றன. இவற்றுள் முக்யமான சில காரணங்களை இங்கு குறிப்பிடுகிறேன்.

முதலாவது:- இந் நூல்களிலே பெரும் பகுதி வசன நூல்கள்; நேர்த்தியான, ஆச்சர்யமான, ரஸமான, வாசிக்க வாசிக்கத் தெவிட்டாத கதைகளடங்கிய வசன கிரந்தங்கள்; மிகவும் தெளிவான, இனிய, எளிய, தமிழ் நடையில் குழந்தைகளுக்குக் கூட நன்றாக விளங்கும்படி எழுதப்பட்டன. எனவே இந் நூல்கள் லக்ஷக் கணக்காக விலையாகுமென்பதில் ஸந்தேஹமில்லை.

இரண்டாவது:- தமிழ் நாட்டிலும் தமிழர் சென்று குடியேறியிருக்கும் வெளித் தீவுகளி லும், தமிழ் வாசிப்பவரின் ஜனத்தொகை நாளுக்கு நாள் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாகப் பெருகிக்கொண்டு வருகிறது.

மூன்றாவது:- இந்த நூல்கள் அச்சிடப்படும் மாதிரியே இவை ஏராளமாக விலைப்படுவதற்கொரு ஸாதனமாகும். அமெரிக்கா, ஐரோப்பா கண்டத்துப் பதிப்புகளைப் போல் நேர்த்தியாகவும் மனோரம்யமாகவும் நல்ல காயிதத்தில், தெளிவான எழுத்துக்களில், தெளிவாகப் பதம் பிரித்து ஆச்சர்யமான தகுந்த சித்திரங்கள் பதிப்பித்து வெளியிடுவதால், இந் நூல்கள், ஜனங்களுக்குள்ளே மிகுந்த வியப்பையும், பிரியத்தையும், விளைவித்து லக்ஷக் கணக்காக விலையாகுமென்பதில் ஸந்தேஹமில்லை.

நான்காவது:- ஏழை, எளியவர், உட்பட, ஸகல ஜனங்களும் வாங்கும்படி இவற்றின் விலை மிகவும் குறைவாக ஏற்படுத்தப்படும். சராசரி ஒரு புஸ்தகத்தின் விலை அரை ரூபாய்.

ஐந்தாவது:- “கீழ்த்திசை முன்னேற்றம் பெறக்கடவது. புனர் ஜன்மம் எய்தக் கடவது” என்று கால சக்தி விதித்திருக்கிறது. “தமிழ்நாடும் ஆசியாவின் பகுதியாதலால், இதற்கும் அந்தப் புனர் ஜன்மம் உண்டு. இப் புனர்ஜன்மத்தை ஏற்படுத்துவதற்கு ஸ்ரீமான்-சுப்பிரமணிய பாரதியின் நூல்களே தகுந்த கருவிகளாவன. ஆதலால், தெய்வ பலத்தைக் கருதுமிடத்தேயும் இந் நூல்கள் லக்ஷக் கணக்காக விலையாகுமென்பது தெளிவாக விளங்குகிறது.

ஆறாவது:- -ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியாருக்குத் தமிழ் நாட்டில் நிகரற்றுயர்ந்த கீர்த்தி ஏற்பட்டிருக்கிறது. இவர் நூல்களை வாங்காமல் ஜனங்கள் யாருடைய நூல்களை வாங்கப் போகிறார்கள்? இந்த நூல்கள் மிகவும் நீண்ட பக்ஷம் 2 வருஷங்களில் விலையாகிவிடும். அதற்குள்ளேயே இரண்டாம் பதிப்புக்களுக் கும் புதிய நூல்களுக்கும் வேண்டுதல் ஏற்படுமென்பது மிகவும் நிச்சயம்.

வரவு செலவு கணக்கு

இவற்றை இவர் விரும்புகிறபடி அச்சிட 20000 ரூபாய் பிடிக்கும். விளம்பரச் செலவு 10000 ரூபாய். மேற்படி 30000 ரூபாய்க்கு மாஸம் 1-க்கு 2 ரூபாய் வீதம் இரண்டு வருஷத்து வட்டி ரூபாய் 14,400. ஆக மொத்தம் செலவு ரூபாய் 44,000.

புஸ்தகம் ஒன்றுக்கு அரை ரூபாய் வீதம் மொத்தப் புஸ்தகத்துக்கு வரவு ரூபாய் 2-லக்ஷம். ஆகவே, மிச்ச லாபம் ரூபாய் 156000. ஒன்றரை லக்ஷத்தாறாயிர ரூபாய் ஸித்தமாகக் கிடைக்கிறது. இத்தனை நல்ல லாபம் கிடைப்பதை உத்தேசித்தே ஸ்ரீமான்-பாரதியார் மாஸம் 1-க்கு ரூபாய் 2-வீதம் வட்டி கொடுக்கத் துணிந்தார்.

பிரார்த்தனை

இதற்குத் தாங்களும் தங்கள் நண்பர்களும் தலைக்குக் குறைந்தபக்ஷம் ரூ.100-வீதம் இயன்ற தொகை கடனாகவேனும் இனாமாகவேனும் கொடுத்துதவும்படி பிரார்த்திக்கிறேன். இனாமாகக் கொடுப்போர் ஸ்ரீமான் பாரதியாரால் மேன்மேலும் நடத்தப்படும் தமிழ் வளர்த்தலாகிய மஹா புண்ணிய கர்மத்திற்குப் பொருள்கொடுத்து, எக்காலத்திலும் அழியாத புண்ணியமடைவார்கள். கடனாகக் கொடுப்போர்க்கு அங்ஙனமே உயர்ந்த புண்ணியம் கிடைப்பதுடன் மிகவும் லாபகரமான வட்டியும் கிடைக்கிறது. கடன் கொடுப்போர்க்கு ஆறு மாஸங்கழித்தவுடன் மாஸந்தோறும் வட்டி கொடுக்கப்படும். முதலும் வட்டியும் இரண்டு வருஷ காலத்தில் முழுதும் கொடுத்துக் கணக்குத் தீர்த்து விடப்படும். கீர்த்தியை விரும்புவோருக்கு இதில் கீர்த்தியும் கிடைக்கும். உத்தம கார்யம். எந்த வகையில் யோசித்தாலும் செய்யத் தக்கது.

தாங்களும் தங்கள் நண்பர்களும் அனுப்பக்கூடிய தொகையை உடனே மணியார்டர் செய்தனுப்புங்கள். கீழே ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின் விலாஸம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருடைய விலாஸத்திற்குப் பணம் அனுப்பினால் அவர் கடனாகக் கிடைக்குந் தொகைகளுக்கு ஒரணா ஸ்டாம்பு ஒட்டிக்கடன் பத்திர மெழுதிக் கையெழுத்துச் சார்த்தி உங்களுக்கனுப்புவார். தகுந்த லாபம் கிடைக்கும். ஸமயத்தை மதி மயக்கத்தாலே தவற விட்டுவிடாதீர்கள்!

அன்பர்களே, உடனே, உடனே, உடனே, தத் தம்மால் இயன்ற தொகைகளை அடியிற் கண்ட ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியாரின் விலாசத்துக் கனுப்புங்கள். உங்களுக்கு மஹாசக்தி அமர வாழ்க்கை தருக.

உங்களன்பு மிக்க

காரியதரிசி,

தமிழ் வளர்ப்புப் பண்ணை, சென்னை.

(ரா. அ. பத்மநாபன் பதிப்பித்து, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘சித்திர பாரதி’ நூலிலிருந்து.)

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x