

பாலஸ்தீனப் பிரச்சினை இந்த ஆண்டும் பரவலாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017 இறுதியில்கூட பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடியப்போவதில்லை. இவ்விஷயத்தில் தீர்வு காண்பதற்காக உலக நாடுகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கப்போகின்றன. அதேசமயம், இந்த முறை வெளியுறவு தொடர்பான விஷயங் களை விட, பாலஸ்தீனத்தின் உள்விவ காரங்களே பிரதானமாகப் பேசப்பட விருக்கின்றன.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) தலைவரும், பாலஸ்தீன அதிபருமான மஹ்மூத் அப்பாஸ் சுட்டிக் காட்டியிருப்பதுபோல், கடந்த நவம்பரில் வெற்றிகரமாக நடந்த ஃபடா மாநாடு, முக்கியப் பதவிகளில் ஏற்படப்போகும் மாறுதல்களையும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டிருக்கும் மேம்பாட்டையும் எடுத்துக்காட்டியது. ஒருகாலத்தில் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக்கொண்ட இந்த இரு அமைப்புகளும் தற்போது நட்புடன் நடந்துகொள்வது, இந்த மாநாட்டின்போது தெளிவானது.
மாநாட்டின்போது அதிபர் அப்பாஸும் ஹமாஸ் தலைவர் காலேத் மெஷாலும் வெளிப்படையாக நகைச்சுவையான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தும், சமரச நடவடிக்கைகளில் இணைந்து பணிபுரிவதை உறுதிசெய்யும் வகையிலும் ஹமாஸ் பொலீட்பிரோ தலைவர் செய்தி அனுப்பியிருந்தார். தனது உரையின்போது நான்கு முறை ஹமாஸ் பற்றி குறிப்பிட்டுப் பேசினார் அதிபர் மஹ்மூத் அப்பாஸ்.
இந்த நல்லிணக்கம் தொடர்கிறது எனில், இதற்கு முன்னர் மெக்கா, கெய்ரோ நகரங்களில் கையெழுத்தான சமரச ஒப்பந்தங்களை அமல்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இரு அமைப்புகளுக்கும் இடையிலான சமரசப் பணிகள் நடைபெறுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் அவை.
தேசியக் கூட்டு அரசை உருவாக்குவது, இரு தரப்புக்கும் இடையிலான சமரச நடவடிக்கைகளில் ஒன்று. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சட்டமியற்றும் பிரிவான பாலஸ்தீன தேசிய கவுன்சில், ஹமாஸ் அமைப்புடன் கலந்து பேசி ஒன்றுபட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை உருவாக்குவதும், இறுதியாக நாடாளுமன்ற, அதிபர் தேர்தல்களைச் சந்திப்பதும் இந்த சமரச முயற்சிகளில் அடக்கம்.
மூன்று மாதங்களுக்குள் பாலஸ்தீன தேசிய கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றாக வேண்டும் என்று, ஃபடா மாநாட்டின் தீர்மானங்களின் அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கிடையே பிரதமர் ராமி ஹம்தல்லா தலைமையிலான அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக ஏற்கெனவே வதந்திகள் பரவத் தொடங்கி விட்டன.
பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி (பி.எஃப்.எல்.பி.), ஜனநாயக முன்னணி (டி.எஃப்.), மக்கள் கட்சி (பி.பி.) ஆகிய கட்சிகளுடன் சுயேச்சை அமைப்பு களும் பங்கேற்கவிருக்கும் கூட்டு அரசு இன்னும் சில வாரங்களில் அல்லது மாதங்களில் உருவாக்கப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கணித்திருக்கிறார்கள்.
இஸ்லாமிய இயக்கத்தால் முன்மொழியப் படும் சுயேச்சை வேட்பாளர்கள் ஹமாஸ் அமைப்பின் சார்பில் நிறுத்தப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தப் புதிய அரசு அமைந்தவுடன் தேர்தலுக்குத் தயாராவது அதன் அடுத்த நடவடிக்கையாக அமையும்!
இத்தனை மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில், பாலஸ்தீனத் தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறை வதற்குப் பெரிய வாய்ப்புகள் இல்லை. இஸ்ரேல் பிரதமர் பதவியில் பெஞ்சமின் நெதன்யாஹு தொடரும் நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த விஷயத்தில் பெரிய முன்னேற்றங்கள் நடப்பதற்கு வாய்ப்பு குறைவுதான்!
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்