Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

சமூக உணர்வுள்ள ஆன்மிகம்

பாரதியாருக்கு மட்டும் இறைவன் எப்படித் தோழன் ஆனான்? சேவகன் ஆனான்? காதலன் ஆனான்? ஆன்மிகத்தை நோக்கிய தன் பயணத்தை எந்த முடிச்சிலிருந்து பாரதி தொடர்ந்தான்?

கோரிக்கைகள்

பாரதியும் எல்லோரையும் போல இறையை நோக்கி வரங்கள் கேட்கிறான், சொத்துசுகங்கள் கேட்கிறான், வீடுவாசல் கேட்கிறான். இறை பக்தியைக் குறித்த சமூகத்தின் பொதுப்பார்வை, பொதுக்கருத்து, பொதுத்தேவை என்னவோ அதெல்லாம் அவனிடமும் இருந்தன. அதனால் காணிநிலம் வேண்டும் என்று கேட்கிறான். ஆனால், மற்றவர்கள் அந்தக் கோரிக்கையோடு நின்றுவிடுவார்கள்; இவன் கவிஞன் என்பதால், இன்னும் பல அடிகள் இறையை நோக்கி நடந்து செல்கிறான். காணி நிலத்திடையே மாளிகையும் கட்டித்தரத் தன் கோரிக்கையை நீட்டுகிறான். தென்னைமரம், குயிலோசை, இளந்தென்றல், நிலவொளி (அதுவும் முத்துச்சுடர்போல இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை வேறு) என்று வரைமுறை இல்லாமல் கேட்கிறான். அப்போதும் தீர்ந்துபோகாத அவனுடைய ஆசையில் பாட்டுக் கலந்திட ஒரு பத்தினிப்பெண் வேண்டும் என்றும் விண்ணப்பிக்கிறான். ஒரு இறையிடம் வைக்கக்கூடிய கோரிக்கை(யா) இது! சாமி கோபப்பட மாட்டாரா? தன் பக்தன் இந்த மாதிரி வேண்டுதல்களுக்கெல்லாம் தன்னைப் பிரார்த்திக்கிறானே (இம்சிக்கிறானே) என முகம் சுளிக்க மாட்டாரா?

பாரதி அதைக் கவனத்தில் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. பாரதிக்கான இந்த இறை நாட்டம் கொஞ்சம் சிக்கலான விவகாரமாக இருக்கிறது. அதுவும் அவன் வாழ்ந்த காலத்தின் சமூகக் கருத்தோட்டத்தைக் கணக்கிட்டால், இதெல்லாம் ரொம்பவும் அதிகபட்சமானதாகும். அவனும் ஏதோ ஒரு ‘மயக்க’த்தில் இதைப் படைத்திருந்தால் அந்த மட்டோடு அவன் நிறுத்திக்கொள்ளவும் இல்லை. வேறு சமயங்களில் இதற்கு முன் யாரும் கேட்டிராத வரங்களை அவன் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொள்வதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறான்.

பயபக்தி

இந்தக் காலத்தில் நாம் கண்டும் கேட்டும் வரும் ஆன்மிகத் தன்மையிலிருந்து பாரதியின் இறைபக்தி மாறுபட்டிருக்கிறது. அவன் ஏன் அப்படி இருந்தான் என்று சிறிது நேரமாவது நாம் கருதிப்பார்க்க வேண்டிய நெருக்கடி உண்டாகிறது.

நம்முடைய குழந்தைகளின்மீது நாம் திணிக்கும் இறைபக்தியின் முதல் வடிவம் ‘பயபக்தி’யிலிருந்து தொடங்குகிறது. பாரதி பல இடங்களில் பக்தி என்று சொல்கிறான். பயம் என்ற சொல்லும் பக்தி என்ற சொல்லும் தனித்தனியானவை. நம் ஆன்மிகக் கலாச்சாரத்தில் வெகு நீண்ட காலமாகப் பயபக்தி என்ற சொல் பலமாக உறைந்துகிடக்கிறது. இந்தப் படிமத்துக்கு ஏற்ற வகையில் சமூகத்தின் செயல்பாடுகள் இல்லை. இது ஒரு முக்கிய அம்சம். பயமும் பக்தியும் கலந்த மக்களிடம் சுயநலமும் வன்முறை எண்ணங்களும் ஓங்கிநிற்பது ஏன்? உலகம் ரத்தச் சேற்றில் புரண்டுகொண்டிருப்பதும் சாதி சமய அரசியல் பேதங்களால் நொறுங்கிக்கொண்டிருப்பதும் இந்த பயபக்தியின் விளைவுகளா? இருக்கலாம். ஆன்மிகவாதிகள் இந்தக் கேள்வியை அபத்தம் என்று ஒதுக்கலாம். ஆனால், பாரதியின் இறைநோக்கை முன்வைத்தால் பயபக்தி பற்றிய இந்தக் கேள்வி முக்கியமானது. அதை விவாதிக்காமல் தீராது.

நூறாண்டுகளுக்கு முற்பட்ட பாரதி தனித்தன்மை வாய்ந்த கவிதைகளை ஒரு முன்மாதிரி இல்லாமல் சுயமாக வடித்துக்கொண்டவன்; அதைப் போலவே அரசியல், சமூகம், பகுத்தறிவு, பெண்ணிய விழிப்புணர்வுகளிலும் தனக்குத் தானே உருவாகிக்கொண்டவன். இதே போக்கில் ஒரு கவிஞனாக இறைத் தேடலில் தனக்கெனத் தனிவழியை தீர்க்கதரிசனத்துடன் உருவாக்கியிருக்கிறான். அவனுடைய பக்திக் கவிதைகள், பக்தி இயக்கக் காலக் கவிதைகளிலிருந்து துண்டித்துக்கொண்டவையாக இருப்பதை இப்போது கண்டுணர முடியும்.

சமூகத்தை விடாத ஆன்மிகம்

பாரதி மற்றவர்களின் பக்தி வடிவத்தை நிராகரித்ததற்கு அவன் சமூகத்தின் மீது கொண்ட கருணையும் பொதுமைநோக்கும் காரணமாக இருந்துள்ளன. அவன் தனக்கான தேவைகளை மகாசக்தியிடம் அல்லது வேறு கடவுளர்களிடம் இறைஞ்சும்போது தன் சமூகத்துக்கான பிரார்த்தனையாகவும் முன்வைத்து மன்றாடுகிறான். “அஞ்சி யஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லையே… இவர் துயர்களைத் தீர்க்க வழியிலையே” என்று மனம் புலம்பும் நிலைக்கும் ஆளாகிப் பரிதவிக்கிறான். அவனுடைய எல்லாக் கவிதைகளிலும் இது ஒரு அடிநாதமாக இழையோடிக்கொண்டிருப்பது தற்செயலானதல்ல! சமூகத்தின் மீது தீராத பற்றும் அளவிடற்கரிய அன்பும் கொண்ட ஒரு மனிதனால் கடவுளைத் தன் ஆன்மிகத் தேடலுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியாது என்பதற்கு பாரதி ஒருவனே முன்னத்தி ஏர். இந்தக் காரணத்தால்தான், அவன் கவிதைகளில் அவ்வளவு எளிமையும், புத்துயிர் பெற்ற வார்த்தைகளும், நவநவமான கற்பனைகளும் வெள்ளம்போலப் புரண்டுவந்தன. சமூகத்தை முன்நிறுத்தாத, மக்களின் நல்வாழ்வை யாசிக்காத ஒரு கவிதையைக்கூட பாரதியிடம் நாம் காண முடியாது.

பாரதி தன் கடவுளை அணுகியதில் உள்ள வேறுபாட்டைக் காண வேண்டுமென்றால், முன்னுள்ள காரணங்களை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். அதன் வழியாக, கடவுளை பயத்தின் அடிப்படையில் அவன் அணுகாமல் அன்பின் வழியே துய்க்கிறான். முஸ்லிம்களின் வேதமான திருக் குர்ஆன் இறைவனை அளவற்ற அருளாளன் எனவும் நிகரற்ற அன்புடையவன் என்றும் அடையாளப்படுத்துகிறது; அன்பே சிவம் என்கிறது சைவ நெறி. இவற்றை பாரதி தெளிவாக உணர்ந்திருப்பவன். அதனால், அவன் கடவுளை பயபக்தியுடன் அணுக மறுக்கிறான். தன் துயர நிலையை உயிருக்குயிரான நண்பனிடம் சொல்லி உரிமையுடன் கேட்பதுபோல் கேட்கிறான். ‘நல்லதோர் வீணை செய்தே’பாடலில் அந்த உரிமை கோரலைக் காண முடியும். “சொல்லடி சிவசக்தி” என்று மகாசக்தியை விளிக்கும்போது, அது நம் குடும்பத்தில் மட்டும் புழங்கும் சொல்லாக இருக்கிறது. பல வரங்களையும் பட்டியலிட்டுவிட்டுக் கடைசியாக அவன், “இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ”என்று பெற்ற தாயைவிட அதிக உரிமை எடுத்துக் கேட்கிறான். இது உரிமையுடன் சேர்ந்த அன்பு. கடவுளிடம் இத்தகைய நெருக்கத்தை நாம் நடைமுறையில் கொள்வதில்லை. ‘பேதை நெஞ்சே’ கவிதையிலும் இந்நிலை தொடர்கிறது. “செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்./ சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்” என்று தன் ஆங்காரக் குரலை ஒலிக்கவிடுகிறான். அப்படியே தன் நெஞ்சை நோக்கி

‘‘கேட்டது நீ பெற்றிடுவாய், ஐயமில்லை” என உறுதிகூறுகிறான்.

இதுபோன்ற பக்தி நிலை அவன் தன் சமூக நோக்கினால் பெறுவது. நாடு, மக்கள் எனத் தன் சிந்தனையை விட்டகலாத பேரன்பால் அவனுக்கு இந்த வரம் கிடைத்தது. கண்ணனைத் தாய், தந்தையாகவும் பாடுகிறவன் தோழனாகவும் சேவகனாகவும் கருதி அழைத்திருப்பதும் வேறு எதனால் என்று நினைக்கிறீர்கள்?

- களந்தை பீர்முகம்மது, தொடர்புக்கு: peermohamed.a@kslmedia.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x