Last Updated : 08 Oct, 2013 11:56 AM

 

Published : 08 Oct 2013 11:56 AM
Last Updated : 08 Oct 2013 11:56 AM

மக்கள் போராடினால் எல்லாம் சரியா?

தெலங்கானா உறுதியாகிவிட்டது. பல்லாண்டுகால மக்கள் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. இன்றைக்கு தெலங்கானா பிரிவினையை எதிர்த்து எழுத முற்படுவது வெகுஜன விரோதம். அரசியல் அப்படிக் கட்டமைத்திருக்கிறது. அதனாலேயே எழுதாமல் இருக்க முடியாது.

மக்கள் போராட்டங்கள் சரியா என்று கேட்டால், எல்லாக் காலகட்டங்களிலும் சரி என்ற பதிலே வரலாற்றிலிருந்து கிடைக்கிறது; அதே சமயம், இந்தப் போராட்டங்களினூடே அவர்கள் முன்வைக்கும் தீர்வுகள் சரியா என்று கேட்டால், சரி - தவறு என்கிற பதில்களுக்குமே வரலாற்றில் இடம் உண்டு. இன்னும் சொல்லப்போனால், சரியான தீர்வுகள் மக்களிடமிருந்து வரவில்லை; தொலைநோக்குள்ள தலைவர்களிடமிருந்தே வந்திருக்கின்றன - அப்படிப்பட்ட தீர்வுகளும் வெகுஜன எதிர்பார்ப்புக்கு முரணாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன என்னும் பதிவுகளே அதிகம்.

இந்திய ஒன்றியத்தின் ஆணிவேர்

இந்தியா என்றால், பன்மைத்தன்மை. பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மரபுகள்... உலகில் இப்படி ஒரு தேசம் நீடிக்க முடியுமா என்ற கேள்வி நூற்றாண்டுப் பழமையானது. இந்தக் கேள்வியை உலுத்துப்போகச் செய்ததில் முக்கியமான பங்கு மொழிவழி தேசிய இனங்களை அங்கீகரிக்கும் வகையில் மாநிலங்கள் நிர்மாணிக்கப்பட்டதற்கு உண்டு.

இப்படிப்பட்ட பல்வேறு இனங்கள் கலந்த ஒரு தேசத்தைக் கட்டியமைக்கும்போது, உலகின் பார்வை இருந்த விதம் வேறு. மிகச் சிறந்த உதாரணம் ரஷ்யாவின் ஸ்டாலின். "ஒரே சமயத்தில் பல மொழிகளைப் பேசும் எந்த தேசமும் நீடித்துச் செயல்பட முடியாது" என்று உறுதியாகச் சொன்னார் அவர். சோவியத் ஒன்றியத்தில் ரஷ்ய மொழி கட்டாயமாக்கப்பட இதுவே காரணம். சோவியத் ஒன்றியம் சிதறக் காரணமாக இருந்த தேசிய இனங்களின் போராட்டங்களுக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக அமைந்தது இது.

இந்தியாவையும் அப்படிப்பட்ட ஒருமைத்தன்மை கொண்ட - 'இந்து, இந்தி, இந்தியா' - தேசமாகக் கட்டியமைக்கவே இங்குள்ள ஆதிக்கச் சக்திகள் விரும்பின. நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், "பன்மைத்தன்மை பிளவை வளர்க்கிறது. ஒருவரைத் தமிழராகவோ மகாராஷ்டிரராகவோ வங்காளியாகவோ பார்ப்பது நாட்டின் வல்லமையைக் குழிதோண்டி புதைக்கும். நாம் அனைவரும் இந்துக்கள்; ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்பதே நம் கொள்கையாக அமைய வேண்டும்" என்று செல்லும் இடங்களில் எல்லாம் வெளிப்படையாகவே முழங்கினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர்.

எது இந்த நாட்டை ஒருங்கிணைக்கும் என்பதை காந்தி உணர்ந்திருந்தார். 1920-களிலேயே காங்கிரஸ் மொழிவழி தேசிய இனங்களை அங்கீகரிக்கும் காந்தியின் குரலை எதிரொலித்தது. "இந்தியாவின் அத்தனை பிராந்தியங்களையும் இந்துஸ்தானி ஆள்வது அபத்தம். மொழிவழி மாநிலங்கள் அமைவதே நம்மிடையேயான சகோதரத்துவம் மேலும் வலுப்பெற உதவும்" என்றார். நேருவும் அதையே விரும்பினார். மராத்தியர்களுக்கு என பம்பாயை உள்ளடக்கிய மகாராஷ்டிரம் வேண்டும் என்று குரல் கொடுத்த அம்பேத்கருக்கும்கூட அந்த எண்ணம் இருந்தது.

இந்திய சுதந்திரத்தையொட்டி நடந்த பிரிவினைக் கலவரங்களோ எல்லோரையும் மாற்றி யோசிக்க வைத்தது. காந்தி, நேரு, படேலில் தொடங்கி எல்லோருமே மொழிவாரி மாநிலங்களைப் பிரிப்பது தேசத்தின் பிளவுக்கு வழிவகுக்குமோ என்று அஞ்சினார்கள். இந்தி ஆதிக்கத் தலைவர்கள் மொழிவழி மாநிலங்கள் பிரிவினையைக் கைவிடச் சொல்லி வலியுறுத்த இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

ஆந்திரம் இட்ட தீ

இந்தியாவை மொழிவழி மாநிலப் பிரிவினையை நோக்கி அடியெடுத்துவைக்கச் செய்தது தெலுங்கு பேசும் மக்கள்தான். பிரிட்டிஷார் ஆட்சியில் இருக்கும்போதே தெலுங்கு மக்களின் ஒற்றுமைக்காகக் கட்டமைக்கப்பட்ட 'ஆந்திர மஹா சபா' தெலுங்கர்கள் மிகத் தீவிரமான இயக்கங்களை முன்னெடுக்கப் பின்னணியில் இருந்தது. முதல்வர் டி.பிரகாசத்தின் விலகல்; மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த சுவாமி சீதாராமின் ஐந்து வார உண்ணாவிரதம், சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு பேசும் மக்கள் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி இடங்களைக்கூட வெல்ல முடியாத வகையில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்வி, எல்லாவற்றுக்கும் மேல் 58 நாள் உண்ணாவிரதத்தோடு போன பொட்டி ஸ்ரீராமலுவின் உயிர், அதையொட்டி நடந்த பெரும் போராட்டங்கள் - கலவரங்கள்... இவ்வளவுக்குப் பிறகுதான் நாட்டின் முதல் மொழிவழி மாநிலமாக 1953-ல் கர்னூலைத் தலைநகராகக் கொண்டு உருவானது ஆந்திரப் பிரதேசம்.

ஒரு வகையில், இந்தியாவின் மொழிவழி மாநிலங்கள் பிரிவினையின் தாய் ஆந்திரம்; தந்தை பொட்டி ஸ்ரீராமலு. ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் மொழிவழி மாநிலக் கோரிக்கைகளோடு உருவான பெரும் போராட்டங்கள் மாநில மறுசீரமைப்பு ஆணையத்துக்கு வழிவகுத்தன. நீதிபதி எஸ்.ஃபாஸில் அலி, வரலாற்றியலாளர் கே.எம்.பணிக்கர், ஹெச்.என்.குன்ஸ்ரு மூவரும் அடங்கிய இந்த ஆணையம் 18 மாதங்கள் கடுமையாக உழைத்தது. நாட்டின் 104 நகரங்களுக்குச் சென்று, 1,52,250 கோரிக்கை மனுக்களைப் பெற்று 16 மாநிலங்கள் மூன்று ஒன்றிய பிரதேசங்களுக்குப் பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைகளோடு, நேரு செய்த சில மாறுதல்களோடு அமைக்கப்பட்டவையே மொழிவழி மாநிலங்கள்.

ஒரு விஷயத்தில் மிகத் தெளிவான பார்வையை நேரு கொண்டிருந்தார். பொதுவாகவே இந்தியா - இந்தி இரண்டும் சேர்த்துப் பார்க்கப்பட்ட காலகட்டம் அது என்பதால், இந்தி பேசும் பெரும் பகுதிகளான பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் தவிர ஏனைய மொழிவழி மாநிலங்களின் பிரிவினை நல்லதல்ல என்பதே அது.

இந்திய மாநிலங்கள் மொழிவழியில் பிரிக்கப்பட்டது மிகப் பெரிய வரலாற்றுத் தவறாக அமையும் என்றே மேற்கத்தியர்களும் ரஷ்யர்களும் கருதினார்கள். ஆனால், பல தேசிய இனங்களின் கூட்டாகத் தொகுக்கப்பட்ட இந்தியா என்கிற தேசத்தின் பன்மைத்தன்மைக்கும் அந்தந்தச் சமூகங்களின் தனித்தன்மைக்கும் அற்புதமான அடிநாதமாக இன்றைக்கு மொழிவழியில் அமைக்கப்பட்ட மாநிலங்களே திகழ்கின்றன.

தெலங்கானா வரலாறு

இன்றைய ஆந்திரம் என்பது ராயலசீமா, கடலோர மாவட்டங்கள், தெலங்கானா பகுதி ஆகியவற்றின் தொகுப்பு. ஆந்திரம் ஒரு மாநிலமாக உருவெடுத்தபோது, இப்போதைய தெலங்கானா பகுதி அதன் ஓர் அங்கமாக இருக்கவில்லை. ஐதராபாத் சமஸ்தானத்தில் நிஜாம் உஸ்மான் அலி கான் ஆட்சியின் கீழ் இருந்தது. காட்டாட்சியும் அடிமை முறையும் வியாபித்திருந்த சமஸ்தானம் அது. ஒருபுறம் கம்யூனிஸ்ட்டுகள் நிஜாமுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், தனி ராஜ்ஜியம் நடத்த முயன்ற நிஜாம் அரசு மீது படைகளை அனுப்பி இந்திய ஒன்றியத்துடன் இணைத்தது நேரு அரசு.

1948-ல் நடந்த இந்த இணைப்பின்போதே தனி தெலங்கானாவை மக்கள் விரும்பினார்கள்; மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரை அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தது என்பது உண்மை. ஆனால், அது இன்றைக்குக் கட்டமைக்கப்படும் அளவுக்கு நேரு அரசு ஏதோ தெலங்கானா மக்களுக்கு துரோகம் இழைத்து வலுக்கட்டாயமாக நடத்திய இணைப்பாக இருக்கவில்லை என்பதும் உண்மை. நிஜாமின் கொடுமையான ஆட்சியிலிருந்து வெளியேறி இந்திய ஒன்றியத்தில் இணைந்ததே பெரும்பான்மை மக்களுக்கு அப்போது புது விடியலாகத் தோன்றியது. ஐதராபாதைப் புதிய தலைநகரமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஆந்திரத்தில், தெலங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில் கொண்டு இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகாரப் பகிர்வு, நிதிப் பகிர்வுகளை உறுதிசெய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு உருவாக்கப்பட்டது.

இந்த இடத்தில் தெலங்கானா மக்களின் சமூக வாழ்வின் பின்னணியைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். சாதவாகனர்கள், காகதியர்களின் பேரரசுகள் ஆண்ட பிரதேசமான இன்றைய தெலங்கானா பகுதி, 14-ம் நூற்றாண்டில் தில்லி சுல்தான்கள், பின்னர் பாமனி, குதுப் சாஹி மற்றும் மொகலாயப் பேரரசு ஆட்சிகளின் கீழ் வந்தது. 18-ம் நூற்றாண்டில் அசஃப் ஜாஹி வம்சத்தின் ஆட்சிக்குப் பின் இந்தியாவுடன் இணையும் வரை ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டிப் பிழைப்பு நடத்தும் நிஜாம்களின் அரசாட்சியின் கீழேயே இருந்தது. காட்டாட்சி என்பதால், கல்வியிலும் சமூக வாழ்விலும் இப்பகுதி மக்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பின்தங்கிய நிலையில் இருந்தனர். ஏழ்மை, வறுமை ஆகிவற்றோடு கல்வியறிவின்மையும் சேர்ந்த இவர்கள் மீது தனி கவனம் செலுத்தி, மேம்படுத்தியிருக்க வேண்டியது புதிய ஆட்சியாளர்களின் கடமை. அப்படி நடக்கவில்லை. தனி தெலங்கானா கோரிக்கையுடன் 1969, 1972 ஆண்டுகளில் நடந்த போராட்டங்களைக் கொடூரமாக ஒடுக்கியது மத்திய அரசு. பல ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்த தனி மாநிலக் கோரிக்கைக்கு, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இடம் கொடுத்து, உயிர் கொடுத்தது பா.ஜ.க. தொடர்ந்து காங்கிரஸும் அதே வழியில் செல்ல, எதிர்ப்புகளைக் கடந்து, பெரும் போராட்டங்களின் நடுவே தெலங்கானாவுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது இந்திய அரசு.

வளர்ச்சி சார்ந்து தெலங்கானா மக்கள் பின்தங்கி இருக்கிறார்கள்; பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்; அவர்களுடைய போராட்டங்களில் நியாயம் இருக்கிறது; அவர்களை முன்னோக்கி நகர்த்த நடவடிக்கைகள் வேண்டும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. அதே சமயம், இந்தப் போராட்டங்கள் முன்வைக்கும் தனி மாநிலத் தீர்வு எந்த அளவுக்குச் சரியானது?

சிறிய மாநிலங்கள் தீர்வா?

இந்தியாவில் இதுவரை பிரிக்கப்பட்ட மாநிலங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் தரவுகள் அப்படிச் சொல்லவில்லை.

கடந்த 2004-05 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில் கல்வி வளர்ச்சி விகிதம் பிகாரில் 59% ; அங்கிருந்து பிரிந்த ஜார்க்கண்டில் 40%. மத்தியப் பிரதேசத்தில் 34%; அங்கிருந்து பிரிந்த சத்தீஸ்கரில் 24%; உத்தரப் பிரதேசத்தில் 44%; அங்கிருந்து பிரிந்த உத்தராகண்டில் 22%.

பொருளாதார வளர்ச்சி விகிதம் பிகாரில் 11% ; அங்கிருந்து பிரிந்த ஜார்க்கண்டில் 6%. மத்தியப் பிரதேசத்தில் 9%; அங்கிருந்து பிரிந்த சத்தீஸ்கரில் 9%; உத்தரப் பிரதேசத்தில் 7%; அங்கிருந்து பிரிந்த உத்தராகண்டில் 16%.

இதே காலகட்டத்தில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாடுவோரின் விகிதத்தின் அடிப்படையிலான மாநிலங்கள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளவை சத்தீஸ்கரும் ஜார்க்கண்டும். ஆக, ஆளும் ஆட்சியாளர்களைப் பொறுத்தே மாநிலங்கள் வளர்ச்சி இருக்கிறது.

மாநிலங்கள் அமைப்பு என்பது ஒருவகையில் அதிகாரப் பகிர்வு - இன்னொரு வகையில் ஊழல் பகிர்வு. சிறிய மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின் நடக்கும் உள்கட்டுமானப் பணிகளில் ஆயிரக் கணக்கான கோடிகளைப் பெருநிறுவனங்களால் அள்ள முடியும். உள்ளபடி சிறிய மாநிலங்கள் பிரிக்கப்படத் தொடங்கியதிலிருந்து இதுவரை நடந்திருக்கும் 'பெரிய சாதனை' ஜார்க்கண்ட் போன்ற ஒரு சிறிய மாநிலம் உருவானதால், மது கோடா போன்ற ஒரு சாமானியர் ரூ. 4000 கோடி ஊழல் செய்ய முடியும் என்று நிரூபித்திருப்பதுதான்.

போராட்டங்களின் சூட்சமம்

இதுவரை வளர்ச்சியின் பெயரால், எந்த மாநிலம் பிரிக்கப்படும்போதும் இந்தியா இவ்வளவு பெரிய இருவேறு போராட்டங்களைச் சந்தித்ததில்லை. ஆந்திரம் சந்திக்கிறது. ஏன்? அரசியல் - வியாபார சுய லாபக் கணக்குகள். உண்மையில் தெலங்கானா ஆதரவு - எதிர்ப்பு இரு தரப்பு போராட்டங்களையும் பின்னின்று இயக்குவது இந்தக் கணக்குகள்தான்.

ஒன்றுபட்ட ஆந்திரத்தின் வளங்களில் பெரும் பகுதி தெலங்கானா பகுதியில் இருக்கிறது. முக்கியமாக, காடுகளில் 45%. காடுகள் சார்ந்த கனிம வளங்கள் (நாட்டின் மொத்த நிலக்கரி வளத்தில் ஐந்தில் ஒரு பங்கு தெலங்கானாவில் இருக்கிறது). இந்த வளங்களைச் சூறையாடுவது எந்த மாஃபியா - சீமாந்திரா மாஃபியாவா; தெலங்கானா மாஃபியாவா - என்கிற லாபிதான் இன்றைய போராட்டங்களைத் தீர்மானிக்கின்றன.

அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டைப் பார்த்தால், ஓர் ஆச்சரியம் கிடைக்கும். காங்கிரஸ், பா.ஜ.க. மட்டும் அல்ல; மாவோயிஸ்ட்டுகளும்கூட தெலங்கானாவை விரும்புகிறார்கள். என்ன கணக்கு இது?

நேரு காலத்து காங்கிரஸ் ஒன்றுபட்ட ஆந்திரத்தை விரும்பியிருக்கலாம். சிங் காலத்து காங்கிரஸுக்கு பிளவுபட்ட மாநிலங்களே வசதி. பன்னாட்டு நிறுவனங்கள் எங்குமே ஒருங்கிணைந்த சமூகங்களை விரும்புவதில்லை. எது முதலீட்டுக்கு உகந்ததோ, அதுவே சந்தைக்கு உகந்தது. எது சந்தைக்கு உகந்ததோ, அதுவே முதலாளிகளுக்கு உகந்தது. எது முதலாளிகளுக்கு உகந்ததோ அதுவே அரசுக்கு உகந்தது - இந்த விஷயத்தில் காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் வேறுபாடு இல்லை. சரி... மாவோயிஸ்ட்டுகள் கணக்கு?

இந்தியாவில் கம்யூனிஸப் போராட்டங்களுக்கான தொடக்கக் காலக் களங்களில் ஒன்று இன்றைய தெலங்கானா. 1946-1951 இடைப்பட்ட காலத்தில் இங்கு நடந்த விவசாயிகள் புரட்சி இன்னமும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுக்கான உந்துசக்தி. இன்னும் மாவோயிஸ்ட்டுகளைப் பொறுத்த அளவில் ஒருவகையில் அது தாய் நிலம். அங்கிருந்து உருப்பெற்ற படைதான் பிரதமரின் வார்த்தைகளில், 'இந்தியாவின் மாபெரும் அச்சுறுத்தல்' ஆக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அந்த இயக்கத்தின் ஆணி வேர் முப்பால லட்சுமண ராவ் (எ) கணபதி, முக்கிய தளபதிகள் பலமுரி நாராயண்ராவ், மல்லா ராஜு ரெட்டி, வேணுகோபால், கதரி சத்யநாராயண ரெட்டி, புல்லுரி திப்பரி திருப்பதி யாவரும் தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இன்றைக்கு தண்டகாரண்யத்தின் அடர்ந்த காடுகளில் ஆட்சி நடத்தும் மாவோயிஸ்ட்டுகள் தெலங்கானா அமைந்தால், மீண்டும் அது தங்கள் களமாகும் என்று நம்புகிறார்கள்.

தெலங்கானா விதைக்கும் விதை

இந்தியாவில் இதுவரை பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இல்லாத ஒரு முக்கியத்துவம் தெலங்கானாவுக்கு உண்டு. இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களைத் தாண்டி, மொழிவழி அல்லாது பிரிக்கப்படும் முதல் மாநிலம் தெலங்கானா. எங்கே மொழிவழி மாநிலங்களுக்கான முதல் விதை விழுந்ததோ, அங்கேயே முதல் பிளவு. தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும் வலிமைக்கும் பெரும் கேடு இது.

இனி, தெலங்கானா மக்களின் முதல் எதிரி யார்? சக தெலுங்கர்கள். யாரை எதிர்த்து அவர்களின் பிரதான அரசியல் நகரும்? ஆந்திரத்தை நோக்கி. கிருஷ்ணா நீராதாரத்தில் 69%, கோதாவரி நீராதாரத்தில் 45% தெலங்கானாவில் இருக்கிறது; காலங்காலத்துக்கும் இரு மாநிலங்களும் அடித்துக்கொள்ள இது போதுமானது. கற்பனைசெய்து பாருங்கள்... திருச்சிக்காரர்களும் நாகப்பட்டினம்காரர்களும் பிரிந்து அரசியல் நடத்தும் கூத்தை. எங்கிருந்து வரும் ஒரே மொழி, ஒரே இனம் எனும் எண்ணமும் ஒற்றுமையும்?

அணிவகுக்கும் பிளவுகள்

தெலங்கானாவைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 20 தனி மாநிலக் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கியிருக்கின்றன. உத்தரப் பிரதேசத்திலிருந்து பூர்வாஞ்சல், ஹரீத் பிரதேசம், புந்தேல் கண்ட், பச்சிமாஞ்சல், அவத்; மேகாலயத்திலிருந்து காரோலாந்து; பிகாரிலிருந்து மிதிலாஞ்சல்; அசாமில் போடோலாந்து, தேமாஜி, கர்பி ஆங்லாங்க்; குஜராத்திலிருந்து சௌராஷ்டிரம்; மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்காலாந்து, காம்தாபூர்; மணிப்பூரிலிருந்து குகிலாந்து; மத்தியப் பிரதேசத்திலிருந்து விந்தியப் பிரதேசம்; கர்நாடகத்திலிருந்து துளு, குடகு; வடகிழக்கு மாநிலங்களிலிருந்து திமாஸா அல்லது திமாஜி; உத்தரப் பிரேதசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானின் சில பகுதிகளைச் சேர்த்து பிரஜ்; உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், பிகாரின் சில பகுதிகளைச் சேர்த்து போஜ்பூர்; மேற்கு வங்கம், அசாமின் சில பகுதிகளைச் சேர்த்து காம்தாபூர்; இன்னும் நாகாலாந்து, லடாக்...

எல்லா இடங்களிலுமே மக்கள் போராடுகிறார்கள். எல்லா இடங்களையுமே பிரிக்கலாம். முழுவதுமாகக் கூறுபோட்ட பின் இடங்கள் இருக்கும்; மனிதர்கள் இருப்பார்கள்; ஆனால், இந்த தேசத்தின் பன்மைத்தன்மையை அவரவர் மொழி, கலை, கலாச்சாரக் கூறுகளோடு எது உயிரோடு வைத்திருக்கிறதோ அது - அந்தத் தேசிய இனம் என்ற கூறு - அடையாளம் தெரியாமல் சிதைந்திருக்கும். அது இன்றைய மாநிலங்களுக்கும் நல்லதல்ல; நாளைய இந்தியாவுக்கும் நல்லதல்ல!

தொடர்புக்கு: writersamas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x