விவசாயிகள் மரணங்களைத் தடுத்து நிறுத்துங்கள்!

விவசாயிகள் மரணங்களைத் தடுத்து நிறுத்துங்கள்!
Updated on
2 min read

புத்தாண்டு தமிழகத்துக்கு நல்லபடியாக விடியவில்லை. முந்தைய நாளில் மட்டும் ஐந்து விவசாயிகள் இறந்துபோயினர். புத்தாண்டு நாளன்று 36 பேர் இறந்தார்கள். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருக்கின்றனர். நாகை மாவட்டத்தில் மட்டும் 35 பேர் இறந்திருக்கின்றனர். இதெல்லாம் பதிவுசெய்யப்பட்ட கணக்கு. வழக்குப் பதிவுசெய்யப்படாமல் அசமடக்கப்படும் கணக்கைக் கூட்டினால் இன்னும் எண்ணிக்கை உயரக் கூடும்.

இத்தனை சாவுகள் நடந்த பின்னர் தான் தமிழகம் கொஞ்சம் கரிசனத்தோடு விவசாயிகளைப் பார்க்க ஆரம்பித்திருக் கிறது. 'பெரும் வறட்சியில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம்' என்று உச்சுக் கொட்டு கிறது. ஆனால், விவசாயிகள் தொடர்ந்து செத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அல்லது நடைப்பிணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மரணம் நேரக் காத்திருக்கிறோமோ?

தென் மாவட்டங்களுக்குச் செல்லும்போதெல் லாம் தீவனம் வாங்கக்கூட வழியில்லாமல், கால் நடைகளைக் கேரளத்துக்கு அடிமாட்டுக்கு அனுப்பும் விவசாயிகளைப் பார்க்கிறேன். இன் னும் நாம் அதுகுறித்தெல்லாம் பேசத் தொடங்க வில்லை. ஒருவேளை, அங்கும் மரணங்கள் நேரக் காத்திருக்கிறோமோ, என்னவோ?

பொதுவாக, விவசாயிகள் தற்கொலைகளைப் பற்றிப் பேசுபவர்கள், “வறட்சியால் பயிர்கள் கருகும் நிலையில் அதிர்ச்சியில் மாரடைப்பிலும், தற்கொலை செய்துகொண்டும் உயிரிழக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது” என்று பேசுகிறார்கள். எதனால் ஏற்பட்டது இந்த வறட்சி? தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சியானது, மழையின்மையால் ஏற்பட்டது. தமிழகம் பெறும் ஆண்டு மழையில், தென்மேற்குப் பருவமழையில் 19% குறைந்தது; வடகிழக்குப் பருவமழையில் 61% குறைந்துவிட்டது. இது மேலோட்டமான பதில். உண்மையான காரணம் இதுதானா?

பருவமழை பொய்ப்பது புதிதல்ல. கூடவே, இந்த ஆண்டு காவிரியிலும் நமக்கான தண்ணீர் வந்தடையவில்லை. காவிரியில் மட்டும் அல்ல; முல்லைப்பெரியாறு, நெய்யாறு, பாலாறு எனத் தமிழகத்தின் அனைத்து நீராதார நதிகளிலும் நம்முடைய பங்கும் உரிமையும் கேள்விக்குறியாகி இருக்கிறது. எந்த நம்பிக்கையில் ஒரு விவசாயி நிலத்தில் விதை விதைப்பது?

செப்டம்பர் 20-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டபோதே காவிரிப் படுகை விவசாயிகள் சந்தேகத்துடனே நிலத்தைப் பார்த்தார்கள். அப்போதே நிலம் பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தது. அரசை நம்பி இறங்கும் சூழல் ஏற்கெனவே இல்லை. என்றாலும், நீதிமன்றம் வலுவான குரலில் பேசிக்கொண்டிருந்ததால், நம்பி இறங்கினார்கள். எல்லாவற்றுக்கும் மேல் இயற்கையை நம்பினார்கள். கடனில்தான் வண்டி ஓடுகிறது. எல்லாமும் கைவிட்டுவிட்டதன் விளைவாகவே இன்று அடுத்தடுத்து மரணச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

போர்க்கால நடவடிக்கை வேண்டும்

நூறு பேரைத் தொடும் வரை பன்னீர்செல்வம் இதுகுறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. இதுவே முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிலை என்றால், இப்படி நடக்குமா? எழுபதுகள் எண்பதுகளில் சி.நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர், எஸ்.அழகிரிசாமி, ஆதிமூலம், வீரய்யன் போன்றவர்கள் தலைமையில் செயல்பட்ட விவசாயிகள் சங்கங்களின் வீரியமே வேறு. அரசியல் கட்சிகளின் விவசாய அணிகளும் அன்றைக்குத் துடிப்போடு செயல்பட்டன. எத்தனை எத்தனை போராட்டங்கள், தடியடிகள், துப்பாக்கிச்சூடுகள்? இன்றைக்கு விவசாயிகள் பல குழுக்களாகப் பிரிந்துவிட்டனர். பலவீனமடைந்துவிட்டனர். அரசியல் கட்சிகளும் அடையாளப் போராட்டங்களில் மூழ்கியிருக்கின்றன.

தமிழக விவசாயிகளின் கஷ்ட நிலைமையைப் போக்க நிறைய நடவடிக்கைகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.

1. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, நிவாரணப் பணிகளைப் போர்க் கால அடிப்படையில் தொடங்க வேண்டும்.

2. கருகிப்போன பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம், கரும்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் என்று அந்தந்தப் பயிர்களுக்கேற்ப இழப்பீடு அறிவிக்கப்பட வேண்டும்.

3. மரணமடைந்த விவசாயிகளின் குடும்பத் துக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

4. பயிர்க் கடன்கள் தள்ளுபடிசெய்யப்பட வேண்டும்.

5. கால்நடைகளுக்குத் தேவையான தீவனங் களை எளிதில், மலிவான விலையில் கிடைக்கும் ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

6. கரும்பு விவசாயிகள், ஆலைகளுக்கு அனுப்பிய கரும்புக்கு உரிய பணம் ஆலை நிர்வாகத்தால் அளிக்கப்படாமல் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் ரூ. 228 கோடியும் தனியார் சர்க்கரை ஆலைகளில் ரூ.1,100 கோடியும் விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை இருக்கிறது. என்ன போராடியும் விவசாயிகளுக்குக் கிடைக்காத இத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. உடனடியாக மத்திய அரசிடம் வலியுறுத்தி வறட்சி நிவாரணப் பணிகளுக்கான நிதியைக் கேட்டுப்பெற வேண்டும்.

8. அடுத்த மழையைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்காவது ஏரி, குளங்கள், பாசன வாய்க்கால்களைத் தூர் வார வேண்டும்.

நீண்ட கால நோக்கில் மேற்கொள்ள இன்னும் மலையளவு விஷயங்கள் இருக்கின்றன. முதலில் விவசாயிகள் மரணங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,வழக்கறிஞர், 'கதைச்சொல்லி' இதழின் இணையாசிரியர், தொடர்புக்கு:rkkurunji@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in