தேசியவாதிகளுக்கு ஏன் வெட்க உணர்ச்சி தேவை?

தேசியவாதிகளுக்கு ஏன் வெட்க உணர்ச்சி தேவை?
Updated on
4 min read

“இந்தியாவில் பிறந்து ஆங்கிலத்தில் எழுதிய எந்த எழுத்தாளரும் அனந்தமூர்த்தியைப் போல சமூக மதிப்பைப் பெற்றதில்லை; வாசகர்களுடனும் மக்களுடனும் வாழ்நாள் முழுக்க ஆழ்ந்த உறவைத் தொடர்ந்ததில்லை; அனந்தமூர்த்தியின் எழுத்தும் எழுத்து மரபும் கர்நாடகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசப்படும், விவாதிக்கப்படும்” என்று கன்னட நாவலாசிரியர் யு.ஆர்.அனந்தமூர்த்தி 2012 டிசம்பரில் 80 வயதை எட்டியபோது எழுதியிருந்தேன்.

அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் அனந்தமூர்த்தி இறந்தார். அப்போது பெங்களூரில் இருந்தேன். கன்னடியர்கள் அவர் மீது வைத்திருந்த அன்பை நேரிலேயே பார்த்தேன். ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்த வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அந்த வரிசை வளைந்து வளைந்து ஜே.சி. ரோடைச் சுற்றி கப்பன் பார்க் வரை நீண்டிருந்தது.

மாணவர்கள், ஆசிரியர்கள், திரைப்படக் கலைஞர்கள், இல்லத்தரசிகள், அனைத்துப் பிரிவையும் சேர்ந்த சாமானியர்கள் அந்த வரிசையில் இருந்தனர். ஷிமோகா, தாவண்கெரே, மைசூரு, தட்சிண கன்னட மாவட்டங்கள் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்தனர். துணிச்சல்மிக்க, துடிப்புள்ள, சமயங்களில் சர்ச்சைக்கும் இடமாகிய, அறிவு ஜீவி எழுத்தாளருக்குத் தத்தமது வழிகளில் அஞ்சலி செலுத்தினர்.

மலர்களாலும் எழுத்துகளாலும் அவரை நினைத்துப் பேசியும் எழுதியும் அஞ்சலி செலுத்தினர். ஒரு எழுத்தாளரை அவருடைய எதிரிகளை வைத்து அடையாளம் காண முடியும். அவரது மறைவு இந்துத்துவக் குழுக்களுக்கு மகிழ்ச்சியான கொண்டாட்டமாக அமைந்தது. அவர்களுடைய வன்செயல்களையும் மத சகிப்பின்மையையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.

தன்னுடைய வாழ்நாளின் இறுதியில் காந்திஜி மற்றும் வி.டி. சாவர்க்கர் இருவரையும் ஒப்பிட்டு ஒரு சிறு புத்தகத்தைக் கன்னடத்தில் எழுதினார். அவர் மறைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலத்தில் அது கீர்த்தி ராமசந்திரா, விவேக் ஷன்பக் ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டது. ‘இந்துத்வா அல்லது ஹிந்த் ஸ்வராஜ்’ என்பது அந்தப் புத்தகத்தின் தலைப்பு. நண்பர்கள், ஆதரவாளர்கள், விமர்சகர்கள், நம்ப மறுப்பவர்கள் என்று அனைவருடனும் அந்த நூல் வாயிலாக உரையாடுகிறார் அனந்தமூர்த்தி.

அனந்தமூர்த்தியின் வாழ்நாளின் இறுதியில் தேசியத் தலைவராக நரேந்திர மோடி உருவானார். அப்போது ஏற்பட்ட சர்ச்சையின் ஊடாகத்தான் ‘இந்துத்வா - ஹிந்த் ஸ்வராஜ்’ புத்தகத்தின் பின்னணி என்ன என்று பார்க்க வேண்டும். 2013 நவம்பரில் பிரதமர் ஆவதற்காக நாட்டின் எல்லா திசைகளிலும் நரேந்திர மோடி பயணப்பட்டுக்கொண்டிருந்தபோது, தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார் அனந்தமூர்த்தி. “நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் நாட்டில் நான் வசிக்க மாட்டேன். நான் இளைஞனாக இருந்தபோது நேருவை விமர்சித்திருக்கிறேன். அவருடைய ஆதரவாளர்கள் எங்களைத் தாக்கியதில்லை. எங்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளித்தனர். மோடியின் ஆதரவாளர்கள் இப்போது பாசிஸ்ட்டுகளைப் போலவே நடந்துகொள்கின்றனர்.

நேரு போன்றவர்கள் அமர்ந்து ஆட்சி செய்த நாற்காலியில் மோடி அமர்ந்து ஆட்சி செய்வதை விரும்பவில்லை. எனக்கு இப்போது வயதாகிவிட்டது, உடல் நலிவும் ஏற்பட்டிருக்கிறது. மோடி பிரதமரானால் அது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கும், நான் வாழ மாட்டேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

பேட்டி எழுப்பிய கொதிப்பு

அனந்தமூர்த்தியின் இந்தக் கருத்து மோடியின் ஆதரவாளர்களுக்குக் கோபத்தை ஊட்டியது. சிலர் பாகிஸ்தான் செல்வதற்கான விமான டிக்கெட்டை அனந்தமூர்த்திக்குத் தபாலில் அனுப்பினர் (வேறு ஏதாவது நாட்டுக்குக்கூடப் போகலாம் என்ற மாற்று வாய்ப்பையும் வழங்கியிருந்தனர்!), வேறு சிலர் அனந்தமூர்த்தியின் உருவ பொம்மையை எரித்தனர். சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர் என்பதால், அவருடைய வீட்டுக்கு வெளியே இரவு பகல் எந்நேரமும் போலீஸ் காவல் போடப்பட்டது.

மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பிறகு, பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி. “ஒருவித பதற்றமான எதிர்பார்ப்பில் இருந்தபோது அப்படிப் பேசிவிட்டேன்; நான் சொன்னது மிகையானதுதான், என்னால் இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாட்டுக்கும் செல்ல முடியாது” என்று அனந்தமூர்த்தியே பிறகு விளக்கம் அளித்தார். நரேந்திர மோடி மீது அவருக்குச் சந்தேகங்கள் தொடர்ந்தன. மோடி, ‘வலுவான தேசம்’ வேண்டும் என்றார்; அனந்தமூர்த்தியோ ‘நெகிழ்ச்சியான தேசம்’ வேண்டும் என்றார்.

இந்த வேறுபாடு, ‘இந்துத்வா - ஹிந்த் ஸ்வராஜ்’ புத்தகத்திலும் தொடர்கிறது. சாவர்க்கர், காந்தி ஆகியோர் இந்தியா எப்படிப்பட்ட நாடாக இருக்க வேண்டும் என்று எப்படிச் சிந்தித்தனர் என்பதைப் புத்தகம் காட்டுகிறது. இந்தியாவின் தேசியத் தன்மை, ஜனநாயகம், வளர்ச்சி ஆகியவை கடந்த காலத்தில் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டன, இப்போது எப்படி இருக்கின்றன, எதிர்காலத்தில் எப்படியாக இருக்க வேண்டும் என்று இருவரும் சிந்தித்ததைப் புத்தகம் விளக்குகிறது.

இப்போதைய அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே மோகிப்பதை அனந்தமூர்த்தி கவனித்திருக்கிறார். “மோடி போன்றவர்கள், தாங்கள் சொல்வதையே பெரிதாக மீண்டும் எதிரொலிக்கும் கும்பாக்களில் வாழ்கிறார்கள்; இது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல.

காங்கிரஸ் தலைவர்களும் இதைத்தான் செய்கின்றனர். எண் 7, ரேஸ்கோர்ஸ் சாலையில் இருக்கும் பிரதமராகட்டும், எண் 10, ஜன்பத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவராகட்டும், மாநில முதல்வர்களாகட்டும் தேர்தல் பிரச்சாரங்களைத் திட்டமிட்டு நடத்தி, தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்கின்றனர். தங்களுடைய அடிவருடிகள் இடைவிடாமல் புகழ்வதைத்தான் கேட்க விரும்புகின்றனர், விமர்சனங்களை அல்ல” என்று சாடியிருக்கிறார்.

இரு தேச பக்தர்கள் குறித்த தன்னுடைய புத்தகத்தில் அவர்களுடைய குண வேறுபாடுகளை நன்கு அலசியிருக்கிறார். சாவர்க்கரின் பேச்சும் எழுத்தும் செயலில் இறங்குமாறு ஆணையிடும்; காந்திஜியோ பேச்சு நடத்த அழைப்பார். உணர்ச்சியின் உச்சத்தில் இருந்துகொண்டு வாசகர்களுடன் சாவர்க்கர் பேசுவார்; காந்திஜியோ ஆத்மார்த்தமாக அவர்களுடன் பேசுவார். சாவர்க்கரின் குரல் தன்னம்பிக்கையுடனும், ஓங்கி உரத்தும் இருக்கும்; காந்திஜியின் குரலோ, கேட்பவர் தனது நிலையைச் சற்றே எண்ணிப்பார்க்க வைக்கும்.

லோகியா ஆதரவாளர்

இளைஞராக இருந்தபோது, சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியா மீது அனந்தமூர்த்திக்குப் பெரும் மதிப்பு இருந்தது. லோகியாவுக்குப் பிறகு வந்தவர்கள் மீது அப்படிப்பட்ட ஈர்ப்பு இல்லை. அடையாள அரசியலின் தீமையை அனந்தமூர்த்தி நன்கு உணர்ந்திருந்தார்.

எதையுமே மத நம்பிக்கை, இனம் ஆகியவற்றின் மீது ஏற்றிப் பார்ப்பது மனிதர்களுக்கு ஏற்படவேண்டிய எல்லா தார்மிக மனக் கலக்கங்களையும் இல்லாமல் போக்கடித்துவிடுகிறது; சாதி அல்லது மத அடையாளங்களைவிட, தனிநபரின் கண்ணியம், சமூக ஒற்றுமை போன்றவையே முக்கியம் என்று கருதினார் லோகியா. அரசியலுக்கும் நிர்வாகத்துக்கும் மதமும் இனமும்தான் அடிப்படை என்று மாற்றும் முயற்சிகள் அதிகரிப்பது குறித்து அவர் கவலை கொண்டார்.

வளர்ச்சி, நுகர்வோரியம் பெறும் முக்கியத்துவம் காரணமாக சுற்றுச்சூழல் உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கு ஏற்பட்டுவரும் பேராபத்துகள் குறித்து தனது நூலில் மிகவும் கவலை தெரிவித்திருக்கிறார் அனந்தமூர்த்தி. சுரங்கங்கள், அணைகள், மின்உற்பத்தி நிலையங்கள், நூற்றுக்கணக்கில் பொலிவுறு நகரங்கள், மரங்களை வெட்டி அகலப்படுத்தியதால் நிழல் இல்லாத சாலைகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் கழிப்பறைகளைக் கழுவுவதற்காக நகரங்களுக்குத் திருப்பப்படும் ஆறுகள், பழங்குடிகளின் கடவுளர்கள் வசிக்கும் குன்றுகளும் மலை முகடுகளும் ஜல்லிக்காக வெட்டி தரைமட்டமாதல், குருவிகள் இல்லாத சந்தைகள், பறவைகள் இல்லாத மரங்கள் போன்றவை நம்முடைய காலத்துத் தீமைகள் என்று அவர் பட்டியலிட்டிருக்கிறார்.

இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகளில் நிலவும் ஊழல், அவற்றின் தேய்வு குறித்துப் பின்னர் பேசினார்; “மோடியின் வளர்ச்சியால் அகழ்ந்தும் அடித்தும் துயரப்பட்டுக் கிடக்கும் நிலம்தான் இனி இடதுசாரிகளைப் போலப் பேசும். இயற்கை அன்னை தன்னுடைய கோபத்தைச் சூறாவளிகளாகவும் இடிகளாகவும் மின்னல்களாகவும் மழையாகவும் வெள்ளமாகவும் நிலநடுக்கங்களாகவும் வெளிப்படுத்துவாள்” என்று பேசியிருக்கிறார்.

“வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற தனது ஆர்வத்தில், தொழிற்சாலைகள் வெளிப்படுத்தும் புகையை அதிகப்படுத்துவார் மோடி. இயற்கைக்கு மிகச் சமீபத்தில் வசிக்கும் பழங்குடிகள் இனி போவதற்கு இடமில்லாமல் போய்விடும். மிதமிஞ்சிய நுகர்வு காரணமாக, இந்த மாற்றங்களை எல்லாம் மாற்றியாக வேண்டும் என்ற உணர்வு மனிதர்களுக்குத் தோன்றலாம்” என்று புத்தகத்தின் கடைசிப் பகுதியில் குறிப்பிடுகிறார் அனந்தமூர்த்தி.

இவையெல்லாம் சக்திவாய்ந்த, உள்ளத்தை உருக்குகின்ற வார்த்தைகள். ஆனால் ஒரு விளக்கம் - மோடி பிரதமராவதற்கு முன்பிருந்தும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் ஆட்சியும் இப்படித்தான் பழங்குடிகளின் உரிமைகளை மறுத்தது, சுற்றுச்சூழலைக் காப்பதில் அலட்சியத்தைக் காட்டியது. ஒரு தீமைக்கு யாராவது ஒருவரை அல்லது ஒன்றை உருவகப்படுத்துவது கவிஞர்களுக்குள்ள உரிமை. உண்மையில், இது தனி நபருக்கும் அரசியல் கட்சிக்கும் அப்பாற்பட்டது.

அனந்தமூர்த்தியின் வாழ்க்கையைப் போன்றதுதான் இந்தோனேசிய அறிஞர் பெனடிக்ட் ஆண்டர்சனுடையது. அவரும் ஒப்புநோக்கத்தக்க நல்ல தேசியவாதி. ஆண்டர்சன் 2015 டிசம்பரில் இயற்கை எய்தினார். அவர் சமூக அறிவியலாளர், வரலாற்று அறிஞர், இலக்கியத்தில் தோய்ந்தவர். அனந்தமூர்த்தியோ இலக்கியவாதி, அரசியலிலும் வரலாற்றிலும் ஆர்வம் மிக்கவர். இருவருமே சுதந்திர சிந்தனையுள்ள இடதுசாரிகள். இருவருமே கெளரவம், தலைக்கனம் இல்லாமல் இளைய சமுதாயத்திடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பியவர்கள்.

அனந்தமூர்த்தி தன்னுடைய நாடு என்று கருதியது - அவர் பிறந்த, வாழ்ந்த, மறைந்த நாடு. ஆண்டர்சனுக்கு இந்தோனேசியாவோ - படித்தது, எழுதியது மட்டுமே. இருவருமே சுயமாகவும் விமர்சித்துக் கொண்ட தேசியவாதிகள். தேசியவாதத்துக்கும் வெறிகொண்ட தேசப்பற்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று தொடர்ந்து வலியுறுத்தியவர் ஆண்டர்சன்.

தன்னுடைய அரசு, தன்னுடைய மக்களுக்கே தீங்கு விளைவிக்கும்போது வெட்கப்படாதவன் தேசியவாதியாக இருக்க முடியாது என்றும் அவர் வரையறுத்தார். இதே உணர்வுதான் ‘இந்துத்வா அல்லது ஹிந்த் ஸ்வராஜ்’ என்ற புத்தகத் தலைப்பில் எதிரொலிக்கிறது. “நன்மையும் தீமையும் பிரிக்க முடியாமல் சேர்ந்தே இருக்கிறது, நாட்டுப் பற்று என்பதற்குள்ளேயே தீமையான அம்சம் ஒன்றும் இருப்பதை உணர்ந்திருக்கிறோமோ” என்று கேட்கிறார் அனந்தமூர்த்தி.

சாவர்க்கரின் இந்துத்வா என்ற புத்தகம் புராதன இந்தியாவைப் புகழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது. ஒன்றை வரம்பில்லாமல் புகழும்போது ஒருவர் தன்னிலை மறக்கிறார். அப்படியிருக்கும்போது, கடந்த காலத்தில் நடந்த எல்லாமே புகழ்ச்சிக்கு உரியதாகவே அவருக்குத் தோன்றும். குற்றமே காண முடியாத, பெருமை வாய்ந்த, தன்னிகரில்லாத, உலகமே பின்பற்றத்தக்க நாடாக இந்தியாவைக் காண்கிறார் சாவர்க்கர் என்று சுட்டிக்காட்டுகிறார்.

அனந்தமூர்த்தி சுட்டிக்காட்டுவதைப் போல உண்மை, இதற்கு நேர் மாறானது. பழங்காலத்தில் வாழ்ந்தவரான புத்தர் தன்னைச் சுற்றி எங்கும் துயரத்தையே பார்க்கிறார் - அந்தத் துயர் தனி நபர் துயரமாகவும் இருக்கிறது, சமுதாயத் துயரமாகவும் திகழ்கிறது. வியாசரின் மகாபாரதத்தில் நவீன சமுதாயத்தை அலைக்கழிக்கும் அத்தனை தீமைகளும் - மண்ணாசை, பெண்ணாசை, ஏமாற்று, காமம், கொடூரம், பிராணிகள் மீதும் பொறாமை - போன்றவை இருந்துள்ளன.

அனந்தமூர்த்தி இந்தியக் குடியரசை விரும்பினார், அதனுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். அதே வேளையில், அதன் குறைகளை அவர் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. பெண்களை அடக்கி ஆள்வது, தலித்துகள் மீதான ஒடுக்குமுறை, பழங்குடிகளை வாழிடங்களிலிருந்து விரட்டிவிட்டுச் சுரண்டுவது, ஆட்சி நிர்வாகத்தில் ஊழல், தலைவர்களின் மனம்போன போக்கு, ஒழுக்கமின்மை, பணக்காரர்களின் பேராசை போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார்.

அவருடைய தேசப்பற்று என்பது தன்னுடைய நாட்டின் நிலையைக் கருதி நாணுவதாகும். இதில் அவர் காந்தி, அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற தேச பக்தர்களுக்கு இணையாக இருக்கிறார். சாவர்க்கர், கோல்வால்கர், நரேந்திர மோடி போன்ற ‘அதிதீவிர’ தேசியவாதிகளின் கொள்கைகளையும் கருதுகோள்களையும் அவர் ஏற்க மறுக்கிறார்.

தமிழில்: சாரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in