

ஒரு தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்மஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசார பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும். ஆனால் ஐரோப்பா, அமெரிக்கக் கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளை ஒப்பிட்டுப் பார்த்து, இவற்றின் பரிதாபகரமான நிலையைக் கண்டு ‘ஆஹா! இப்படிப்பட்ட தமிழ்நாடு எங்கே பிழைக்கப்போகிறது?’ என்று எண்ணி, பாழும் நெஞ்சு உடைந்துபோக வேண்டாம். ஏனென்றால் வர்த்தமான பத்திரிகை நாமாக உண்டாக்கிக்கொண்டதன்று. பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட தந்திரம்; சென்ற முப்பதாண்டுகளாகத்தான் இதைத் தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சரியான முதிர்ச்சியடையவில்லை. தவிரவும் தமிழ் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் எத்தனைக்கெத்தனை மதிப்புக் கொடுக்கிறார்களோ அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி, அதனால் பத்திரிகைகளுக்குத் தகுந்த லாபமுண்டாகும். அதிலிருந்து சரியான வித்வான்களின் கூட்டம் யதேஷ்டமாய்ச் சேர்ந்து, அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாகும்.
தமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஷையில் தேர்ச்சியுடையதன்று. தமிழ் பாஷையை முதலாக மதிப்பதன்று. தமிழ் முழு நாகரிகமுடையதா, இல்லையா என்பதைப் பற்றியே சந்தேகமுடையது. ஆதலால், தமிழ் படிப்பில்லாமலும் தமிழ் மணமில்லாமலும் சந்தோஷ மடைந்திருக்கும் இயல்புடையது.
தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோருக்குச் சரியான திரவிய லாபமில்லாமலிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள. அவற்றுள் பத்திராதிபர்களின் அஜாக்கிரதை (சோம்பேறித்தனம்) ஒன்று. எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றில் ஒன்று வாரப் பத்திரிகை. பழுத்த சுதேசிய கட்சியைச் சேர்ந்தது.
அது ஒவ்வொரு விஷயத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே ஒரு இங்கிலீஷ் மகுடமொன்று சூட்டியிருக்கிறது. ‘ருஷ்யாவின் நிலைமை’‘The Situation in Russia’, ‘தாய் பாஷையின் மூலமாகக் கல்வி பயிற்றுவித்தல்’,‘The Vernaculars as media of instruction’. ஆஹா! நான் மாற்றியெழுதுகிறேன். தமிழை முதலாவது போட்டு இங்கிலீஷைப் பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகையில் இங்கிலீஷை முதலாவதாகப் போட்டு, தமிழைக் கீழே போட்டிருக்கிறது. ‘அமெரிக்கா ஸ்திரீ’ பார்த்தாயா? என்னை அறியாமலே என் கை முதலாவது தமிழ் வார்த்தையை எழுதுகிறது. ‘American Women’ ‘அமெரிக்கா ஸ்திரீ’ ‘Our Madathiaptis’ ‘நமது மடாதிபதிகள்’என்று எழுதியிருக்கிறது. காயித பஞ்சமான காலம்: என்ன அநாவசியம் பார்த்தீர்களா?
இங்கிலாந்தில் வர்த்தமான பத்திரிகைகள் ப்ரான்ஸ் தேசத்து மந்திரிகளுடைய உபந்யாசங்களையும் பெரிய சாஸ்திரிமார், பெரிய கைத்தொழில் நிபுணர், த்ரவ்ய சாஸ்திர நிபுணர், ஜனத்திருத்த தலைவர் முதலியவர்களின் உபந்யாசங்களையும் பல ப்ரெஞ்சு ராஜாங்கம் சம்பந்தமான விவகாரங்களையும் ப்ரெஞ்சு பத்திரிகைகளிலிருந்து மொழிபெயர்த்துப் போடுகின்றன. ப்ரான்ஸ் தேசத்து பத்திரிகைகள் ஜெர்மன் பத்திரிகையிலிருந்து பல விஷயங்களை மொழிபெயர்த்துப் போடுகின்றன. அந்த மொழிபெயர்ப்புகளில் ஸ்வபாஷையின் வசன வழக்கங்களையும் பிரயோகங்களையும் கைவிட்டு, அன்னிய பாஷையின் வசன நடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டிலோ முழுவதும் தமிழ்நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் எழுதும் ஒரு வினோத பழக்கம் நமது பத்திராதிபர்களிடமும் இருக்கிறது.
முதலாவது நீ எழுதப்படுகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக்கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டுக்குப் பயன்படும். உனக்கு இஹபர ஷேமங்களுக்கு இடமுண்டாகும். இல்லாது போனால் நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் பயனில்லாமல்போகிறது. நான் சில சமயங்களில் சில பத்திரிகைகளை வாசித்துவிட்டு “ஐயா, இவ்வளவு காயிதத்தில் எத்தனையோ ஆச்சர்யங்களும் எத்தனையோ சந்தோஷங்களும் எழுதலாமே” என்று வருத்தப்படுவதுண்டு.
பாரதியாரின் கட்டுரைகள், ஜீவா பதிப்பகம், தொலைபேசி: 044_24351872