விவசாயிகளின் 10 பிரதான கோரிக்கைகள் என்ன?

விவசாயிகளின் 10 பிரதான கோரிக்கைகள் என்ன?
Updated on
2 min read

1. மத்தியிலும் மாநிலத்திலும் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் வேண்டும். இதுதொடர்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் தாக்கல் செய்த அறிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும். அது நிறைவேறினாலே, நெல், கரும்பு போன்றவற்றுக்கு உற்பத்திச் செலவைவிட 50 சதவிகிதம் அதிக விலை கிடைத்துவிடும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 4% வட்டியில் விவசாயக் கடனும் கிடைக்கும்.

2. பல மாநிலங்களில் சட்ட முன்வடிவு கொண்டுவந்து, இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால், தமிழக அரசு இன்னும் அதற்கான சட்டரீதியான அங்கீகாரம் தரவில்லை. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். மானியம் அளிக்க வேண்டும். உற்பத்தியாகும் அரிசி, காய்கறி, சிறுதானியங்கள், பழங்கள் போன்றவற்றை விற்க அங்காடிகள் அமைத்துத் தர வேண்டும்.

3. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 30 கல்லூரிகள் இருக்கின்றன. மூன்றில் ஒரு பகுதி பொறியியல் கல்லூரிகள். ஆனால், விவசாயத்தை முறையாகப் பயிற்றுவிக்க வேளாண் கல்லூரிகள் போதிய அளவு இல்லை. எனவே, விவசாயம் சார்ந்த மாவட்டங்கள் அனைத்திலும் தலா ஒரு விவசாயக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும்.

4. வளர்ச்சி என்ற பெயரில் ஆண்டுதோறும் விளைநிலங்கள் விழுங்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. இதனைத் தடுக்க விளைநிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இதில் சமரசத்துக்குத் துளியும் இடம் கொடுக்கக் கூடாது. மணல் கொள்ளையை முற்றிலும் தடுக்க வேண்டும். கேரளா, ஆந்திராவில் எப்படி அரசு அனுமதியில்லாமல் ஒருபிடி மண்ணைக்கூட ஆற்றில் இருந்து எடுக்க முடியாதோ, அதே நிலை இங்கும் வர வேண்டும். நீர்நிலைப் பாதுகாப்புக்கெனத் தனித் துறையை உருவாக்க வேண்டும். ஆண்டுதோறும் நீர்நிலைகளைத் தூர்வாருவதைச் சட்டமாக்க வேண்டும்.

5. தமிழகத்தில் நீர்ப் பாசனப் பிரச்சினைகள் மிக அதிகமாக உள்ளன. நீர்ப் பாசனத்துக்கெனத் தனி அமைச்சகம் வேண்டும். காவிரி, முல்லைபெரியாறு, பாலாறு, பாம்பாறு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முழு அக்கறையோடு திட்டங்களை முன்வைக்க வேண்டும்.

6. தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில்கூடத் தமிழகக் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்படுவதில்லை. காவிரி, முல்லைபெரியாறு போன்ற பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவோம் என்று வாக்குறுதி தர வேண்டும்.

7. முல்லைபெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்டும் முயற்சியில் கேரளம் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது. எனவே, உடனே அணைக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படைப் பாதுகாப்பு வழங்க வேண்டும். இன்றைய நிலையில் தமிழகப் பொறியாளர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டது அதிச்சியாக உள்ளது. அணை பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அங்கு நிரந்தரமாகப் பணியாற்றும் வகையில் தனி பொறியாளர் குழுவை நியமிப்பதுடன், அவர்கள் அங்கேயே தங்கி பணியாற்றுவதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும்.

8. தாட்கோ, சாலைப் போக்குவரத்து ஆணையம்போல, விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதற்காகத் தனி நிதி ஆணையத்தைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். விவசாயம் தமிழகப் பொருளாதாரத்தை உயர்த்துவதுடன், மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதால் ஆணையம் அவசியமாகிறது. விவசாயக் கடன் வழங்கவும், கடன் தள்ளுபடியின்போது கூட்டுறவு நிறுவனங்களைக் காப்பாற்றவும் இந்த அமைப்பு அவசியம்.

9. நெல் கொள்முதலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கின்றன. தமிழக அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்யாமல், மத்திய அரசின் முகவராக இருந்து கொள்முதல் செய்வதே பிரச்சினையின் மூலம். தமிழகத்தில் ஒரே நேரத்தில் நெல்சாகுபடியோ, அறுவடையோ நடைபெறாத நிலையில், மத்திய அரசின் கொள்கைகள் இங்கே பொருத்தமாக இல்லை. எனவே, தமிழக அரசே கொள்முதல் செய்வதோடு, மத்திய அரசு தரும் தொகையுடன் ஊக்கத்தொகையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ. 500 தர வேண்டும்.

10. தமிழகம் முழுவதும் நிறைய சிறு அணைத்திட்ட கோரிக்கைகள் கிடப்பில் கிடக்கின்றன. அத்திக்கடவு அவினாசி அணைத் திட்டம், கருமேனியாறு அணைத் திட்டம் போன்ற சிறுசிறு பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in