ஒரு நிமிடக் கட்டுரை: ஜிஎஸ்டியில் லாபம் தவிர்ப்பு சட்டப் பிரிவு

ஒரு நிமிடக் கட்டுரை: ஜிஎஸ்டியில் லாபம் தவிர்ப்பு சட்டப் பிரிவு
Updated on
2 min read

ஜூலை 1, 2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வர எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் புதிய வரி மத்திய மாநில வரிகள் பலவற்றுக்குப் பதிலாக ஒரே வரியாக இருக்கப்போகிறது. பல பொருட்களின் மேல் வரி விதிப்பு குறைவதற்கு வாய்ப்பு இருப்பதால் அதனைப் பயன்படுத்தி வியாபாரிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்கக் கூடாது என்பதற்காக லாபம் தவிர்ப்புக்கான சட்டப் பிரிவு ஒன்றும் ஜிஎஸ்டி சட்டத்தில் உண்டு.

ஜிஎஸ்டி வரி அமைப்பில் ஒரு வியாபாரி, தான் செலுத்திய வரியினை, தனது வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வரியில் கழித்து மீதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும். இதனை உள்ளீட்டு வரிச் சலுகை (Input Tax Credit) என்பர். இதன் மூலம் ஏற்படும் உபரி வருவாயை லாபமாகக் கருதக் கூடாது என்பது அரசின் நிலைப்பாடு. எனவே ஜிஎஸ்டிில் வரி விகிதம் மாறாமலும், அல்லது முன்பைவிட குறைவாகவும் இருந்தால் உள்ளீட்டு வரிச் சலுகையால் நிச்சயமாக உபரி வருவாய் ஏற் படும். அந்த உபரி வருவாயை விலையில் குறைத்து வாடிக்கையாளருக்கு அந்த லாபம் சென்று சேர்வதை வியாபாரி உறுதிசெய்ய வேண்டும்.

ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 163-ல் லாபம் தவிர்ப்பு சட்டப் பிரிவு உள்ளது. ஜிஎஸ்டி வரி அமைப்பைப் பயன்படுத்தி ஒரு வியாபார, உபரி லாபம் பெறுகிறார் என்றால், அதனை விசாரித்து தண்டனை அளிக்க ஓர் அமைப்பை ஏற்படுத்த இந்தச் சட்டப் பிரிவு வழிவகை செய்கிறது. பல நாடுகளில் ஜிஎஸ்டி போன்ற வரி அமைப்பு மாற்றம் வரும்போதெல்லாம் இவ்வாறு லாபம் தவிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இந்தச் சட்டம் வியாபாரிகளிடையே ஓரளவிற்கு அச்சத்தை உருவாக்கி உபரி லாபத்தைக் குறைக்க உதவியுள்ளது. ஆனால் சட்டச் சிக்கல் என்று வந்தால் இச்சட்டம் மூலமாக பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. ஏனெனில் வரி அமைப்பினால் ஏற்பட்ட உபரி லாபத்தை நிரூபிக்க முடியவில்லை.

ஒரு பொருளின் விலை சந்தை நிலைக்கு ஏற்ப மாற்றம் அடையும்போது, அதனுடன் வரி அமைப்பு மாற்றமும் சேர்ந்துகொண்டால், இவற்றைப் பிரித்துப் பார்ப்பது கடினம். மேலும் பல பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரியிடம் ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்படும் லாபத்தைக் கணக்கிட முடியாது, அல்லது ஒரே பொருளுக்கு பல உள்ளீட்டுப் பொருட்கள் இருக்கும் பட்சத்தில் ஜிஎஸ்டிினால் ஏற்படும் கூடுதல் லாபத்தைக் கணக்கிட முடியாது. இவ்வாறு கணக்கியலில் உள்ள கடினமான நடைமுறைகள் நீண்ட சட்ட சர்ச்சைக்குத்தான் வழிவகுக்கும் என்று கூறுகின்றனர். இவ்வாறான சட்டம் வழங்கும் அதிகாரம் தவறான அதிகாரியிடம் சென்றால் அதன் பயன்பாடு ஊழலுக்கு வழிவகுக்கும்; வியாபாரத்தை நசுக்கப் பயன்படும் எனும் அச்சமும் உண்டு.

அதேநேரத்தில் ஜிஎஸ்டிினால் எந்தெந்தப் பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க அரசு முன்வர வேண்டும்.

- இராம. சீனுவாசன்

சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்,

தொடர்புக்கு: seenu242@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in