Last Updated : 24 Aug, 2016 09:16 AM

 

Published : 24 Aug 2016 09:16 AM
Last Updated : 24 Aug 2016 09:16 AM

பிரெடரிக் டக்ளஸ் எனும் புகைப்படப் போராளி!

மக்களின் மனச் சட்டகத்தை மாற்றியமைப்பதில்தான் கலைஞர்களின் உண்மையான ஆற்றல் இருக்கிறது



இந்த ஆண்டு நடந்த அரசியல் கூட்டங்களில் வழக்கம்போல ஏராளமான ஓவியர்களும், இசைக் கலைஞர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். சில கேள்விகளை எழுப்பும் விஷயம் இது. அரசியலில் கலைஞர்கள் எந்த அளவுக்கு ஈடுபடலாம்? சமூக மாற்றத்துக்கு எந்த அளவுக்குப் பங்களிக்கலாம்?

இதற்கு ஓர் உதாரணமாக நான் இங்கே காட்ட விரும்பும் நபர் ஒரு கலைஞர் அல்ல, ஆனால் ஒரு புதிய கலை வடிவத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்துகொண்டவர். 19-ம் நூற்றாண்டில், அதிக முறை புகைப்படம் எடுத்துக்கொண்ட அமெரிக்கர் பிரெடரிக் டக்ளஸ் என்பது வியப்பளிக்கும் விஷயம். 160 முறை அவர் புகைப்படம் எடுக்கப்பட்டார் (ராணுவ அதிகாரி ஜார்ஜ் கஸ்டர் 155 முறையும், ஆபிரஹாம் லிங்கன் 126 முறையும் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறார்கள்). புகைப்படக் கலையைப் பற்றி நான்கு உரைகளும் எழுதினார் பிரெடரிக்.

மனிதனான அடிமை

கருப்பினத்தவர் பற்றிய பார்வையை மாற்றுவதற்குத் தனது புகைப்படங்களை அவர் பயன்படுத்திக்கொண்டார். “தனது உரை வீச்சின் உத்திகளில் ஒன்றாக அவர் கையாண்டது ‘கயாஸ்மஸ் (chiasmus) பாணியை. ஒரு வாக்கியத்தின் முன்பாதியில் இடம்பெறும் வார்த்தைகளை, அதன் பின்பாதியில் தலைகீழாக மாற்றிப் பயன்படுத்தும் பாணி இது” என்கிறார், ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹென்றி லூயிஸ் கேட்ஸ் ஜூனியர். உதாரணத்துக்கு, “ஒரு மனிதன் எப்படி அடிமையாக்கப்பட்டான் என்பதைப் பார்த்திருக்கிறீர்கள். இனி, ஒரு அடிமை எப்படி மனிதனாக்கப்பட்டான் என்பதைப் பார்ப்பீர்கள்” என்று எழுதியிருக்கிறார் பிரெடரிக்.

புகைப்படங்களிலும் இதே பாணியைப் பின்பற்றினார். ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் புகைப்படங்களில் பாமரத் தோற்றத்துடன், கேலிக்குரிய வகையில், தன்னம்பிக்கை இல்லாதவர்களாகக் காட்சியளிப்பதற்கு நேரெதிராகத் தனது புகைப்படங்களில் அவர் தோன்றுவார்.

புகைப்படங்களுக்கு மிகக் கவனமாக ‘தோற்றம் கொடுப்பார்’(போஸ்). காலப்போக்கில் அவர் தோற்றம் கொடுக்கும் விதத்தில் ஒரு பரிணாம வளர்ச்சி தெரிந்தது. அவரது அடுத்தடுத்த புகைப்படங்களில் தென்படும் மாற்றத்தை, சமீபத்தில் வெளியான ‘பிக்சரிங் பிரெடரிக் டக்ளஸ்’ எனும் புத்தகத்தில் காணலாம். ஜான் ஸ்டாஃபர், ஜோ ட்ராட் மற்றும் செலெஸ்ட்-மேரீ பெர்னீர் ஆகியோர் தொகுத்த புத்தகம் இது. இது தவிர, சமீபத்திய ‘அபெர்ச்சர்’ இதழில் கேட்ஸ் எழுதிய கட்டுரையிலும் இதைப் பற்றிப் படிக்கலாம்.

கிட்டத்தட்ட எல்லா புகைப்படங்களிலும், கருப்பு கோட், மடிப்புக் கலையாத காலர், கழுத்துப்பட்டை என்று நேர்த்தியாக உடையணிந்திருக்கிறார் டக்ளஸ். மதிப்பு மிக்க சமூகத்தைச் சேர்ந்தவராக, கண்ணியமிக்க உயர்ந்த கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்தவராக அப்படங்களில் காணப்படுகிறார்.

ஆனால், நடுத்தரவர்க்கத்துப் பாணியின் அந்தத் தோற்றத்துக்குப் பின்னர், மிகப் பெரிய தனியாளுமை வலிமை இருக்கிறது. “வலிமை இல்லா மனிதன் மனித குலத்தின் அடிப்படைக் கண்ணியம் அற்றவன்” என்று எழுதியிருக்கிறார் பிரெடரிக். உக்கிரமான அவரது தோற்றம், அவரது குலையாத உறுதியையும் சிங்கம் போன்ற பெருமிதத்தையும் உணர்த்துகிறது. 23 வயதுவாக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் முஷ்டியை மடக்கியபடி காட்சியளிக்கிறார்.

தோற்றமும் வலியும்

அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட சில படங்களில் கேமராவை நேருக்கு நேராக உற்றுப் பார்க்கிறார் பிரெடரிக். அது அந்தக் காலகட்டத்தில் கருப்பினத்தவர்களிடம் இல்லாத வழக்கம். அவரிடம் தெறித்த கம்பீரமான கோபம் அது. “நான் அடிமையாக இருந்தபோது, வேறு எந்தக் காரணங்களையும்விட என் தோற்றத்துக்காகவே நான் அதிகமாகத் தாக்கப்பட்டிருக்கிறேன். அதாவது, அதிருப்தியடைந்திருக்கும் முகபாவனைக்காக. அதிருப்தி அடைந்திருந்ததால்தானே நான் அதிருப்தியான முகபாவத்தை வெளிப்படுத்தினேன்!” என்று 1847-ல் பிரிட்டிஷ் மக்களிடம் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

புரட்சிகரமான அந்த அதிருப்தி முகபாவத்தைத் தனது புகைப்படங்களில் அவர் வெளிப்படுத்தினார். இளைஞராக அவர் இருந்தபோது புகைப்படங்களில் ஊடுருவும் பார்வையுடன், கம்பீரமாகக் காணப்படுகிறார். வயதாக ஆக, அவரது முகத்தில் ஆழ்ந்த அறிவு முதிர்ச்சியும், கவலையும் தொனிக்கின்றன. ஆழ்ந்த மாண்பும், மேதைமையும் கலந்த தோற்றம் அவருக்கு வந்துவிட்டிருக்கிறது.

அமெரிக்காவில் அன்றைக்குக் கருப்பினத்தவர்கள் மீது முத்திரை குத்தப்பட்டிருந்ததற்கு மாறாக, ஒரு கருப்பின மனிதனின் மனிதத்துவத்தைத் தனது புகைப்படங்கள் மூலம் பிரெடரிக் காட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று கற்றுத்தருவதற்குப் புகைப்படக் கலையைப் பயன்படுத்திக்கொண்டார்.

உடைக்கப்படும் கற்பிதங்கள்

பார்ப்பது என்பது மிக எளிதான விஷயம் எனும் மாயையே பெரும்பாலும் நம்மிடம் இருக்கிறது. ஏதோ ஒன்றைப் பார்க்கிறீர்கள். அதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக்கொள்கிறீர்கள். கடைசியாக அதை மதிப்பிடுகிறீர்கள். சிரமமான விஷயம் அதுதான். உண்மையில், நாம் பார்ப்பதை அப்படியேதான் மதிப்பிடுகிறோம். நம் இயல்பு, அனுபவம் ஆகியவற்றால் ஆன தன்னுணர்வற்ற மனச் சட்டகத்தைச் சுமந்துசெல்கிறோம். உலகத்தை நாம் பார்க்கும் விதம், அதை எப்படி அர்த்தப்படுத்திக்கொள்கிறோம் என்பதை அதுதான் தீர்மானிக்கிறது.

பிரெடரிக் தனது புகைப்படங்கள் மூலம், அந்த மனச் சட்டகத்தை மாற்றியமைத்தார். கருப்பினத்தவர்கள் தொடர் பாக இருந்த பழைய கற்பிதங்களை மாற்றிக்காட்டினார்.

“கவிஞர்கள், தீர்க்கதரிசிகள், சீர்திருத்தவாதிகள் அனைவரும் சித்திரங்களை உருவாக்கக்கூடியவர்கள். இந்தத் திறன்தான் அவர்களுடைய ஆற்றலுக்கும் சாதனைகளுக்கும் பின்னுள்ள ரகசியம்” என்று பிரெடரிக் எழுதியிருக்கிறார். இங்குதான் கலைஞர்கள் தங்கள் முத்திரையைப் பதிக்கிறார்கள். நமது பொதுவான உணர்வுநிலைக்கு மாறான சித்திரங்களை ஆழ்மனத்தில் பதிக்கிறார்கள். நம் கண்கள் உட்கிரகிக்கும் விஷயங்கள் மீது மதிப்பையும், கனத்தையும் அச்சித்திரங்கள் ஏற்படுத்துகின்றன.

கலைஞர்கள் ஏன் சார்பு நிலையிலும் சட்ட விவகாரங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று எனக்குப் புரியவேயில்லை. மக்களின் மனச் சட்டகத்தை மாற்றியமைப்பதில்தான் கலைஞர்களின் உண்மையான ஆற்றல் இருக்கிறது.

காணொளிகளின் காலத்திலும் புகைப்படம் சக்தி மிக்கது. காரணம், ஒற்றை உண்மையை வேரூன்றச் செய்யும் திறன் அதற்கு உண்டு. ஈடன் தோட்டத்தைச் சித்தரிக்கும் ஓவியம், டச்சு ஓவியர் ஜோகன்னஸ் வெர்மீர் வரைந்த ‘கேர்ள் வித் எ பேர்ல் இயர்ரிங்’ போன்ற படைப்புகளில், அதிரடியாகக் கருப்பினத்தைச் சேர்ந்த மாடல்களை வைத்து ஏகப்பட்ட படைப்புகள் வெளியாகின்றன.

இவை உங்கள் எண்ணத்தை மட்டும் மாற்றுவதில்லை. உங்கள் பார்வையை இதுவரை கட்டமைத்துவந்த லென்ஸ்களையே சிதறடிக்கின்றன.

- டேவிட் புரூக்ஸ், ஊடகவியலாளர், அரசியல் மற்றும் கலாச்சார விமர்சகர்.

@ ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x