

தமிழகம் எங்கும் உள்ள புத்தகக் காதலர்களின் முக்கியத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது. கடந்த டிசம்பர் மாதம் சென்னை சந்தித்த மழை, வெள்ளத்தின் பாதிப்புகள் காரணமாகப் புத்தகக்காட்சி தள்ளிவைக்கப்பட்டது.
இடையில் தேர்வுகள், தேர்தல் என்று பல்வேறு காரணங்கள் குறுக்கிட்டதால், ஜூன் மாதத்துக்குத் தள்ளப்பட்டது. வெள்ளத்தால் கடும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சந்தித்த பதிப்பாளர்கள் மீண்டு வர இந்தப் புத்தகக்காட்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலக்கியம், அரசியல், சமூகம், ஆன்மிகம், மருத்துவம் என்று பல்வேறு தலைப்புகளில் சுமார் 10 லட்சம் புத்தகங்களும், சுமார் 30,000 புதிய புத்தகங்களும் கிடைக்கின்றன. நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், இந்த முறை பல பதிப்பகங்கள் நம்ப முடியாத அளவுக்குத் தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்பனை செய்கின்றன.
வழக்கமாகவே சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நல்ல கூட்டம் வரும் நிலையில், வேலைநாளான திங்கள் கிழமை வரை புத்தகக் காட்சியை நீட்டிப்பதை சமீபகாலமாக ‘பபாசி’ கடைப்பிடித்துவருகிறது. வார இறுதி நாட்களில் வரும் கூட்டத்தைத் தவிர்க்க நினைப்பவர்கள், கடைசி நாளான இன்று நிதானமாக, நிறைய புத்தகங்களை வாங்கலாம்!