Published : 05 Jun 2016 11:59 am

Updated : 14 Jun 2017 12:37 pm

 

Published : 05 Jun 2016 11:59 AM
Last Updated : 14 Jun 2017 12:37 PM

புத்தகங்களைத் தேடும் மனம்

புத்தகப் படிப்பு பயன் தரும் என்பதுதான் என் நம்பிக்கை. வாசகனுக்கும் புத்தகங்களுக்குமான உறவு, பல சூட்சுமங்களும் உள்விரிவுகளும் கொண்டது. மொட்டை யாக விதிகளை உருவாக்க இடம் தரக்கூடியது அல்ல. வாசிப்பு மூலம் மிகப் பெரிய விவேகத்தை அடைந்தவர்கள் இருக்கிறார்கள். சோம்பல் காரணமாக, உடல் உழைப்பையும் பொறுப்புக்களையும் தட்டிக் கழிக்க, தந்திரமாகப் புத்தகங்களுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.

புத்தகங்களிலிருந்து பெற்ற ஞானம் மிகவும் திடமாக இருப்பது போலவும் நெருக்கடிகளில் வழி காட்டும் என்பது போலவும்தான், நெருக்கடிகள் எதுவும் இல்லாத நேரத்தில் நாம் நம்புகிறோம். சுயவாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால், நெருக்கடிகளில் புத்தக அறிவு பெரிய அளவுக்குக் கை தந்து விடவில்லை என்பது வெளிப்படும். நெருக்கடிகளில் புதையுண்டு கிடக்கும் இயல்புகள் மேலிட்டு ஆட்டம் போடத் தொடங்கிவிடுகின்றன. திருக்குறளைக் கூட்டங்களில் ஆர்ப்பாட்டமாகச் சொல்லி, கரகோஷம் பெறுபவர்களில் ஒருவரைக்கூட அந்நூல் பாதித்துவிடவில்லை என்பது, அவர்களது வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்து நாம் தெரிந்துகொள்ள முடியும்.


வாசிப்பு மனித குலத்திற்கு மட்டுமே வாய்த்த பெரும் பேறு என்று இப்போது நான் சொன்னால், முன்னுக்குப் பின் முரணாகச் சொல்வது போல்தான் உங்களுக்குத் தோன்றும். வாசிக்க வேண்டிய முறையில் வாசித்தால் மட்டுமே, புத்தகங்களிலிருந்து சிறுகச் சிறுகப் பயன் பெற முடியும். புத்தகங்கள் அனைத்தும் தன்னளவில் உயர்வானவை என்ற மயக்கத்தில் இருந்து நாம் முதலில் விடுதலை பெற வேண்டும். நமது ஈடுபாடு, நமது ருசி, நமது தாகம், நமது கேள்விகள் இவற்றை அறிந்த நிலையில், மிகக் கறாரான தேர்வில் மிஞ்சும் நூல்களை மட்டுமே நாம் படித்தால் போதுமானது. நாம் படிப்பது நமது பேரறிவை, நம் நண்பர்கள் முன் வாணவேடிக்கை காட்டி, அவர்களைத் திக்குமுக்காடச் செய்வதற்கல்ல.

ஆழ்ந்த வாசிப்பு நம் சளசளப்பை ஒழித்து, மௌனத்தைத் தருகிறது. உள்ளார்ந்த யோசனையைத் தூண்டுகிறது. மனம் யோசனைகளைக் குதப்புகிறபோது ஏற்படும் சிலிர்ப்பு, சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் அறிவைப் பிறர் முன் பந்தாடும்போது பெற முடிவதில்லை என்பது உறுதிப்படுகிறது. வாசிப்பு மூலம் மட்டுமே மனங் கொள்ளச் சாத்தியமான சுய அறியாமை, வெளியே சிந்திச் சிதறி, படிப்புத் தரும் அகங்காரத்தை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது. முன்கூட்டி எவற்றைப் பற்றியும் தீர்மானிக்க முடியாது என்பதும் நாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் பொறிகள், மிகுந்த வரையறைகளுக்கு உட்பட்டவை என்பதும் அனுபவங்களின் சாரங்களை அறிய, தீர்க்கமான, இடைவிடாத தேடல் தவிர்க்க முடியாதது என்பதும் உறுதிப்படுகிறது.

மிக மேலான புத்தகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அவை நம் சொத்துகள்தான். நாம் அறிந்த மொழியில் அவை மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், தாய் மொழியில் எழுதப்பட்ட நூலுக்கு இணையான மதிப்பை அவற்றுக்கு அளித்து, நாம் அவற்றைக் கற்க வேண்டும். புத்தகங்களை மட்டுமல்ல; மனிதர்களையும், மரங்களையும், சகல உயிர் இனங்களையும் வாசிக்கக் கற்றுக்கொள்பவன்தான் மேலான வாசகன்.

ழுத்தின் மீதும் படிப்பின் மீதும் கனவு சார்ந்த அக்கறை முதலில் எப்போது தோன்றிற்று என்று எவரேனும் என்னிடம் கேட்டால் புதுமைப்பித்தனின் சிறுகதையான ‘மகாமசானம்’ படித்தபோது என்றுதான் சொல்லுவேன். மகாமசானத்தை உருவாக்கியவன் என்ன காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறானோ அந்தக் காரியத்தைத் தான் நானும் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் உருவாயிற்று.

படைப்புக்குப் படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வாழ்க்கை அனுபவங்களும் முக்கியம்தான். வாழ்க்கை அனுபவங்களை ஒரு இழை என்று சொன்னால் படிப்பை மற்றொரு இழை என்று சொல்லலாம். ஆனால் ஆதாரமான இழை அனுபவம் சார்ந்த இழைதான். அனுபவங்கள்தான் உங்கள் சூழல் சார்ந்து கேள்விகளை உருவாக்குகின்றன. புதிர்களை உருவாக்குகின்றன. விளக்க இயலாத துக்கத்தை வாழ்க்கை உருவாக்குகிறது. வியப்பை உருவாக்குகிறது. இதற்கான விடைகளைத் தேடும் மனம்தான் புத்தகங்களைத் தேடிக்கொண்டு போகிறது. உடனடியாகப் புத்தகங்களில் விடை கிடைத்துவிடுகிறது என்பதுமில்லை. நம் மனதில் ஒரு வினா எழும்போது தெரிந்தவர்களிடம் அதற்கு விடை தேடுகிறோம். அவர் ஒரு அபிப்ராயம் சொல்கிறார். அதில் நம்பிக்கை கொள்கிறோம். ஆறுதல் ஏற்படுகிறது. அதில் அவநம்பிக்கை கொள்கிறோம். கேள்வி தொடர்கிறது. அபிப்ராயங்களின் தொகுப்புக்கள்தான் புத்தகங்கள். இறுதி விடையாகக் கருதத்தக்கவை அதில் ஒன்றும் இல்லை.

வாழ்க சந்தேகங்கள் (கேள்வி - பதில்கள்) என்னும் நூலில் வாசிப்பு குறித்த ஒரு கேள்விக்கான பதில், ‘இவை என் உரைகள்’ என்ற நூலில் இடம்பெற்றுள்ள ‘என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்’ என்னும் கட்டுரை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. இரண்டு நூல்களும் காலச்சுவடு வெளியீடு.


புத்தகங்களைத் தேடும் மனம்புத்தகப் படிப்புகேள்வி பதில்கள்காலச்சுவடு வெளியீடு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x