

உலகின் எல்லா மொழிகளுக்கும் பொதுவான ஒரு வார்த்தை உண்டா என்று மொழியியலாளர்கள் ஆராய்ந்துபார்க்கிறார்கள். இப்போதைக்கு அவர்கள் அடையாளம் கண்ட ஒரே வார்த்தை ‘ஹ’ (HUH). ஆம், உலகில் உள்ள எல்லா மொழிக்காரர்களும் அன்றாடம் ஒரு முறையாவது இந்த ‘ஹ’வைப் பயன்படுத்துகிறார்கள்.
இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் உச்சரிப்பும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கிறது, பொருளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, இந்த வார்த்தையை உதிர்க்கும் சூழலும் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கிறது.
அதாவது, இருவர் சேர்ந்து பேசும்போது, ஒருவர் தன்னுடைய துயரத்தைச் சொல்லும்போது எதிரில் இருப்பவர் அதைக் கேட்டுக்கொண்டிருப்பதற்கு அடையாளமாகவும் தன்னுடைய அனுதாபத்தைத் தெரிவிக்கும் வகையிலும் வேறு எதையும் சொல்லத் தோன்றாமலும் சொல்லும் வார்த்தையாக இருக்கிறது.
உதாரணத்துக்கு - கல்லூரிக்குச் சென்ற தன்னுடைய மகன் விபத்தில் சிக்கியதை ஒருவர் கூறும்போது, எதிரில் இருப்பவர் உதிர்க்கும் வார்த்தை ‘ஹ’வாக இருக்கிறது. இதே போல இருவருக்கும் பொதுவான நண்பர் செய்த மோசடி, வேண்டியவர்களின் மறைவு, பண இழப்பு போன்றவை தொடர்பான உரையாடல்களில் இந்த ‘ஹ’ இடம்பெறுகிறது.
‘‘என்னைவிட அவன் பெரியவனா?’’ என்று இகழ்ச்சியாகக் கேட்கும்போதும், ‘‘அவனைப் போய் நம்பினாயே நீ!’’ என்று அனுதாபப்படும் சமயங்களிலும் இந்த வார்த்தை தானாகவே வந்துவிடுகிறது.
‘ஹ’ இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா? என்று கேட்கிறீர்களா, சரிதான், ‘ஹ’ பயன்பாடு உங்களுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது!
ஆனால், சில விதிவிலக்குகளும் இருக்கின்றன. சீனர்கள் தங்களுடைய மண்டாரின் மொழியில் இதையே ‘ஏ’ என்று நீட்டி முழக்குவார்களாம். ஸ்பெயின் நாட்டவர் ‘ஈ’ என்பார்களாம். டச்சுக்காரர்கள் ‘ஹி’ என்பார்களாம். நம்முடைய கேரளத்துச் சகோதரர்கள் ‘ஓ’ போடுவதைக் கேட்டிருக்கிறோம்.
நெதர்லாந்து நாட்டின் மொழி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் மார்க் டிங்கிமன்சே, பிரான்சிஸ்கோ டொரைரா, நிக் என்ஃபீல்ட் ஆகியோர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ‘பிளாஸ் ஒன்’ என்ற பத்திரிகையில் இந்த ஆய்வு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.