

இந்திய வரலாற்றை வாசிக்க விரும்புகிறவர்களுக்கான ஆரம்ப நூல்கள் சிலவற்றைப் பரிந்துரை செய்ய விரும்புகிறேன். ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. நான் தமிழில் வெளியாகியுள்ள நூல்களை மட்டுமே முதன்மைப்படுத்தியிருக்கிறேன்
இவற்றை ஆழ்ந்து படித்தால் இந்தியச் சமூகத்தின் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும்.
ப. சிவனடி எழுதி 14 தொகுதிகளாக வெளியாகியுள்ள ‘இந்திய சரித்திரக் களஞ்சியம்’ மிக முக்கியமான வரலாற்று நூல். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஒவ்வொரு பத்தாண்டு காலத்தையும் தனியே எடுத்துக்கொண்டு அந்த காலகட்டத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் இவற்றோடு இந்திய சரித்திரத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல் சமகால வரலாற்றுப் புத்தகங்களில் முக்கியமானது. இந்தப் புத்தகத்தைத் தற்போது அகநி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
டி.டி. கோசாம்பியின் ‘பண்டைய இந்தியா’ மிகவும் முக்கியமான நூல். கோசாம்பியின் வரலாற்றுப் பார்வை மாறுபட்டது. மன்னர்களின் புகழ் பாடாமல் மக்கள் வரலாற்றை முதன்மையாக்கி இந்தியாவை ஆராய்ந்தவர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் இதனை வெளியிட்டுள்ளது
ஏ. எல். பசாம் எழுதியுள்ள ‘வியத்தகு இந்தியா’என்ற நூல் நம் பண்பாட்டு வரலாற்றை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டது. விடியல் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது. இது போலவே ‘பேரரசன் அசோகன்’ என்ற சார்லஸ் ஆலன் நூல் அசோகரின் காலத்தையும் ஆட்சி முறையும் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறது. எதிர் வெளியீடு இதை வெளியிட்டுள்ளது,
தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு முக்கியமான புத்தகம் கே.கே. பிள்ளை எழுதிய ‘தென் இந்திய வரலாறு’. இந்த நூலை பழநியப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். சங்க காலம் தொடங்கி பாண்டியர் காலம் வரையிலான ஆறு தொகுதிகளை தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
கெ.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’, மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’, டாக்டர் ராஐய்யனின் ‘தமிழக வரலாறு’, ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, டொமினிக் லேப்பியரின் ‘நள்ளிரவில் சுதந்திரம்’ போன்றவையும் முக்கியமான நூல்கள்.