Published : 11 Sep 2016 11:34 AM
Last Updated : 11 Sep 2016 11:34 AM

ஞாயிறு அரங்கம்: பொதுக் குடிமைச் சட்டம் தேவையா?

அதற்கு இது நேரமல்ல! - கே.கண்ணன்

அனைவருக்குமான பொதுக்குடிமைச் சட்டத்தைக் கொண்டு வர முடியுமா என்று பரிசீலிக்குமாறு சட்ட ஆணையத்தை மத்தியச் சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இது தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து விவாதங்களில் முன் வைக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தின் சட்டக்கூறு 44-ல் உள்ள அரசின் கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறை இத்தகைய முயற்சிக்கு இடமளிக்கிறது.

பொதுக் குடிமைச் சட்டம் தற்போது கொண்டுவரப்பட்டால் என்ன ஆகும்? உண்மையில் அது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கான தனிநபர் சட்டங்களின்மீது இந்துக் களுக்கான சட்டங்கள் மேலாதிக்கம் செலுத்துவதற்கான முயற்சியாகத்தான் தற்போது பார்க்கப்படும்.

டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசனத்தை வரையும்போது தனிநபர் சட்டங்களில் மதத்துக்கான பாத்திரம் எதுவும் இல்லை என்ற விவாதத்தை நடத்த முயன்றார்.

திருமணம், ஜீவனாம்சம், வாரிசுரிமை, குழந்தைகளைத் தத்தெடுப்பது, பாதுகாவலராக இருப்பது உட்பட பிறப்பு முதல் இறப்பு வரை நாம் எதிர்கொள்பவை தொடர்பானவைதான் தனிநபர் சட்டங்கள். மதம் என்பது பிறப்பில் தொடங்கினாலும் அது ஒருவரின் மனஉணர்வால் சட்டங்களின் மூலம் பின்பற்றப்படுகிறது. அதை நாம் ஒருவரின் தனிப்பட்ட விஷயமாக அங்கீகரிக்கிறோம்.

நாம் தனிநபர் சட்டங்களைப் பலவந்தமாக ரத்து செய்தால், ஒருவரின் தனிப்பட்ட, மிகவும் அந்தரங்கமான உணர்வுகளில் மோதுவதாக இருக்கும். மற்ற நாடுகள் வேறுபட்ட தனிநபர் சட்டங்களை வைத்திருக்கவில்லையே, நாம் ஏன் வைக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது. அதற்கு மாறாக, இத்தனை தனிநபர் சட்டங்கள் இருந்தாலும், அவை தேசிய ஒருமைப்பாட்டைக் கெடுக்கிறதா என்றும் நாம் கேட்கலாம்.

பொதுக் குடிமைச் சட்டம் பற்றிய எந்த ஒரு பேச்சும் சரியான நேரத்தில் சரியான பாதையில் வர வேண்டும். எந்த ஒரு தனிநபர் சட்டமும் முழுமையானதல்ல. வலுக்கட்டாயமான ஒரு சட்டத்தின் மூலம் சாதிக்க முடியாததை நாம் மதச்சார்பற்ற சட்டங்கள் மூலம் மெதுவாகச் சாதித்தே வருகிறோம்.

உதாரணமாக, தத்தெடுப்பதற்கான பொதுவான ஒரு சட்டத்தைச் சில வருடங்களுக்கு முன்னால் நாம் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தோம். கடும் எதிர்ப்புகளால் அது கைவிடப்பட்டது. ஒரு விஷயத்தில் சட்ட மாறுதல்களுக்கு அனுமதித்தால் மற்ற விஷயங்களுக்கும் அது பரவிவிடும் என்று இஸ்லாமியச் சமூகம் கவலைப்படுகிறது. அவர்களை நாம் பலவந்தப்படுத்துவதுதான் எதிர்ப்புக்கான காரணம். இது போன்ற நேரங்களில் கிறிஸ்தவர்களிடமிருந்தும் எதிர்ப்பு வரவே செய்கிறது.

மும்பை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள் ‘சிறார் நீதி சட்ட’த்தின் கீழ் தத்தெடுக்கும்போது அந்தச் சட்டம் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்துவிட்டன. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றமும் இந்தச் சட்டத்தின்படி இஸ்லாமியர்களும் தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டது. என்ன ஆச்சரியம்! எந்தச் சமூகத்திடமிருந்தும் எந்தவொரு எதிர்ப்பும் வரவில்லை.

இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கான குழந்தைக்கான பாதுகாவலர் சட்டங்கள் தந்தைக்குச் சாதகமாக உள்ளன. சிறுவயது குழந்தைக்குத் தந்தைதான் இயல்பான பாதுகாவலர் என்கின்றன அவை. ஆனால், கீதா ஹரிகரன் வழக்கு உட்பட நீதிமன்றத் தீர்ப்புகள் குழந்தையின் எதிர்காலமே முக்கியமென்றும் எவ்வயதிலும் ஐந்து அல்லது ஏழு வயதுக்கு மேலான குழந்தைகளாக இருந்தாலும் அம்மாதான் எல்லோருக்கும் மேலான பாதுகாவலராக இருக்க முடியும் என்கின்றன.

விவாகரத்து வழக்கிலும் மனைவிக்கான ஜீவானாம்சம் வழங்குவது பற்றிய விவகாரத்திலும் சட்டம் செயல்படுவதில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. ‘தலாக்’ சொல்லி விவாகரத்தான ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு அவள் வேறொரு ஆணை மணப்பதற்கான காலம் வரை அவளுக்கான ‘ஜீவானாம்சம்’ வழங்கப்படலாம் என்ற வரையறை உள்ளது. அந்தச் சட்டங்களும் நீதிமன்றத்தின் விளக்கங்களுக்கு ஏற்பப் பெரிய அளவில் மாறிக்கொண்டு வருகின்றன.

தந்தைக்குத் தனித்தனி நியாயம்

இஸ்லாமியச் சட்டப்படி விவாகரத்தான இஸ்லாமியப் பெண் அடுத்த திருமணத்துக்காக அவள் காத்திருப்பதற்கான ‘இத்தாத்’ எனும் காலகட்டத்துக்கு மட்டுமே ஜீவானாம்சம் பெற முடியும். அதே போல் தலாக் சொல்வதன் மூலம் இஸ்லாமியப் பெண்கள் கணவர்களால் சுலபமாக விவாகரத்து செய்யப்படுகிறார்கள். அது அவர்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சம். ஆனால், நீதிமன்றத் தீர்ப்புகளின் படி இந்த நிலை பெருமளவு மாற்றப் பட்டுள்ளது. அதனால், தற்போது விவாகரத்தான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அல்லது அடுத்த திருமணம் வரையிலும் ஜீவனாம்சம் பெற இயலும்.

வாரிசுரிமைக்கான சட்டத்தை எடுத்துக்கொள்வோம்.

இந்துச் சட்டத்தின்படி அம்மா நேரடி வாரிசுகளில் ஒருவராவார். ஒரு ஆண் இறந்தால் அவருடைய மனைவி, குழந்தைகள், அம்மா ஆகியோரே நேரடி வாரிசுகள். அங்கே தந்தைக்கு எந்த இடமும் இல்லை.

கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தக்கூடிய இந்திய வாரிசுரிமைச் சட்டப்படி நேரடி வாரிசுகள் இல்லாதபட்சத்தில், கணவனை இழந்த மனைவியோடு சேர்ந்து தந்தையும் ஒரு வாரிசு. ஒரு சட்டத்தில் தந்தைக்கு நியாயம் வழங்குவதாகவும் இன்னொன்றில் நியாயம் வழங்காமலும் சட்டம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இஸ்லாமியச் சட்டத்தைப் பாருங்கள். தந்தையும் தாயும் முதன்மையான வாரிசுகள். 1956 வரையிலும் வாரிசு என்ற முறையில் ஒரு சொத்தின் மீது முழுமையான உரிமையைப் பெண்ணுக்குத் தருவதற்கு இந்துக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சட்டப்பிரிவு 14 தான் அதை வழங்கியது. ஆனால், இதுதான் அதிகமாகத் தவறான முறையில் பயன்படுத்தப்படும் சட்டப் பிரிவு. இந்துக் குடும்பத்தின் ஆண்கள் வாய்மொழியாகத் தங்களுக்குள்ளாகவே பாகம் பிரித்துக்கொண்டு பெண்களுக்குப் பாகம் அளிக்காமல் இந்தச் சட்டத்தை எளிதாக மீறுகிறார்கள். இதனால்தான் அதிகமான சட்டத் தகராறுகள் ஏற்பட்டுள்ளன. பெண்ணுக்குச் சொத்தின்மீது சம உரிமை கொடுப்பதற்கு மனமில்லாத இந்து ஆணாதிக்கம்தான் காரணம்.

நவீன மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்குச் சொத்துரிமைகள் வழங்குவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே முகமது நபியின் காலத்திலேயே இஸ்லாமியச் சட்டம் பெண்களுக்கு முழுமையான சொத்துரிமை வழங்கியுள்ளது.

உயில் மூலமான வாரிசுரிமைக்கான சட்டத்தைப் பார்ப்போம். நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்குகள் கணவனை இழந்த மனைவி மற்றும் மகள்கள் இருந்தாலும் மகன்களுக்கு மட்டுமே சொத்துரிமை அளிக்கப்பட்டதன் உள்ளக் குமுறலால் எழுந்தவையே. உயில் மூலம் எவ்விதக் கட்டுப்பாடுமின்றிச் சொத்துரிமை மாற்றம் செய்வதே பிரச்சினைகளுக்கு காரணமாகும். மூன்றில் ஒரு பாகத்துக்கு மேல் தானமாக வெளியாட்களுக்குத் தருவதற்கு இயல்பான வாரிசுகளின் சம்மதம் தேவை என்கிறது இஸ்லாமியச் சட்டம். அதுவும் மூன்றில் இரண்டு பாகம்தான் அதிகபட்சம் என்கிறது.

இஸ்லாமியச் சட்டம் சொல்வது போலவே இந்திய வாரிசுரிமைச் சட்டத்தையும் மாற்றிவிடுவோம் என்று நினைத்துக்கொள்வோம். என்னவாகும்?

சட்டத் தகராறுகள் குறையும். ஒரு நல்ல பங்கீடாகவும் அது இருக்கும். ஆனால், நல்லதை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, சிறுபான்மையோரைத் தாஜா செய்கிறார்கள் என்ற முணுமுணுப்புகளைத்தான் கேட்போம்.

படிப்படியாகத்தான் மாற்றம்

இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகங்களில் திருமணம் ஒரு புனிதமான பந்தம் என்று கருதப்படுகிறது. அவற்றைவிட திருமணம் ஒரு ஒப்பந்தம் என்று சொல்கிற இஸ்லாமியச் சட்டத்தில், கூடுதலான மதச்சார்பின்மை உள்ளது. இந்து திருமணச் சட்டத்திலும் விவாகரத்துச் சட்டத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘இருவரும் சம்மதித்த விவாகரத்து’ பற்றிய சட்டப் பிரிவுகள் கிறிஸ்தவர்க ளுக்கும் பொருந்தக்கூடியவை. அவை உண்மையில் திருமணங்களைப் பற்றிய இஸ்லாமியப் புரிதலை நோக்கிய நகர்வுதான்.

ஒரு இஸ்லாமியர் நான்கு மனைவிகளை மணந்துகொள்ளலாம் என்பதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? திருமணப் பந்தங்களுக்கு வெளியேயான பாலியல் உறவுகள் மனமொப்பியவையாக இருந்தாலும் அவற்றை நாம் சட்டவிரோதமாக்கியுள்ளோம். சட்டத்துக்குப் புறம்பாகத் திருமணம் செய்துகொள்வதையும் குற்றங்களாக அறிவித்துள்ளோம். ஆனால், இச்சட்டங்களை நாம் மீறாமல் உள்ளோமா?

பல்வேறுவகையான சிவில் சட்டங்களிலிருந்து ஒரு பொதுத்தன்மைக்குச் சட்டங்களின் மூலமாகச் செல்கிற சமூக மாற்றத்தின் வளர்ச்சிப்போக்கு ஒரு நாளில் நடந்துவிடாது. படிப்படியாகத்தான் நடக்கும்.

சுதந்திரமான முன்முயற்சிகள் மூலம் நாம் ஒவ்வொரு தனிநபர் சட்டத்தையும் சீர்திருத்துவோம். ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்குச் சீரான தன்மையோடு இருக்கும் சட்டங்களை நாம் உருவாக்கியிருக்கிறோம்.

கே. கண்ணன்,

பஞ்சாப், அரியாணா நீதிமன்றங்களில் பணியாற்றிய முன்னாள் நீதிபதி.

© ‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: த.நீதிராஜன்



ஏற்கெனவே தாமதித்துவிட்டோம்! - எம்.வெங்கய்ய நாயுடு

சனி சிங்கணாப்பூர், திரயம்பகேஸ்வரர் ஆலயங்களில் பெண்களும் வழிபடலாம் என்று தீவிர போராட்டங்களுக்குப் பிறகு, முற்போக்காக முடிவெடுத்திருப்பது பாராட்டத்தக்கது. இது பாலினச் சமத்துவத்துக்கான நீண்ட பயணத்தில் நல்லதொரு முடிவு. மத சம்பிரதாயங்களில் பெண்களைப் பாரபட்சமாக நடத்தக் கூடாது என்ற விவாதம் தேசிய அளவில் நடந்திருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனையோ துறைகளில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடைபோடத் தொடங்கிய பிறகும் மத சம்பிரதாயங்களில் பின்னுக்குத் தள்ளப்படுவது கவலையளிக்கிறது.

கோவா மாநிலத்தில் அமலில் இருக்கும் ‘கோவா குடும்ப சட்ட’த்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதை நாம் நாடு முழுவதற்குமே விரிவுபடுத்தலாம். போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்திலிருந்து கோவா விடுதலை பெற்ற பிறகும்கூட 1867-ல் இயற்றப்பட்ட ‘போர்ச்சுகீசிய சிவில் கோடு’ அமலில் இருந்தது. முற்போக்கான அச்சட்டமானது குடும்பத்தின் வருமானத்தையும் சொத்துகளையும் ஆண், பெண் வேறுபாடின்றி கணவன், மனைவி, குழந்தைகள் என்று அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்க வழிசெய்கிறது. தாத்ரா-நாகர் ஹவேலி, டாமன் - டையூ ஆகிய பகுதிகளிலும் இது அமலில் இருக்கிறது.

பொதுக் குடிமைச் சட்டத்தின் முக்கியத்துவம்

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எல்லா தனி நபர்களின் உரிமைகளைக் காக்கவும் பொதுக் குடிமைச் சட்டம் இப்போதைய தேவை. அச்சட்டம் பெண்களைப் பாரபட்சமாக நடத்துவதைத் தடுப்பதுடன், நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கும் வலு சேர்த்து ஒற்றுமையை ஓங்கச் செய்யும். ஆனால், அத்தகைய பொதுக் குடிமைச் சட்டத்தை எல்லா மதத்தவர்களும் அதன் சாதக - பாதகங்கள் தொடர்பாக ஆற அமர விவாதித்து, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் அளவுக்குக் கருத்தொற்றுமை ஏற்பட்ட பிறகுதான் கொண்டுவர வேண்டும். எந்த ஒரு சீர்திருத்தச் சட்டமும் மக்களால் ஏற்கப்படாமல் திணிக்கப்படுவது நல்ல பலனைத் தராது. பொதுக் குடிமைச் சட்டம் தொடர்பாக மக்களில் பலருடைய மனங்களில் எழும் சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் நல்ல பதிலை அளித்த பிறகுதான் அதைச் சாத்தியப்படுத்த முடியும்.

இந்தியப் பகுதி முழுவதற்கும் பொதுக் குடிமைச் சட்டத்தை அமல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 44-வது பிரிவு வலியுறுத்துகிறது. அரசியல் சட்ட நிர்ணய சபையில் இது தொடர்பாக நடந்த விவாதத்தில் பேசிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், பொதுக் குடிமைச் சட்டத்தின் தேவையை வலியுறுத்தினார். அதே சமயம், அதை அனைத்துத் தரப்பினரும் விரும்பி ஏற்ற பிறகே அமல்செய்ய வேண்டும் என்றார். “மக்களுடைய வாழ்க்கை முழுவதற்குமான விஷயங்களில் மதத்துக்கு ஏன் இத்தனை இடம் கொடுக்க வேண்டும், மதத்தின் பிடியைத் தளர்த்த ஏன் சட்டமியற்றக் கூடாது? செயற்கையான ஏற்றத் தாழ்வுகள், பாரபட்சமான அணுகுமுறைகள் என்று நம்முடைய அடிப்படை உரிமைகளுக்கு முரணாக நிலவும் இந்த சமூக அமைப்பைச் சீர்திருத்த முடியாவிட்டால் நமக்கெதற்குச் சுதந்திரம்?” என்று அவர் கேட்டார். எந்த மதம், சாதி, இனம் சார்ந்தவர்களானாலும் பொது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மணவிலக்கு, வாரிசுரிமை போன்றவற்றில் தனிச் சட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகிறது.

நீதித் துறையின் நினைவூட்டல்கள்

விவாகரத்து செய்த கணவரிடமிருந்து தனக்கு ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்தார் ஷா பானு. உச்ச நீதிமன்றம் 1985-ல் அளித்த தீர்ப்பில் அவருடைய கோரிக்கையை ஏற்று கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறத் தகுதி உண்டு என்று தீர்ப்பளித்தது. அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான ஒய்.வி.சந்திரசூட், பொதுக் குடிமைச் சட்டம் இருந்தால் சட்டப்படியான சில வேற்றுமைகள் களையப்பட்டு, நாட்டின் ஒருமைப்பாடு வலுப்பெறும் என்று சுட்டிக்காட்டினார். பொதுக் குடிமைச் சட்டம் இயற்ற வேண்டும் என்று நாடாளு மன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அப்போது ஆணையிட்டது.

2003-ல் ஜான் வல்லமாட்டம் எதிர் இந்திய அரசு வழக்கிலும் தலைமை நீதிபதி வி.என்.கரே இதே கருத்தைத்தான் எதிரொலித்தார்.

“அரசியல் சட்டத்தின் 44-வது பிரிவு இன்னமும் அமல்படுத்தப்படாமல் இருப்பது வருத்தத்துக்குரியது. பொதுக் குடிமைச் சட்டத்தை இயற்றும் முயற்சியில் நாடாளுமன்றம் இன்னமும் ஈடுபடாமல் இருக்கிறது” என்றார்.

ஏகப்பட்ட தனிச் சட்டங்கள் இருப்பதால்தான் இத்தனைக் குழப்பமும், பொதுக் குடிமைச் சட்டம் கொண்டுவர அரசு விருப்பமாக இருக்கிறதா என்று 2015 அக்டோபரில்கூட உச்ச நீதிமன்றம் கேட்டது.

மனதில் ஒரு மதச்சார்பற்ற திட்டம்

பொதுக் குடிமைச் சட்டத்துக்கு எதிராக வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் வாதங்களை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமானது, “பிரிட்டிஷ் காரர்கள்கூட இத்தகைய முயற்சியில் ஈடுபடவில்லை. அப்படிச் செய்வது மத விவகாரங்களில் - அதிலும் சிறுபான்மைச் சமூகத்தவரின் விவகாரங்களில் அரசு தலையிடுவதாகிவிடும்” என்றனர். இதைவிட உண்மைக்கு மாறான ஒரு கூற்று இருக்க முடியாது. ஒருவர் கட்டுப்பெட்டியாக மதம் சார்ந்த கருத்தில் ஆழ்ந்திருப்பதே சரி, அதை மாற்றக் கூடாது என்றால், புதிய சட்டங்கள் எதற்கு, அவ்வப்போது அவற்றில் திருத்தங்களும் எதற்கு? சமூகம் வளர்ச்சி அடையும்போது மாறும் சமுதாயச் சூழலுக்கு ஏற்ப அனைத்து மக்களின் நலன் கருதி சட்டங்களைப் புதிதாக அது இயற்றுகிறது, பழைய சட்டங்களில் மாறுதல்களைச் செய்கிறது.

பொதுக் குடிமைச் சட்டம் என்றாலே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் பிரச்சாரம்தான் மேற்கொள்ளப்படுகிறது. பொதுக் குடிமைச் சட்டம் ஏன் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மதக் கருத்துகளுக்கு எதிராகவோ, பழக்க வழக்கங்களுக்கு எதிராகவோதான் இருக்கும் என்று ஏன் நினைக்க வேண்டும்? சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்ட அடிப்படைகளில்தான் பொதுக் குடிமைச் சட்டங்கள் இருக்க முடியும். சிறுபான்மைச் சமூக மக்கள் உள்பட அனைவரின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில்தான் சட்டமியற்ற முடியும். மத அடிப்படையில் யாரும் ஒடுக்கப்படாமல் தடுப்பதற்குத்தான் பொதுக் குடிமைச் சட்டம் பயன்படும்.

பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன்

பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் அமைப்பை நிறுவிய நூர்ஜஹான் சஃபியா நியாஸ், ஜகியா சோமன் என்ற இருவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2015 நவம்பரில் கூட்டாக ஒரு கடிதம் எழுதினர். “1985 ஷா பானு வழக்கு முதல் இன்றுவரை, இந்நாட்டின் விநோத அரசியல் சூழல் காரணமாக முஸ்லிம் மகளிர் தங்களுடைய வாழ்க்கை நிலை குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று யாராலும் கேட்கப்படவேயில்லை. முஸ்லிம் தனிச்சட்டத்தில் திருத்தம் செய்ய முடியாமல் கட்டுப்பெட்டியான, ஆணாதிக்க மனப்பான்மை நிறைந்த சிலர் முட்டுக்கட்டை போட்டே வருகின்றனர். இதன் விளைவாக, முஸ்லிம் மகளிர் என்ற வகையில் திருக்குர்ஆன் அளிக்கும் உரிமைகளையும், இந்தியக் குடிமகள் என்ற வகையில் இந்திய அரசியல் சட்டம் அளிக்கும் உரிமைகளையும் பெற முடியாமல் முஸ்லிம் பெண்கள் தடுக்கப்படுகின்றனர். திருமணம், குடும்ப விவகாரங்கள் தொடர்பாக, முஸ்லிம் பெண்களுக்குச் சாதகமாக மொராக்கோ, துனீசியா, துருக்கி, எகிப்து, ஜோர்டான், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சட்டங்கள் தொகுக்கப்பட்டும் சீரமைக்கப்பட்டும் அமலில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம் நாடுகள். இந்தியப் பெண்களுக்கு இவை மறுக்கப்படுகின்றன.

இதனால், இந்தியச் சமூகத்தில் வாய்மொழியாக ‘தலாக்’ என்று மும்முறை கூறி எளிதில் மணமுறிவை ஏற்படுத்திவருகின்றனர். பலதார மணமுறையும் வழக்கத்தில் இருக்கிறது. நாட்டில் 10 மாநிலங்களில் 4,710 முஸ்லிம் பெண்களிடம் கருத்தறிந்தோம். அவர்களில் 92.1% பேர் வாய்மொழியாக, மூன்று முறை தலாக் கூறி ஒரு தலைப்பட்சமாக மணவிலக்கு பெறுவதைத் தடுக்க வேண்டும் என்றனர். 91.7% பேர் பலதார மணத்தைத் தடை செய்ய வேண்டும் என்றனர். முஸ்லிம்களின் குடும்பச் சட்டத்தைப் புதிதாகத் தொகுப்பது நீதி கிடைக்க உதவும் என்று 83.3% மகளிர் கருத்துத் தெரிவித்தனர்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

சகிப்புத்தன்மை

ஷா பானு முதல் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்த சயாரா பானு வரை வலியுறுத்துவதெல்லாம் ஆண் - பெண் பாகுபாடின்றி தனிச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதே. மாறிவரும் சூழலில் அனைவருக்கும் பொதுக் குடிமைச் சட்டம் அவசியம் தேவைப்படுகிறது. அதன் மூலம்தான் மதச்சார்பின்மையை வலுப்படுத்த முடியும்.

(வெங்கய்ய நாயுடு, நகர்ப்புற வளர்ச்சி, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர்)

தமிழில் சுருக்கமாக: சாரி. ©: ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x