Published : 12 Jan 2014 00:00 am

Updated : 06 Jun 2017 18:03 pm

 

Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2017 06:03 PM

விவேகானந்தர்: என்றும் வாழும் இளமை

விவேகானந்தரைப் பற்றிய முதல் மனப்பதிவு பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் மிகச் சிறிய வயதிலேயே கண்ட நாள்காட்டிப் படங்கள் வழியாகத்தான் வந்திருக்கும். புகழ்பெற்ற அமெரிக்கப் புகைப்பட நிபுணர் தாமஸ் ஹாரிசன் 1893-ல் எடுத்த படம் அது. பக்கவாட்டில் சற்றே திரும்பி, காவிநிறக் கம்பளி உடையுடன், வங்காளத் தலைப்பாகையுடன் கைகட்டி நிமிர்ந்து நிற்கும் அந்தப் புகைப்படம், ஐந்து தலைமுறை காலமாக அளித்துவரும் தன்னம்பிக்கையை எளிதில் விளக்கிவிட முடியாது. வறுமையும் மிடிமையும் ஓங்கி, பட்டினியால் மூடியிருந்த ஒரு தேசம் நமது இந்தியா. தன்னம்பிக்கை குலைந்து உலகை அஞ்சி தனக்குள் சுருண்டுகொண்ட ஒரு தேசம். அதன் இளைஞர்கள் அந்தக் கண்களைப் பார்த்தபோது தங்களை உணர்ந்தனர். விவேகானந்தரின் அந்தக் கண்களில் தெரிந்தது, உலகை எதிர்நோக்கி தலைநிமிர்ந்து நின்ற இந்திய இளமையின் தன்னம்பிக்கை. அந்தப் படம் ஒரு பெரும் படிமம். ‘வா உலகே!’ என்ற அறைகூவல் அதில் இருந்தது.

விவேகானந்தரைப் பற்றி அம்பேத்கர்


சுவாமி விவேகானந்தரைப் பற்றி நூற்றுக் கணக்கான நூல்கள் தமிழில் உள்ளன. அ.லெ. நடராஜன் எழுதிய ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற நூல் முழுமையான அறிமுகம் எனலாம். பல கோணங்களில் விவேகானந்தர் விவாதிக்கப்பட்டிருக்கிறார். வேதாந்திகள், ஆச்சாரவாதிகள் எழுதிய நூல்கள். இடதுசாரிகளான ஜெயகாந்தன் போன்றவர்களின் சொற்கள். அனைவருக்கும் அவர் உத்வேகமளிக்கும் ஆளுமை. எம்.ஓ. மத்தாய் எழுதிய சுயசரிதையில் அம்பேத்கர் மத்தாயிடம் சொல்கிறார், “நம் நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் விவேகானந்தரே. அவரில் இருந்து நவ இந்தியா ஆரம்பிக்கிறது” என்று.

விவேகானந்தர் மதச் சீர்திருத்தவாதி, சமூகச் சீர்திருத்தவாதி, தத்துவ சிந்தனையாளர். அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு ஞானி. ஞானிகள் நம் கையின் விரல்களைப் போல. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான பணி ஒன்று இயற்கையால் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப அவர்களுடைய இயல்பு அமைந்திருக்கிறது. சுட்டுவிரல் போல சிலர். கட்டைவிரல் போல சிலர். சிறுவிரல் போல சிலர். ஆனால், அனைவரும் சேர்ந்து அள்ளுவது ஒன்றையே. ஆகவே, ஞானி என்றால் இப்படித்தான் இருப்பார் என்று நம் சிறிய அறிவைக் கொண்டு வரையறை செய்துகொண்டால், அதன் இழப்பு நமக்கே. ஞானம் நோக்கிய நம் தேடலின் அந்தரங்கமே அவர்களை அடையாளம் காண முடியும்.

விவேகானந்தரின் ஆப்தவாக்கியம்

இந்தியாவில் ஞானிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ‘ஊரிடும் சோறு துணிதரும் குப்பை’ என வாழும் பல்லாயிரவர் இங்கே இருந்தார்கள். அவர்களில் ஒருவர் நம் மக்களை, நம் தேசத்தை, நம் பண்பாட்டை, நம் அரசியலை நோக்கித் திரும்ப வேண்டுமென விதி இருந்திருக்கலாம். அவ் வண்ணமே வந்த ததாகதர், விவேகானந்தர். இந்த தேசத்தைத் தளையிட்டிருந்த அடிமைத்தனமும் அதன் விளைவாக நிகழ்ந்த பெரும் பஞ்சங்களும் அவர் அப்படி வருவதற்கு நிமித்தமாயின. இந்த தேசத்தில் அளிக்கப்பட்டிருந்த ஆங்கிலக் கல்வி அதற்குக் கருவியாகியது. அன்று உருவாகிவந்திருந்த ரயிலும் அச்சும் அதற்கு வாகனங்களாயின. வந்துசென்றார் அவர். இந்த மண் துயில்விட்டெழுந்தது.

அதுவே விவேகானந்தரின் பங்களிப்பு. இந்த தேசத்தில் உருவான ஒட்டு மொத்த தேசியத் தன்னுணர்ச்சியின் விதை அவரே. பட்டினியாலும் பேத சிந்தனைகளாலும் செத்து மக்கிக்கொண்டிருந்த இந்தியாவைக் கண்டு அடைந்த அறச் சீற்றத்தின் அனல்தான் விவேகானந்தரிடமிருந்து வெளிப்பட்டது. “எழுக, விழித்தெழுக, குறிக்கோள்வரை அயராது செல்க” என்ற உபநிடத வரியை அவர் இந்தியாவுக்கு அளித்த ‘ஆப்தவாக்கியம்’ எனலாம்.

நவீன சிந்தனையின் தொடக்கப்புள்ளி

அவரது எழுத்துகளில் இருந்தே இந்த தேசத்தின் அனைத்து நவீன சிந்தனைகளுக்கும் தொடக்கப்புள்ளிகளைக் கண்டுகொள்ள முடியும். இந்தியாவின் நிலவரைபடம் பற்றிய ஒரு பிரக்ஞை அவரது எழுத்துகளில் ஓடுகிறது. அதுவே இந்தியாவுக்கு அவர் அளித்த முதல் கொடை. பத்ரிநாத்தில் இருந்து கன்னியாகுமரி வரை, ஆதிசங்கரர் சென்ற திசைக்கு நேர்எதிர் திசையில் அவர் பயணம் செய்தார். அவர் வழியாக அந்த வரைபடம் அவர் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பேசப்பட்டது. நவஇந்தியா என்ற கனவு அதனூடாக முளைத்தெழுவதை அவரைச் சந்தித்த ராஜம் அய்யர் போன்றவர்கள் எழுதிய குறிப்புகள் வழியாகக் காணலாம்.

இந்திய ஆன்மிக மரபு அன்று மத வழிபாடுகள், சடங்குகள் மற்றும் ஆசாரங்களுடன் பின்னிப் பிணைந்து கிடந்தது. அந்த சிக்கலைப் பிரித்து நோக்க முடியாமல், ஒட்டுமொத்தமாக அதை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு, புதியதாக உருவாக்கிவிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கும் பிரம்ம சமாஜம் போன்ற மத-சமூக சீர்திருத்த இயக்கங்களும், இந்திய ஞானமரபின் ஏதேனும் ஒன்றை மட்டும் மையமாக்கி, பிற அனைத்தையும் அதைச் சுற்றிக் கட்டி எழுப்பிவிடலாம் என்ற நம்பிக்கை கொண்ட ஆரிய சமாஜம் போன்ற இயக்கங்களும் அன்று இருந்தன.

விவேகானந்தரின் பங்களிப்பு என்பது இந்திய மெய்ஞான மரபின் சாராம்சமான விஷயங்கள் அனைத்தையும் அடையாளம் கண்டது. அவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொண்டது. அதை கம்பீரமான மொழியில் இந்தியாவை நோக்கிச் சொன்னது. இந்திய மெய்ஞானத்தின் மொழி அவர் வழியாகவே சம்ஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலமாக மாறியது என்று சொல்லலாம். மடங்களிலும் குருகுலங்களிலும் இருந்த வேதாந்தம் இந்திய இளைஞர்களின் தத்துவமாக ஆகியது.

மார்க்ஸியரும் விவேகானந்தரும்

இன்றும் இந்தியச் சிந்தனையின் ஒட்டுமொத்தத்தைப் பார்க்கும் ஒரு சிந்தனையாளர், விவேகானந்தரைத் தன் ஆசிரியராக அடையாளம் கண்டு கொள்வார். மிகச் சிறந்த உதாரணம், மார்க்ஸிய தத்துவ சிந்தனையாளரான கே.தாமோதரன். மார்க்ஸிய நோக்கில் இந்திய சிந்தனையை வகுத்துரைக்க முற்பட்ட அவருக்குத் தன் உடனடி முன்னோடியாக விவேகானந்தரே தோன்றினார். இடதுசாரிகள் இன்று விவேகானந்தர் பெயரைச் சொல்ல அவரே காரணம்.

விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சியின் முதல் குரல். இடிந்து மக்கிய நமது கூரைமீது ஏறி நின்று, பொன்னிற உதயவானம் நோக்கிப் பொன்னிற இறகுகளை விரித்துச் சிறகடித்துக் குரலெழுப்பிய சேவல். இந்திய வரலாற்றாய்வின் மாதிரி வடிவம்பற்றி, இந்தியாவுக்கே உரிய கல்விமுறைபற்றி, இந்தியாவுக்கான வெகுஜன ஜனநாயக அரசியல்பற்றி முதல் சிந்தனைகளை அவரே முன்வைத்தார். இந்திய இலக்கியத்துக்கான முன்வடிவம்பற்றிப் பேசியிருக்கிறார். இந்தியக் கலைகளுக்கான அடிப்படை வடிவம்பற்றி விவாதித்திருக்கிறார். இந்தியாவுக்குரிய சுயமான கட்டடக் கலை பற்றியும், ஓவியக் கலை பற்றியும்கூட அவரே முதலில் பேசியிருக்கிறார். உதாரணமாக, இந்தியாவின் மாபெரும் முன்னோடிகள் பெரும்பாலானவர்கள். இந்திய ஓவியக் கலைக்கான அடிப்படைகளை உருவாக்கிய முதற் தூண்டுதலும் வழிகாட்டலும் அவனீந்திரநாத தாகூர் போன்றோருக்கு விவேகானந்தரில் இருந்தே கிடைத்தது.

இந்தியா என்றுமே ஞானபூமியாகக் கருதப்பட்டு வந்தது. மூத்தோரின் முதியோரின் தேசம், பழைமையின் தேசம் என்றே நம்மைப் பற்றி நாம் எண்ணியிருந்தோம். அந்த மனப்பதிவை உடைத்து பிறந்தெழுந்த இளைஞர் அவர். குழந்தைத்தன்மை நீங்காத அவரது அழகிய முகம், புதிய இந்தியாவின் சின்னமாகியது. இந்நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்தவர்கள், இங்கே உருவான புரட்சியாளர்கள், இங்கே கலையையும் இலக்கியத்தையும் உருவாக்கியவர்கள் பெரும்பாலானோர் இளமையில் தங்களை விவேகானந்தருடன் அடையாளம்கண்டிருப்பார்கள்.

இன்றும் இருந்துகொண்டிருக்கிறது அந்த அழகிய முகம். என்றும் மாறாத இளமையிலேயே அவரை நம் நினைவுகளில் நீடிக்கச் செய்த விதி பெரும் கருணை கொண்டது.

ஜெயமோகன், எழுத்தாளர், சமூக விமர்சகர், தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.comவிவேகானந்தர்பிறந்த நாள்மார்க்ஸியம்ஆப்தவாக்கியம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x