ஜிகா காய்ச்சலும் பாஜக அரசின் அலட்சியமும்!

ஜிகா காய்ச்சலும் பாஜக அரசின் அலட்சியமும்!
Updated on
2 min read

இந்தியாவில் ‘ஜிகா’ வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததை மத்திய சுகாதார அமைச்சகம் பல மாதங்களுக்கு வெளிப்படையாக அறிவிக்காமல் மூடி மறைத்து வந்தது. மூன்று பேருக்கு அத்தொற்று ஏற்பட்டிருந்தது. முதல் சம்பவம் 2016 நவம்பரில் 64 வயது ஆணைப் பரிசோதித்ததில் தெரிந்தது.

மத்திய சுகாதாரத் துறை, ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள நிர்வாக நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் புறக்கணித்தது தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தீவிர விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடமை மீறல்

இது தொடர்பாக, செய்தி ஊடகங்களுக்குத் தெரிவிக்காமலும் உலக அளவிலான சுகாதார சமூகத்துக்கு அறிவிக்காமலும் மரபு மீறப்பட்டிருக்கிறது. எந்த மாநிலம் அல்லது எந்த மாநிலத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறதோ அங்கே முதலில் அறிவிக்க வேண்டும், பிறகு பக்கத்து நாடுகளுக்குத் தெரிவிக்க வேண்டும். காரணம் இந்த நோய்த் தொற்று எங்கிருந்து, எப்படித் தொற்றியிருக்கும் என்று கண்டறியவும், கட்டுப்படுத்தவும் இந்த அறிவிப்புகள் அவசியம்.

அத்துடன் இது மேலும் பரவாமல் தடுக்க உள்நாட்டில் மருத்துவத் துறையினரையும் மக்களையும் எச்சரிக்க வேண்டியது அரசின் அத்தியாவசியக் கடமையாகும். இந்த அறிவிப்புகள் முறையாக உரிய காலத்தில் வெளியாகியிருந்தால் வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்களும் உள்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்கிறவர்களும் உரிய வகையில் எச்சரிக்கப்பட்டிருப்பார்கள். நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் அல்லது அறிகுறிகள் இருப்பதான சந்தேகத்துக்கு உள்ளானவர்களை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உள்படுத்தி சிகிச்சை அளிக்கவும், நோய்த் தொற்று பரவாமலும் தடுப்பதற்கு நிச்சயம் உதவும்.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள பாபு நகர் பகுதியில் கிட்டத்தட்ட 35,000 பேரின் ரத்த மாதிரிகளை எடுத்து மிகப் பெரிய அளவில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர் என்பதுகூட அவர்களுக்குத் தெரிவிக்கப்படவே இல்லை. அதிருஷ்டவசமாக நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கட்டுப்படுத்தப்படும் என்று இதைத் தொடங்கியபோது அரசுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

புறக்கணிக்கப்படும் சுகாதாரம்

இந்த விவகாரம் இன்னொரு குறைபாட்டை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. நம் நாட்டில் அரசியல், பொருளாதாரம், வணிகம், ஆன்மிகம், சினிமா, விளையாட்டு ஆகிய துறைகள் குறித்து செய்திகள் தருவதில் முன்னணியில் உள்ள ஊடகங்கள் சுகாதாரம் தொடர்பானவற்றில் ஆர்வமின்றியோ, அடிப்படைகளையே புரிந்துகொள்ளாமலோ இருக்கின்றன. எனவே சுகாதாரம் பற்றிய செய்திகள் உயர்ந்த தரத்துடன், பொது நன்மையைக் கருதி வெளியாவது குறைவாக இருக்கிறது.

சுகாதாரத் துறை பற்றிய செய்திகளைத் தருவதென்றால் அதற்கு அடிப்படை அறிவியல் அறிவு அவசியம். ஒரு நோயின் தொற்றும் தன்மை, வரலாறு, நோய்க்கான அறிகுறி, அது எப்படி ஏற்படுகிறது, அது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள், சிகிச்சை முறை, பரவியுள்ள நோயின் தன்மை, குறிப்பிட்ட சமூகக் குழுக்களிடையே இந்த நோயின் தீவிரம் எப்படி இருக்கிறது என்ற விவரங்களைச் செய்தி ஊடகங்கள் தர வேண்டும். இந்தத் துறை வளரவும் வெற்றி பெறவும் அரசு நிர்வாகத்தில் குறிப்பாக, சுகாதாரத் துறையில் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும். நோய்த் தொற்று அல்லது நோய் முற்றிய நிலைகளை மூடிவைக்க முயற்சிக்கக் கூடாது.

ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் ஐந்து நாள்களில் அதன் அறிகுறிகள், அறிகுறிகள் தென்பட்டால் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வெளிவந்தன. போகப்போக ஆர்வம் குறைந்தது, ஊடகங்கள் சார்பில் தீவிரக் கேள்விகள் எழுப்பப்படவில்லை. அதற்குப் பிறகு அரசும் ஊடக சந்திப்பில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், பாபு நகரில் பாதிக்கப்பட்டவர்களிடம் ரத்த மாதிரிகளை எடுத்தது குறித்து அவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று விளக்க அரசு கடமைப்பட்டிருக்கிறது.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in