Last Updated : 26 May, 2017 10:15 AM

 

Published : 26 May 2017 10:15 AM
Last Updated : 26 May 2017 10:15 AM

மதுரைக்கரசியின் கல்யாண விருந்து!

கோயில் அன்னதானத்துல சாப்பிட்ட ருசி ஒருத்தருக்கு எத்தனை நாள் ஞாபகம் இருக்கும்? மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்துல (மே 7) சாப்பிட்டது இன்னமும் எனக்கு ஞாபகத்துல இருக்குது. 2008-ன்னு நினைக்கிறேன்.. என் காதல் கரை சேருமாங்கிற சந்தேகத்துல இருந்தப்ப, நல்லபடியா கல்யாணத்துல முடியணும்னு வேண்டிக்கிட்டு, மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்துல கலந்துகிட்டேன். அப்ப, பிரசாதமாக் கெடைச்ச மஞ்சள் கயிறும், குங்குமமும் (ரெண்டு செட்) இன்னும் பத்திரமா இருக்குது. அதே பொண்ணோட கல்யாணமாகிட்டதால அதுக்குப் பெறகு நான் மீனாட்சி திருக்கல்யாணத்துக்குப் போனதே இல்ல. ஆனா ஒண்ணு, ஒருவாட்டிகூட திருக்கல்யாண விருந்தை மிஸ் பண்ணுனதே இல்ல.

காரணம் இருக்கு.. இது சாதாரணமா கோயில்கள்ல வழங்குற பிரசாதமோ அன்னதானமோ கிடையாது. மதுரை அரசியின் கல்யாண விருந்துன்னு அடிச்சிச் சொல்வேன். வெளியூர்க்காரர்கள் ஒருதடவை வந்து பார்த்தீங்கன்னா, அரண்டுபோயிடுவீங்க. கோயில் நிர்வாகமோ, விருந்துக் குழுவோ ஒரு பைசாக்கூட செலவழிக்காம, ஒரு லட்சம் பேருக்குப் போதும் போதும்ங்கிற அளவுக்கு விருந்து போடுறதெல்லாம் சாதாரணமான விஷயமா என்ன?

மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கம், பாரதியார் தமிழ் வாத்தியாரா வேலை பார்த்த சேதுபதி பள்ளிக்கூடம் இருக்குது பாருங்க.. அங்கதான் வட்டவட்டம் திருக்கல்யாண விருந்து நடக்கும். விருந்து ஏற்பாட்டைப் பார்க்கிறதுக்குன்னே இந்தவாட்டி, முன்கூட்டியே அந்தப் பள்ளிக்கூடத்துல போய் உட்கார்ந்துட்டேன். அரண்மனை சமையல்கூடத்தில் இருக்கிறது மாதிரி ஒரு பிரமிப்பு எனக்கு. பெரிய பெரிய பணக்காரங்க முதல் கசங்கிய ரேஷன் சேலை உடுத்திய ஏழைப் பெண்கள் வரைக்கும் யாராரெல்லாமோ சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் கொண்டாந்து குவிச்சிக்கிட்டிருந்தாங்க. 20 மூட்டை அரிசி தர்றவரையும், 100 கிராம் கடுகு மட்டும் கொடுக்கிறவரையும் ஒரே மாதிரி மதிச்சி, பொருளை வாங்கிக்கிட்டது விருந்து கமிட்டி. தக்காளி, கத்தரி, முருங்கைக் காய் மாதிரியான நாட்டு காய்கறிகள் குட்டி யானையில் வந்திறங்குச்சின்னா.. உருளை, வெங்காயம், கேரட், பீன்ஸ் மாதிரியான மலைக் காய்கறிகளோ பெரிய பெரிய லாரியில வந்து இறங்குச்சி. மொத்தம் எவ்ளோ காய்கறின்னு விசாரிச்சேன். என்ன.. 12 டன் இருக்கும்னு சொன்னாரு ஒருத்தர். நிறையப் பேரு அவங்கவங்க வீட்ல இருந்து அரிவாள்மணையோட பள்ளிக்கூடத்துக்கு வந்து, சொந்த வீட்டுக் கல்யாணம் மாதிரி உரிமையோட காய்கறி நறுக்க ஆரம்பிச்சாங்க. வாலுப்பசங்க எல்லாம்கூட பவ்யமா உட்கார்ந்து பூண்டு உரிச்சிக்கிட்டு இருந்தாங்க. தாளிக்கிறதுக்காக நறுக்குன கறிவேப்பிலையே 150 கிலோவுக்கு மேலன்னா, கலர்கலராக் குவிச்சி வெட்டி வெச்சிருந்த காய்கறிகளின் அளவைச் சொல்லணுமா என்ன?

காய்கறி நறுக்க, சமையல் செய்ய, ஒத்தாசை செய்ய, விருந்து பரிமாற, சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்யன்னு ஒரு பெரிய படையே சுறுசுறுப்பா வேலை பார்த்துக்கிட்டு இருந்துச்சி. சமையல் வேலை தடைபடக்கூடாதுன்னு இன்டேன், எச்.பி., பாரத் எரிவாயு நிறுவன டீலர்கள் கூட்டுசேர்ந்து மொத்தம் 80 சிலிண்டர்களை நன்கொடையாகக் கொடுத்திருந்தாங்க.

மறுநாள் நான் சாப்பிடப் போனப்ப, வரிசை விருந்து பரிமாறும் இடத்துக்கு வந்திருச்சிங்கிறத, கமகம வாசனையே சொல்லுச்சி. பெரிய பெரிய அண்டாக்களில் இருந்த சாப்பாட்டைத் தலையிலும், கையிலும் பாலிதீன் உறை மாட்டிக்கிட்டு, சுத்தமாப் பரிமாறுனாங்க இறைப் பணியாளர்கள். திருப்பதி, சபரிமலையில் நீளமான வரிசையில காத்திருந்தவங்க சுவாமியை நெருங்கியதும் எப்படிப் பரவசமாவார்களோ, அதே பரவசம் எனக்கு. கையில் பாக்குத் தட்டு கிடைச்சதுமே எச்சி ஊற ஆரம்பிச்சிடுச்சி. அதுல சாம்பார் சாதம், உருளைக்கிழங்கு கூட்டு, தயிர்சாதம், மாங்காய் ஊறுகாய், சர்க்கரைப் பொங்கல் எல்லாம் வெச்சாங்க. கல்யாண வீடு மாதிரி பெரிய சாமியானா பந்தல் பூராம் வரிசையா டேபிள் போட்டிருந்தாங்க. அது பக்கத்துல நின்னுக்கிட்டே, ஊதி ஊதி விருந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தேன்.

ஒரு பக்கம் விருந்து நடந்தா, இன்னொரு பக்கம் சமையல் விறுவிறுப்பா நடந்துக்கிட்டு இருந்துச்சி. அஞ்சாறு பேரு ரோபோ போல வேகமாக வடை சுட்டுக்கிட்டு இருக்க, நிறைய பேர் அண்டாக்கள கிளறிக்கிட்டிருந்தாங்க. குப்பை லாரியும், தண்ணி லாரியும் வர்றதும் போறதுமா இருந்துச்சி. ராஜாவ பார்க்கலாட்டியும், அரண்மனை விருந்தைப் பார்த்த திருப்தி எனக்கு. அங்கிருந்த பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை பெரியவர் சாமுண்டி விவேகானந்தனைப் பாராட்டுனேன். “இந்த விருந்தை நடத்துனது நாங்க இல்ல தம்பி. அன்னை மீனாட்சிதான் நடத்துனா. நாங்க வெறுமனே பரிமாறும் கரண்டிதான்”ன்னு தன்னடக்கத்தோட சொன்னாரு.

விருந்து சாப்பிடும்போது பக்கத்துல இருந்த ஒரு அம்மா சொன்னாங்க, “நேத்தைக்கு மாப்பிள்ளை (சுந்தரேஸ்வரர்) அழைப்புக்கும் விருந்து போட்டாங்க. சாயந்திரம் 7 மணிக்கு ஆரம்பிச்சி ராத்திரி 12 மணி வரைக்கும் பந்தி பரிமாறினாங்க. கேசரி, பொங்கல், அப்பள பஜ்ஜின்னு எப்படியும் 20 ஆயிரம் பேர் சாப்பிட்டிருப்பாங்க” என்றார்.

அடடா, அதை மிஸ் பண்ணிவிட்டோமேன்னு நினைச்சிக்கிட்டே, பக்கத்துத் தட்டைப் பார்த்தா, வடை. என்ன கொடுமை மீனாட்சி என்று சிறு வருத்தத்தோடு ஆபீஸ் திரும்பினேன். அங்கே கிருஷ்ணமூர்த்தி அண்ணன் எனக்காக வடை வாங்கி வெச்சிருந்தார். எல்லாத்துக்கும் படியளக்கிற மீனாட்சி என்னை மட்டும் விட்டுடுவாளா என்ன? நல்ல வேளையா குண்டோதரன் வரலை. அவன் வந்து சாப்பிட்டிருந்தா, பாவம் தண்ணிக்கு என்ன பண்ணியிருப்பான்? வைகையே வறண்டுகிடக்குதே?

- கே.கே.மகேஷ்

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x