

ஆச்சர்யத்தை ஆனந்தி அம்மாள் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். வயது 51 ஆகிறது. சமூகத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துவிட்டவர். குறிப்பாக, மது ஒழிப்புப் பணி. சில நாட்களுக்கு முன்பு மதுரை வீதிகளில் அவர் தலைவிரி கோலத்தில் ஆவேசமாகப் பேசியது மிரட்சியாக இருந்தது.
“அன்று பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டாள் கண்ணகி. இன்று தமிழக முதல்வரிடம் நீதி கேட்கிறோம் நாங்கள். மதுவால் கொத்துக்கொத்தாகப் பெண்கள் கணவனை இழந்துகொண்டிருக்கிறார்கள். பெண்களின் தாலிகள் அறுந்து கொண்டிருகின்றன. அவர்களின் மஞ்சள் எங்கே? குங்குமம் எங்கே? தமிழக அரசே! மதுக்கடைகளையெல்லாம் மூடு” என்று பெருங்குரலில் கதறுகிறார்.
அவருடனான பயணத்தில் கிராமங்களிலிருந்து கூட்டம் கூட்டமாகப் பெண்கள் வந்து கண்ணீர் சிந்துகிறார்கள். கடைய
நல்லூரில் ஒரு பெண் தனது 15 வயது மகளைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். ஆனந்தி அம்மாளைப் பார்த்ததும், “சாராயத்தாலதான் எல்லாப் பிரச்சினையும். இன்னைக்கு என் புருஷனுக்கு லீவு. வீட்டுலதான் நல்லாக் குடிச்சிக்கிட்டு இருக்கு. வயசுப் புள்ளையை வீட்டுல விட்டுட்டுப் போறதுக்குப் பயமா இருக்கு. அதான் கையோட வேலை செய்யற இடத்துக்கு அழைச்சிட்டுப் போறேன்” என்று அழுதுவிட்டுச் சென்றார். வயதுக்கு வந்த பெண்ணைத் தந்தை யிடம் விட்டுச் செல்ல அச்சம்.
சிப்பிக்குளம் கிராமத்தில் கணவனை இழந்த பெண்கள் 20 பேர் கும்பலாக வந்து அழுதுவிட்டுச் சென்றார்கள். உசிலம்பட்டி மதுக்கடை வாசலில் தந்தையுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக் கிறான் சிறுவன் ஒருவன். வழி நெடுக வலிகள். கண்ணீர் தெறிக்கும் கதைகள்.
மதுக்கடை வாசலில் 300 பிணங்கள்
ஆனந்தி அம்மாள் வசிப்பது சென்னை ராயபுரம். இதுவரை அவர் சுமார் 2,500 அநாதைப் பிணங்களை அடக்கம் செய்திருக்கிறார். “சென்னையில எங்கே அநாதைப் பிணம் கிடந்தாலும் போலீஸ் போன் பண்ணுவாங்க. எடுத்து அடக்கம் பண்ணுவேன். சராசரியா பத்துல ஏழு பிணங்கள் குடிச்சிட்டு செத்ததாதான் இருக்குது. மதுக்கடை வாசல்ல மட்டும் இதுவரைக்கும் சுமார் 300 பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணியிருக்கேன்.”
“மதுரை டி.கல்லுப்பட்டிக்குப் பக்கத்துல இருக்கிற கிராமம் வள்ளிவேலன்பட்டி. அங்கே மட்டும் மதுவால் கணவரை இழந்த பெண்கள் 22 பேர் இருக்காங்க. ஒவ்வொருத்தருக்குப் பின்னாடியும் பெரிய சோகக் கதை இருக்கு. தேனி கன்னிப்பட்டி சுத்துவட்டாரக் கிராமத்துல 25 பெண்கள் கணவரை இழந்திருக்காங்க. உசிலம்பட்டியில் 30 பேர் இருக்காங்க. மதுவால் கணவரை இழந்தவர்களின் நாடாகிவருகிறது தமிழகம். மதுவால் கணவரை இழந்தவர்கள் என்கிற புள்ளிவிவரத்தை எடுத்தால் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கும்...” என்கிறார் ஆனந்தி அம்மாள்.
பிரச்சாரம் மட்டுமல்ல, உதவிகளும் உண்டு!
ஆனந்தி அம்மாள் மது ஒழிப்புப் பிரச்சாரத்தில் மட்டும் ஈடுபடுவதில்லை. மதுவால் கணவரை இழந்த பெண்களுக்குத் தனது அமைப்பு மூலம் உதவிகளும் செய்கிறார். மதுரை வள்ளிவேலன்பட்டியில் கணவரை இழந்த 22 பெண்களுக்கு ஆடு வாங்கிக் கொடுத்திருக்கிறார். இட்லிக் கடை வைத்துத்தந்திருக்கிறார். வயலுக்கு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்கிக்கொடுத்திருக்கிறார். தேனி மாவட்டம், கன்னிப்பட்டியில் மதுவால் கணவரை இழந்த 25 பெண்களுக்குத் தையல் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கிக்கொடுத்திருக்கிறார். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஆனந்தி அம்மாளின் அரவணைப்பு நீள்கிறது.
இவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்!
தினமும் ஏராளமான பெண்கள் தொலைபேசியில் பேசுகிறார்கள். மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். ‘என் மகனை மீட்பது எப்படி?, ‘கணவரை மீட்பது எப்படி?’ என்று கேட்கிறார்கள். “நாலு நாளா தொடர்ந்து குடிச்சிட்டே இருந்து, காலையில இருந்து மயக்கமா கெடக்கிறார். உசுரு இருக்கா, இல்லையான்னுகூடத் தெரியலை. காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். யார்கிட்ட உதவி கேட்குறதுன்னுகூடத் தெரியலை...” என்று ஒரு பெண் கதறுகிறார். மதுவின் பிடியிலிருந்து மீட்க உதவும் அமைப்பான ‘ஆல்கஹால் அனானிமஸ்’ பற்றிப் படித்தோம். அந்த அமைப்பின் தோழமை அமைப்பாகக் குடும்ப உறுப்பினர்களுக்கான ஓர் அமைப்பு உள்ளது. இதுவும் உலகம் முழுவதும் செயல்படுகிறது. இதன் பெயர் ‘அல் அனான்’ (Al - anon). அதாவது, குடிநோயாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். ‘ஆல்கஹால் அனானிமஸ்’ அமைப்பு போலவே தினமும் ஓரிடத்தில் கூடுவார்கள். இவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காகத் தங்களின் அனுபவம், பலம், நம்பிக்கை ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்கிறார்கள். குடும் பத்தில் குடித்துவிட்டு வரும் கணவரிடம், தந்தையிடம், மகனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மருத்துவ/மனரீதியாகப் பேசுவார்கள்.
குடிநோய் ஒரு குடும்ப நோய் எனவும், வித்தியாசமான அணுகுமுறை மூலம் குணமடையச் செய்ய முடியும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். இந்த அமைப்பு எந்த மதத்தையோ அரசியல் அமைப்பையோ நிறுவனத்தையோ சார்ந்தது அல்ல. இவர்கள் வெளிவிவகாரங்களிலும் தலையிடுவதில்லை. இதில் உறுப்பினர் ஆவதற்கு சந்தா கிடையாது. உறுப் பினர்கள் மனமுவந்து அளிப்பதன் மூலம் ‘அல் அனான்’ தன்னையே ஆதரித்துக்கொள்கிறது. வெளியிலிருந்து வரும் நிதியுதவிகளையும் ஏற்பதில்லை. அடையாளம் காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். ‘அல் அனான்’ அமைப்பின் ஹெல்ப் லைன் எண்கள்: 89391 83594, 86820 80064, 94894 47100.
(தெளிவோம்)
- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in