Last Updated : 04 Nov, 2013 10:33 AM

Published : 04 Nov 2013 10:33 AM
Last Updated : 04 Nov 2013 10:33 AM

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?

சென்னையில் பெரும் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றில் ஓர் அறிவிப்பைப் பார்த்தேன். அன்று வந்துசேர்ந்த ஆங்கில நூல் ஒன்று 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது என்று சொன்னது அது. பரபரப்பாக விற்கும் ஒரு தமிழ் நூல் வருடம் 2,000 பிரதிகள்தான் விற்கும். அதில் 1,500 பிரதிகள் நூலகத்துக்கு வாங்கப்படுபவை. தமிழகம் முழுக்க 500 பிரதிகள் வாசகர்களிடம் விற்கப்பட்டால் அது ஒரு சாதனை!

நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறது. ஆனால், தாய்மொழிகளில் வாசிப்பதில்லை. காரணம், இந்தியாவெங்கும் ஆங்கிலக் கல்வி பரவலாகிவருகிறது. உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக் கல்விக்குரிய மொழி என நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. ஆகவே, எதிர்காலத்திலும் ஆங்கிலமே இங்கே கல்வியின் மொழியாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.

ஆங்கிலக் கல்வியால் தாய்மொழிக் கல்வி கைவிடப்படுவதைக் கண்டு, இந்திய மாநில அரசுகள் தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்குகின்றன. விளைவாக, குழந்தைகள் இரண்டாவது மொழியாகத் தாய்மொழியை எடுத்து, பள்ளி இறுதிவரை அதைப் படிக்கின்றனர். ஆனால், அது இரண்டாவது மொழியாக இருப்பதாலேயே அதில் அவர்களுக்குக் கவனம் நீடிப்பதில்லை.

பிரெஞ்சு அல்லது சம்ஸ்கிருதத்தை இரண்டாம் மொழியாக எடுத்துப் பயிலும் குழந்தைகள், எப்படி அம்மொழிகளைக் கற்கின்றனவோ அப்படித்தான் இன்று நம் குழந்தைகளும் தாய்மொழியைக் கற்கின்றன. அதாவது, தேர்வுகளில் எளிதாக வெல்வதற்கு மட்டுமே தட்டுத்தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனர். இந்த உண்மையை நாம் மழுப்ப வேண்டியதில்லை.

அவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? இளமையில் இரண்டு மொழிகளின் எழுத்து வடிவங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம். இன்று ஏதேனும் ஒரு துறையில் தகுதியுடையவராக ஆக வேண்டுமென்றால், மிக விரிவான பல்லாண்டு காலக் கல்வி தேவைப்படுகிறது. ஆகவே, கல்விக்கு உதவாமல் வெறுமே மொழியறிவுக்காக மட்டுமே கற்கப்படும் இரண்டாம் மொழியை விட்டுவிடுகிறார்கள்.

மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். க என்ற எழுத்தைப் பார்த்ததும் அந்த ஒலி நினைவுக்கு வருவதற்கு நாம் இளமையிலேயே குழந்தைகளைப் பழக்குகிறோம். நமக்கு அது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

எழுதுவது என்பது இன்னும் சிக்கலானது. சமூகவியல் ஆய்வாளரான மிஷேல் ஃபூக்கோ “எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார். நம் குழந்தைகளுக்கு அதைக் கட்டாயமாக ஆக்கியிருப்பதால் அவர்கள் இளமையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் அது மிகக் கடினமான ஓர் உழைப்பு. மிருகங்களையும் பறவைகளையும் வித்தைக்காகப் பழக்குவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உண்மையில் இல்லை.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. க என்றாலும் ka என்றாலும் ஒரே உச்சரிப்புதான் என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது. மேலும், எழுத்துகளைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. இது கல்வி அல்ல, பயிற்சி. தொடர்ந்து நிகழும் பயிற்சியே நம்மிடம் நீடிக்கும். நம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கான வழிமுறைகளைத்தான் நாம் யோசிக்க வேண்டும். இன்று நானறிந்து தமிழகத்தில் இணையம், ஃபேஸ்புக் போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. ஒரு வாரத்தில் அவர்கள் ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதும் பயிற்சியை அடைந்துவிடுகிறார்கள்.

நான் பதின்மூன்றாண்டு காலமாக ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன். பேசும் வேகத்தில் எழுத முடியும் என்னால். கண்ணெதிரே தமிழ் தெரிகிறது, என் கைகளில் ஆங்கில எழுத்துருக்கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழை நான் சரளமாக வாசிக்கவும் செய்வேன். ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது?

பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா? நாம் தமிழைப் பேசிக்கொண்டிருக்கும்வரை தமிழ் நம்முடன் இருக்கும். அதை அனைவரும் சரளமாக வாசிப்பதற்கான வழியை மட்டுமே யோசிக்கிறேன். உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும். ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

உடனடியாகச் செய்யக்கூடியதல்ல இது. ஆரம்பப் பள்ளி முதலே ஆங்கில எழுத்துகளில் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வருடத்தில் இதைக் கற்றுக் கொள்ளும். அதற்கேற்ப தொடர்ச்சியாகத் தமிழின் நூல்களை எல்லாம் அந்த எழுத்துருவுக்கு மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு எழுத்துருக்களுமே ஒருதலைமுறைக் காலம் புழக்கத்தில் இருக்கலாம். மேலும், இன்றைய தொழில் நுட்பத்தில் எந்த ஓர் எழுத்தையும் ஓர் எழுத்துருவிலிருந்து இன்னொன்றுக்கு எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.

மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படு கின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது. மலாய் மொழி வாழவும் செய்கிறது. அதன் எழுத்துருக்களைத் தனியாக எவரும் பயில வேண்டியதில்லை. கொஞ்சம் பேசத் தெரிந்தவர்கள் அதை வாசித்துவிடலாம். ஆங்கில எழுத்துருக்கள் மலாய் மொழியை வளப்படுத்தவே செய்கின்றன. இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். தென்னக மொழிகளைப் பிரிப்பது அவற்றின் வேறுபட்ட எழுத்துருக்கள்தான். மற்றபடி அவை 70% ஒன்றே.

எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ் ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன. அந்த எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து உருவாகிவந்தது. அந்த எழுத்துரு கைவிடப்பட்டு, இன்றைய எழுத்துரு வந்திருக்கிறது. அச்சு வடிவுக்கு வந்த பின் இந்த எழுத்துருவில் ஏராளமான மாறுதல்கள் வந்துள்ளன. பயிற்சி பெற்ற ஒருவரே நூறாண்டுகளுக்கு முந்தைய சுவடிகளை வாசிக்க முடியும். வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது. அது காதில் தமிழ் கேட்கும் சூழல்கொண்ட, தமிழைப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் தமிழில் வாசிக்கும் சூழலை உருவாக்கும். தமிழ் வருங்காலத்திலும் வாசிக்கப்படும். இல்லை யேல், தமிழ் ஒருவகைப் பேச்சு வழக்காக மட்டுமே நீடிக்கும். அதில் இலக்கியமும் அறிவுத் துறைகளும் நிகழாமல் போகும். சம்ஸ்கிருதம்போலப் பாதுகாக்கப்படும் தொல்பொருளாகவோ பல்வேறு பழங்குடி மொழிவழக்குகள்போல நடைமுறை உரை யாடலுக்கான ஒன்றாகவோ மட்டுமே தமிழ் நீடிக்கும்.

- ஜெயமோகன், எழுத்தாளர், தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x