Published : 05 May 2017 10:39 am

Updated : 28 Jun 2017 16:28 pm

 

Published : 05 May 2017 10:39 AM
Last Updated : 28 Jun 2017 04:28 PM

மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும்

முதலாளிய சமுதாயத்தின் ‘உயிரணு’ (cell) என்று மார்க்ஸ் வர்ணிக்கும் ‘சரக்கு’ (commodity) பற்றிய பகுப்பாய்விலிருந்தே ‘மூலதனம்’ நூலின் முதல் பாகம் தொடங்குகிறது. முதலாளிய உற்பத்தி முறையின் அனைத்து முரண்பாடுகளும், சரக்கில் அல்லது பண்டங்களின் சரக்கு வடிவத்தில் பொதிந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. மூளையைச் சற்றுக் கசக்கிக்கொண்டு இந்த அத்தியாயத்தைப் படித்துப் புரிந்துகொள்பவர்கள், காரல் மார்க்ஸ் முதலாளியப் பொருளாதாரத்தை விளக்குவதோடு, தத்துவ, புவியியல், மானுடவியல், வரலாறு, இலக்கிய, அறிவியல், அறவியல் விருந்துகளைப் படைப்பதையும் காண்பார்கள். மார்க்ஸின் பார்வையில் இந்தத் துறைகள் அனைத்துமே ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட முழுமை.

சரக்கு அல்லது பண்டத்தின் சரக்கு வடிவம் என்பது பயன் - மதிப்பு, பரிவர்த்தனை – மதிப்பு ஆகிய இரட்டைத் தன்மை கொண்டுள்ளதையும், ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறான பண்புகளையும் பயன்பாடுகளையும் கொண்டுள்ள பண்டங்கள் சரக்கு வடிவத்தில் முதலாளியச் சந்தையில் ஒன்றையொன்று சந்திப்பதையும், அவை ஒன்றுக்கொன்று, அவற்றின் மதிப்பின் அடிப்படையில், அதாவது அவை ஒவ்வொன்றிலும் பொதிந்துள்ளதும், குறிப்பிட்ட சமுதாயத்தின் வளர்ச்சி நிலையில் சமூகரீதியில் அவசியமான சராசரி மானுட உழைப்பின் அளவுகளின் அடிப்படையில் பரிவர்த்தனை செய்யப்படுவதையும் மார்க்ஸ் விளக்குகிறார். எடுத்துக்காட்டாக ஒரு செல்பேசி, 100 சட்டைகளுக்குப் பரிவர்த்தனையாகின்றது. மேற்சொன்ன இரண்டும் ‘சரக்குகள்’ என்ற அருவங்களாகவே பரிவர்த்தனை செய்யப்படுகின்றன - அவற்றின் பொருளாயதப் பண்புகள் அனைத்தும், புலன்களுக்குத் தென்படுகின்ற, பயன்பாட்டுக்குத் தெரிகின்ற பண்புகள் அனைத்தும் நீக்கப்பெற்று.


இந்த அருவங்கள் எந்த உருவங்களிலிருந்து (தூலமான பண்டங்களிலிருந்து) பிரித்து எடுக்கப்படுகின்றனவோ, அந்தப் பண்டங்களை உற்பத்தி செய்கின்ற, ரத்தமும் சதையுமான தொழிலாளிகள், அவர்களிடமிருந்து உழைப்புச் சக்தி பிழிந்தெடுக்கப்படும் தொழிற்சாலைகள், அவர்கள் ஊதியமாக (கூலி) பெறுகின்றதைவிடக் கூடுதலான உற்பத்தி செய்யும் உபரி - மதிப்பை அபகரிக்கும் முதலாளிகள், தொழிலாளர்களின் அவல நிலைமைகளை விளக்கும் அரசாங்க அதிகாரிகளின் ஆய்வறிக்கைகள், பல்லாயிரக்கணக்கான சரக்குகள் அனைத்துக்கும் பரிவர்த்தனை சாதனமாக உள்ள பணம், இந்தப் பணத்தின் அடித்தளமாக உள்ள தங்கம், வெள்ளி உலோகங்கள் உள்ள சுரங்கங்கள், இவை போன்றவற்றைச் சாத்தியப்படுத்தும் உற்பத்தி உறவுகள், வரலாறு, இயற்கை என உலகப் பயணத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றார்.

மாயப் பொருளான மார்க்ஸின் கோட்டு

பரிவர்த்தனை செய்யப்படும் சரக்குகளுக்கான எடுத்துக்காட்டொன்றாக மார்க்ஸ் குறிப்பிடும் கோட்டு, பயன் - மதிப்புள்ள பண்டம் என்னும் வகையில், அவருடைய வாழ்க்கை அனுபவத்தோடு மிகவும் நெருக்கமான தொடர்புகொண்டதாய் இருந்தது. ‘கோட்டுமே’ , அது சரக்கு வடிவத்தை எடுத்ததும், புலன்களால் உணரப்பட முடியாத ‘மாயப் பொருளாகி’விடுகின்றது. அது மட்டுமின்றி, மார்க்ஸ் தாம் அணிந்து வந்த சொந்தக் கோட்டைப் பல சமயங்களில் அவரது கையிலிருந்து (அல்லது தோளிலிருந்து) இழக்கவும், அதை மீட்டெடுக்கவுமான போராட்டங்களினூடாகவே பல ஆண்டுகளைக் கழித்திருக்கிறார் என்பதை அவரும் அவரது துணைவியார் ஜென்னியும் எங்கெல்ஸுக்கும் பிறருக்கும் எழுதிய கடிதங்கள், இங்கிலாந்தில் புலம் பெயர்ந்து வாழ்ந்த அவரைக் கண்காணித்துக்கொண்டிருந்த ரஷ்ய அரசாங்க உளவாளியின் குறிப்புகள் முதலியவற்றின் அடிப்படையில் எடுத்துக்காட்டியுள்ளனர் ஆராய்ச்சி அறிஞர்கள் பீட்டர் ஸ்டால்லிபிராஸ், டேவிட் மெக்காலன் போன்றோர்.

மார்க்ஸின் வாழ்க்கையில் மிகக் கடினமான ஆண்டுகளில் ஒன்று 1852. அப்போது அவர் ‘லூயி நெப்போலியனின் பதினெட்டாம் புருமேர்’(‘பதினெட்டாம் புருமேர்’ என்பது அரண்மனைப் புரட்சிக்கான உருவகம்) என்ற நூலை அவர் எழுதுகையில், நோய்வாய்ப்பட்டு அந்த ஆண்டு ஜனவரி முழுக்கப் படுக்கையில் கிடந்திருந்தார். எங்கெல்ஸ் அவ்வப்போது அனுப்பிக்கொண்டிருந்த சிறிது பணத்தையும், அவரது வீட்டிலிருந்த பொருட்கள் சிலவற்றை அடகுக் கடைகளில் அடகு வைத்துப் பெற்ற பணத்தையும் கொண்டுதான் நான்கு குழந்தைகளையும் மூன்று பெரியவர்களையும் கொண்ட அவரது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியிருந்தது. சற்றுக் கூடுதலான வருமானத்துக்காக அவர் பத்திரிகைக் கட்டுரைகளையும் எழுத வேண்டியவரானார். ‘மூலதனம்’ நூலை எழுதுவதற்கான தரவுகளைத் தேடிக் கண்டறியும் பொருட்டு, லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தில் நுழைவதற்கான நுழைவுச் சீட்டை இரண்டாண்டுகளுக்கு முன் பெற்றிருந்த போதிலும், அந்த ஆராய்ச்சிக்கான நிதியை அவர் பத்திரிகைக் கட்டுரைகள் எழுதுவதன் மூலமே திரட்ட முடிந்தது. இது ஒருபுறமிருக்க.. நோய்வாய்ப்பட்ட காலத்தில் அவரால் அந்த அருங்காட்சியகத்துக்குச் செல்ல முடியவில்லை. நோயிலிருந்து குணமடைந்த பிறகும் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. அதற்குக் காரணம், இறைச்சிக் கடைக்காரர், காய்கறிக் கடைக்காரர் முதலியோருக்கு அவர் தர வேண்டிய கடனை அவரால் அடைக்க முடியாதது மட்டுமல்ல, அடமானம் வைக்கப்பட்டிருந்த மேல் கோட்டை அவரால் மீட்டெடுக்க முடியாததுமாகும். நோயால் பலவீனமடைந்திருந்த மார்க்ஸுக்கு இங்கிலாந்தின் கடுங்குளிர் காலத்தில் வெளியே செல்ல மேல் கோட்டு தேவைப்பட்டிருக்கும் என்பது மட்டுமல்ல.. அவர் நூலகத்துக்குச் செல்வதற்கான தடையாக இருந்த காரணம்; அன்று பிரிட்டிஷ் அருங்காட்சியகம் விதித்திருந்த உடை விதிகளின்படி (dress code), நூலகத்துக்கு வருபவர்களிடம் கட்டாயம் மேல் கோட்டு இருக்க வேண்டும்.

1950-களிலும் 1860-களிலும் மார்க்ஸின் மேல்கோட்டு எண்ணற்ற முறை அடகுக் கடைக்குச் செல்வதும் திரும்பி வருவதுமாக இருந்தது. மேல்கோட்டு இல்லையென்றால் நூலகத்துக்குச் செல்ல முடியாது. கோட்டை அடமானம் வைத்தால், ஆய்வுப் பணிகளில் ஈடுபட முடியாது; ஆய்வுப் பணிகளால் அவருக்கு வருமானம் ஏதும் இல்லை. ஆய்வுப் பணிகளை நிறுத்திவிட்டு, பத்திரிகைக் கட்டுரைகளிலிருந்து பெறப்பட்ட சொற்ப வருமானம், எங்கெல்ஸ் அனுப்பிக் கொண்டிருந்த உதவித்தொகை ஆகியவற்றைக் கொண்டுதான் அவரும் அவரது குடும்பத்தினரும் சாப்பிடவும், வீட்டு வாடகை கொடுக்கவும், மேல்கோட்டை அடகுக் கடையிலிருந்து மீட்கவும், அதை அணிந்துகொண்டு நூலகத்துக்குச் செல்லவும் முடிந்தது.

காகிதம் வாங்கவும் காசில்லை

ஆனால், சொற்ப வருமானம் தரும் பத்திரிகைக் கட்டுரைகளை எழுதுவதற்குக்கூட பல சமயங்களில் அவரால் இயலவில்லை. கட்டுரைகளுக்குத் தேவைப்படும் தரவுகளுக்காகப் படிக்க வேண்டியிருந்த வேறு பத்திரிகைகளையும், கட்டுரை எழுதுவதற்கான காகிதங்களையும் மசியையும் கட்டுரைகளை அனுப்புவதற்கான தபால் தலைகளையும் வாங்குவதற்கு அவரிடம் பணம் இருக்கவில்லை. அதனால்தான் அவர் வழக்கமாக எழுதிவந்த ‘நியூயார்க் டெய்லி டைம்ஸ்’ ஏட்டுக்கு 1852 செப்டம்பரில் கட்டுரைகள் எழுத முடியவில்லை. காகிதங்களை வாங்குவதற்காக அவர் பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய மேல்கோட்டை அக்டோபர் மாதம் மீண்டும் அடகு வைக்க வேண்டியதாயிற்று. 1844-ம் ஆண்டு ‘பாரிஸ் குறிப்பேடுக’ளில் அவர் ஏற்கெனவே எழுதியிருந்தார்: “ பயணம் செய்வதற்கு என்னிடம் பணம் இல்லையென்றால், எனக்குப் பயணம் செய்யும் தேவையே இல்லை என்றாகிறது. அதாவது, உண்மையான, நிறைவு செய்யக்கூடிய தேவையே இல்லை என்றாகிறது. படிப்பதற்கு எனக்குச் சிறப்பார்வம் இருந்து, என்னிடம் பணம் இல்லையென்றால், படிப்பதற்கு எனக்குச் சிறப்பார்வமே இல்லை என்றாகிறது. அதாவது, செயல்படுத்தப்படக் கூடிய, உண்மையான சிறப்பார்வம் இல்லை என்றாகிறது”.

சமூகத் தகுதியின் அடையாளங்களாக இருந்த ஆடைகளும் உடைகளும் மார்க்ஸின் குடும்பத்தார் சமூக வெளியில் நடமாடுவதற்கும்கூட வரம்புகளிட்டன. 1866-ம் ஆண்டு குளிர்காலத்தில் ஜென்னியால் வெளியில் தலைகாட்ட முடியாததற்குக் குளிர் மட்டுமே காரணமல்ல; ‘மரியாதையை’வழங்கக்கூடிய உடைகளும் அவரிடம் இல்லை என்பது முக்கியக் காரணம். அடுத்த ஆண்டு, அவரது பெண் மக்கள் மூவருக்கு பிரான்ஸிலுள்ள பூர்தியோ என்னுமிடத்தில் விடுமுறைகளைக் கழிக்க அழைப்பு வந்தபோது, பயணத்துக்கான செலவை பைசாவாரியாக அவர்கள் கணக்கிட்டதுடன், வெளியே நடமாடுவதற்கு உகந்தவையாகக் கருதப்பட்ட அவர்களது ஆடைகளை அடகுக் கடைகளிலிருந்து மீட்கவும் வேண்டியிருந்தது. மார்க்ஸின் குழந்தைகள் சிலர் இறந்தபோது, சவப்பெட்டி வாங்குவதற்குக்கூட அவரிடம் பணம் இருக்கவில்லை என்பதைப் பலரும் அறிவர். ஆனால், செல்வம் படைத்த உறவினர்களின் அல்லது நண்பர்களின் இறப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக இருந்ததுதான் பெரும் அவலம். 1864-ல் இறந்த மார்க்ஸின் நண்பர் வில்ஹெம் வொல்ஃப், தமது சேமிப்பில் கணிசமான தொகையை மார்க்ஸுக்குக் கொடுக்கும்படி உயில் எழுதிவைத்திருந்தார். அந்தப் பணத்தைக் கொண்டு “எனது குடும்பம் முழுவதற்கும் மான்செஸ்டர் பட்டுத் துணியை வாங்க விரும்புகிறேன்” என மார்க்ஸ் முரண்நகையுடன் எழுதினார்.

முதலாளியம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர், தமது ஆராய்ச்சிகள் மூலமும், தொழிலாளர் இயக்கத்துடன் அவருக்கிருந்த தொடர்புகள் மூலமும் அறிந்துகொண்டார் என்றால், அன்றைய தொழிலாளரின் குடும்ப வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை அவரது குடும்ப வாழ்க்கையே அவருக்குச் சொல்லிக் கொடுத்தது. 1844-ல் எங்கெல்ஸ் எழுதிய ‘ இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலைமை’ , சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய நாவல்கள் முதலியன அன்றைய தொழிலாளி வர்க்கத்தின் ஏழ்மையைப் படம் பிடித்துக் காட்டின. தொழிலாளர்கள் தங்கள் ஆடைகளையும் கருவிகளையும் அடமானம் வைப்பது வழக்கமாக இருந்தது. லண்டனின் மிக வறிய பகுதியொன்றில் மார்க்ஸ் மிகக் குறைந்த வாடகைக்கு எடுத்த வீடொன்றில் கிடந்த குப்பைக் கூளங்கள், உடைந்துபோன தட்டுமுட்டுச் சாமான்கள் முதலியவற்றைப் பார்த்து, பழைய சாமான்களை வாங்கி விற்கும் வணிகன்கூட வெட்கப்பட்டிருப்பான் என்று ரஷ்ய அரசாங்க உளவாளி ஒருவனின் குறிப்புகள் கூறுகின்றன. சற்றுக் கூடுதலான வசதிகள் கொண்ட இன்னொரு வாடகை வீட்டைப் பிடிப்பதற்காக முக்கிய வீட்டுச் சாமான்களை அவரது குடும்பத்தார் அடகு வைக்க வேண்டியிருந்தது.

காவல் நிலையத்தில் மார்க்ஸ்

மார்க்ஸின் துணைவியார் ஜென்னி, பிரபுக் குடும்பத்தில் பிறந்தவர். சுவீகாரமாக அவருக்குக் கிடைத்த வெள்ளிச் சாமான்கள்கூட அடகுக் கடைகளுக்குச் சென்றுவிட்டன. ஜென்னி மார்க்ஸ் அடகுவைத்த பொருள்களில் சில பாரம்பரிய மதிப்புக் கொண்டவை. ஆனால், அடகுக் கடைகளில் அவற்றுக்குப் பரிவர்த்தனை மதிப்பு மட்டுமே வழங்கப்பட்டது. 1850-களில் மார்க்ஸின் இல்லத்துக்கு நாள் தோறும் வருகை தந்துகொண்டிருந்த ஜெர்மானிய அகதியும் சோஷலிஸ்ட்டுமான வில்ஹெம் லீப்னெஹ்ட், அடகுக் கடைகளுக்குச் செல்வதும் அடகுவைக்கப்பட்ட பொருட்களை மீட்டெடுப்பதும், மீண்டும் அடகு வைப்பதும், சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்திச் செல்வதும் ஜென்னியும் மார்க்ஸ் தம்பதியினருக்குப் பணிவிடை செய்துவந்த ஹெலன் அம்மையாருக்கும் உரிய பணிகளாக இருந்ததைப் பதிவுசெய்துள்ளார். இங்கும் ஆண் – பெண் வேலைப் பிரிவினை இருந்தது. எனினும், மார்க்ஸ் தாமாகவே அடகுக் கடைகளுக்குச் சென்று, அவமானப்பட்ட நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்தன. ஒருமுறை அவர் வெள்ளிப் பொருட்களை அடகுக் கடைக்கு எடுத்துச் சென்ற போது, அவர் அணிந்திருந்த அழுக்கு ஆடைகளும், சவரம் செய்யப்படாத முகமும், ஒழுங்காக சீவப்படாத தலைமுடியும், அவரது ஆங்கில உச்சரிப்பும் (இவை போதாதென்று அவரொரு யூதர் என்பதும்) அடகுக் கடைக்காரருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின. அவர் கொடுத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்ட மார்க்ஸ், ஒரு நாள் முழுக்கக் காவல் நிலையத்தில் இருந்தார்.

மகளுக்குச் சொன்ன கதைகள்

இத்தனை வறுமைக்கு இடையிலும் மார்க்ஸ், தமது துணைவியாருடனும் பெண் மக்களுடனும் இலக்கிய ரசனையைப் பகிர்ந்துகொண்டிருந்தார். ஷேக்ஸ்பியரின் வரிகளை ஒப்புவிப்பதில் அவர்களுக்கிடையே போட்டா போட்டிகள் நிகழ்ந்தன. மார்க்ஸின் ‘மூலதனம்’நூலைத் தெளிவாகப் படியெடுத்துக் கொடுத்தவர் ஜென்னி. தமது குழந்தைகளுக்கு மார்க்ஸ் ‘ஆயிரத்தோரு இரவுகள்’ போன்ற கதைகளையும் கொடுப்பது வழக்கம். அவற்றில் ஈ.டி.ஏ. ஹோஃப்மன் எழுதிய ‘ஹான்ஸ் ரோக்லே’ கதை மிக முக்கியமானது என்று அவரது மகள் எலியனார் நினைவு கூர்ந்துள்ளார்: “மந்திரவாதி போன்ற ஹான்ஸ் ரோக்லெ, விளையாட்டு சாமான் கடை வைத்திருந்தார். அவர் எப்போதும் ‘கஷ்டத்தில்’ இருந்தவர். அங்கு மரத்தாலான ஆண்கள், பெண்கள், அரக்கர்கள், குள்ளர்கள், அரசர், அரசியர், தொழிலாளர், ஆண்டையர், நோவா தனது படகில் திரட்டிக் கொண்டு வந்ததுபோல வகை வகையான விலங்குகள், பறவைகள், மேசைகள் , நாற்காலிகள், விதவிதமான வண்டிகள், பெட்டிகள் முதலியன இருந்தன. ஹான்ஸ் மாய மந்திரம் தெரிந்தவனாக இருந்தபோதிலும், அவனால் பிசாசுக்கோ, கசாப்புக் கடைக்காரனுக்கோ உரிய கடமைகளைச் செய்ய முடியவில்லை. எனவே, தனது மனசாட்சிக்கு விரோதமாக, தனது விளையாட்டுச் சாமான்களைப் பிசாசுக்கு விற்பனை செய்யும் நிர்ப்பந்தம் அவனுக்கு எப்போதும் இருந்தது. இந்த விளையாட்டுச் சாமான்களோ, அதிசயிக்கத்தக்க வீரசாகசங்கள் புரிந்து இறுதியில் ஹான்ஸ் ரோக்லேவின் கடைக்கே திரும்பி வந்து சேர்ந்தன.”

தொழிலாளர்களின் வியர்வையாலும் ரத்தத்தாலும் உற்பத்தி செய்யப்பட்ட, ஆனால் முதலாளிய உற்பத்தி முறையால் அவர்களிடமிருந்து அந்நியமாக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் அவர்களிடமே திரும்பி வந்து சேரும் என்ற பொருளில்தான் மார்க்ஸ் இந்தக் கதையை எலியனாருக்குச் சொல்லியிருக்க வேண்டும். மார்க்ஸ், தமது பொருளாதார, அரசியல், தத்துவ எழுத்துகளில் புலப்படுத்தியது, தமக்கு ஏற்பட்ட சொந்த இழப்புகளை அல்ல; அடகு வைக்கப்பட்ட கோட்டை மீட்டெடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை அல்ல. குறிப்பாக, பாட்டாளி வர்க்கத்துக்கும் பொதுவாக மானுட குலத்துக்கும், அதேபோல இயற்கைக்கும் முதலாளிய உற்பத்தி முறை ஏற்படுத்திவரும் இழப்புகளையும் அந்த இழப்புகளை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும் பற்றித்தான்.

தாம் விரும்பிய சோஷலிச, கம்யூனிச சமுதாயங்களிலும் ‘உழைப்பு’ கட்டாயம் இருந்தேதான் தீரும் என்று கூறிய அவர், அது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய தமது தரிசனத்தை முன்வைத்தார்: “ நாம் மானுடப் பிறவிகள் என்னும் முறையில் உற்பத்திசெய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது நாம் ஒவ்வொருவரும் தனது உற்பத்தியில் தன்னையும் தனது சக மனிதரையும் இருவகையில் உறுதிப்படுத்துவோம்: (1) எனது உற்பத்தியில், நான் எனது தனித்துவத்தின் குறிப்பிட்ட பண்பை உருத்திரட்சி செய்திருப்பேன். இக்காரணம் கருதியே எனது செயலின்போது எனது சொந்த, தனிப்பட்ட வாழ்வின் வெளிப்பாட்டை நான் மகிழ்வுடன் அனுபவித்திருப்பதுடன், எனது படைப்பை உற்று நோக்குங்கால், தனிப்பட்ட ஆனந்தத்தை அனுபவிப்பேன்; எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடம் தராத, புறநிலையில் புலனுணர்வுகளால் உணரத்தக்க ஓர் ஆற்றல் என்னும் வகையில் எனது ஆளுமையை நான் அனுபவிப்பேன். (2) எனது படைப்பை நீ பயன்படுத்தும்போதோ, மகிழ்வுடன் அனுபவிக்கும்போதோ, எனது உழைப்பின் மூலம் நான் ஒரு மானுடத் தேவையை நிறைவு செய்துவிட்டேன். அதாவது, மானுட இயல்பை உருத்திரட்சி செய்து, அதன் காரணமாக மற்றொரு மானுடப் பிறவியின் தேவைகளுக்குப் பொருத்தமான ஒரு பொருளைச் சேகரித்துள்ளேன் என்னும் உடனடியான மனநிறைவையும் அறிவையும் பெற்றுவிடுவேன். (3) நான் உனக்கும் மானுட இனத்துக்கும் இடையிலான தொடர்பாளனாகப் பணியாற்றி, அதன் காரணமாக நான் உனது வாழ்வைச் செழுமைப்படுத்துபவன் என்றும், உனது சாராம்சமான பகுதியே நான் என்றும் உன்னால் ஏற்றுக்கொள்ளப்படுவேன். இவ்வாறு நான் உனது சிந்தனைகளிலும், உனது அன்பிலும் நிலைத்திருப்பதை அறிந்துகொள்வேன். (4) எனது சொந்த வாழ்வின் தனிப்பட்ட வெளிப்பாட்டில், நான் உனது வாழ்வின் உடனடியான வெளிப்பாட்டைக் கொண்டுவந்திருப்பேன். எனவே, எனது தனிப்பட்ட செயலில், எனது அசலான தன்மையை, எனது மானுட , சமுதாய இயல்பை நேரடியாக உறுதிப்படுத்தி, அதைப் பயனுறச் செய்திருப்பேன்”. (அழுத்தங்கள் மார்க்ஸுடையவை)

எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர், எழுத்தாளர், 'தலித்தியமும் உலக முதலாளியமும்' உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: sagumano@gmail.com


மார்க்ஸ்கோட்டுஅடகுக் கடைகள்மார்க்ஸின் குடும்பம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

kovai-gnani

பேராசான் ஞானி

கருத்துப் பேழை