Last Updated : 26 Dec, 2013 12:00 AM

 

Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 26 Dec 2013 12:00 AM

விற்பனைக்கல்ல ‘ ஃப்ளிப்கார்ட்’: சச்சின் பன்சால் சிறப்புப் பேட்டி

வெறும் நான்கு லட்ச ரூபாய் முதலீட்டுடன் (அதுவும் அலுவலகத்துக்கான கணினி, மேஜை, நாற்காலி, பீரோக்கள் வாங்க) 2007-ல் இரு இளைஞர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம்; இன்றைக்கு அதுதான் சில்லறை வர்த்தகத்தில் இந்தியாவின் மிகப் பெரிய மின்வணிக நிறுவனம்; மதிப்பு ரூ. 10 ஆயிரம் கோடி - ‘ஃப்ளிப்கார்ட்’. இன்றைய தலைமுறையின் விரல் நுனிப் பேரங்காடி. டெல்லி ஐ.ஐ.டி-யில் படித்துவிட்டு, ‘அமேசான்.காம்’ நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்த சச்சின் பன்சால், பின்னி பன்சால் இருவரும் ‘ஃப்ளிப்கார்ட்’-ஐத் தொடங்கிய கதை மட்டும் அல்ல; அதை ஒவ்வொரு நாளும் முன்னகர்த்தும் கதையும் சுவாரஸ்யமானது. ‘ஃப்ளிப்கார்ட்’ நிறுவனர்களில் ஒருவரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சச்சின் பன்சாலுடன் பேசினோம்.

மின் வணிகம் என்பதைக் கேள்விப்பட்டிராத 2007-ல் ‘ஃப்ளிப்கார்ட்’ செயல்படத் தொடங்கியது. இப்போது உங்களுடைய வியாபார நடைமுறை சாத்தியமானது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. முயன்றுதான் பார்ப்போமே என்று துணிச்சலை மட்டும் துணையாகக் கொண்டு இதில் இறங்கினீர்களா?

விளையாட்டாகத்தான் இதில் இறங்கினோம். இன்றைக்கும் பெரும்பாலான இந்தியர்கள் இணைய வர்த்தகம் என்றாலே அஞ்சும் சூழலில்தான் வர்த்தகத்தை மேற்கொள்கிறோம். ஆனால், மின் வணிகம் மேல் கொஞ்சம்கொஞ்சமாக நம்பிக்கையை ஏற்படுத்திவருகிறோம். விரைவில் அனைவரையும் நம்பவைத்துச் சாதிப்போம் என்று நம்புகிறோம்.

உங்களுடைய ‘அமேசான்’அனுபவம்தான் உங்களுக்குக் கைகொடுக்கிறதா?

இல்லை. ‘அமேசான்’ நிறுவனத்தில் நாங்கள் மின்வணிகப் பிரிவில் வேலைபார்க்கவில்லை. இணையதள சேவை அணியில்தான் இருந்தோம். ‘ஃப்ளிப்கார்ட்’ நிறுவனத்தை பூஜ்யத்திலிருந்துதான் நாங்கள் தொடங்கினோம். கடைகளில் பண்டம் வாங்குவதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பழக்கங்களுக்கும் நமக்கும் மிகுந்த வித்தியாசமிருக்கிறது. அத்துடன், இந்தியாவில் மின்வணிகத்தில் நாங்கள் சந்திக்க வேண்டியிருந்த சவால்களும் வித்தியாசமானவை.

ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய நுகர்வோரின் மனநிலையையும் சந்தைச் சூழலையும் மனதில் கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியிருந்தது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மின்வணிகச் சந்தை எப்படிப்பட்டது என்று எனக்கும் பின்னிக்கும் எதுவுமே தெரியாது. எனவே, பழைய சிந்தனை ஏதுமில்லாமல் புதிதாகவே சிந்தித்தோம்.

மின்வணிகம் என்றாலே சரக்கு மட்டமாக இருக்கும், பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விடுவார்கள் என்றெல்லாம் நுகர்வோர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சங்களை எப்படிப் போக்கினீர்கள்; எப்படி உங்கள் வணிகத்தைப் பிரபலப்படுத்தினீர்கள்?

பணத்தைக் கொடுத்துவிட்டுப் பண்டத்தை வாங்கிக்கொள்ளலாம் என்ற அணுகுமுறை அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஒரு பொருள் தேவை என்று நுகர்வோர் கேட்டால், அதை எப்படியாவது அன்றைக்கே அவரிடம் சேர்க்க முயற்சி செய்தோம். வியாபாரம் விரிவடைந்தது. பண்டங்களுக்குப் பணம் செலுத்தும் முறைகளைப் பாதுகாப்பாகவும் எளிதாகவும் வடிவமைத்தோம்.

அநியாயத்துக்கு விலையைக் குறைத்து நீங்கள் விற்பதாக, மின்வணிகத்தில் இல்லாத - நேரடிச் சில்லறை வியாபாரிகள் – குற்றம்சாட்டுகின்றனரே? அவர்களுடைய வியாபாரத்தை இப்படித்தான் கைப்பற்றுகிறீர்களா?

சில்லறை வியாபாரிகளிடமிருந்து வணிகத்தை நாங்கள் பறிக்கவில்லை. நுகர்வோர்தான் அவர்களை விட்டு எங்களிடம் வருகின்றனர். போட்டிக்காகக் கடுமையான விலை குறைப்பெல்லாம் செய்வதில்லை. எங்களுக்கு விற்பவர்கள் அவர்கள் விரும்பும் விலைக்குத்தான் விற்கின்றனர். விலையை நிர்ணயிப்பதில் நாங்கள் எந்த வகையிலும் தலையிடுவதில்லை. அதே சமயம், மின்வணிகமானது திறமையான விலை நிர்ணயக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.

உங்களுடைய ‘ஃப்ளிப்கார்ட்’ தொழில்நுட்ப நிறுவனமா, சில்லறை வர்த்தக நிறுவனமா, மின்வர்த்தக நிறுவனமா அல்லது இவையெல்லாம் சேர்ந்த கலவையா?

நாங்கள் தொழில்நுட்ப நிறுவனம்தான். மின் வணிகத்தில் ஈடுபடுகிறோம். நானும் பின்னியும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் ஆர்வமாக இருப்பவர்கள். எனவே, இந்த வியாபாரத்துக்குத் தேவைப்படும் தொழில்நுட்பத்தை விலைகொடுத்து வாங்காமல் நாங்களாகவே வடிவமைத்தோம். தேவைப்பட்ட தரவுகளை எங்களுடைய தொழில்நுட்பம் மூலமாகவே பெறுவதால், வியாபார முடிவுகளை எடுக்க எங்களால் முடிகிறது. தொழில்நுட்பம் கைவசமிருப்பதால் எல்லாவற்றையும் தானாகவே செயல்படுத்த வைக்கிறோம்.

வியாபாரச் சவால்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

இதில் முக்கியமானது பண்டங்களை உரிய இடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் சங்கிலித்தொடர் அமைப்புதான். இதை நாங்களே உருவாக்க வேண்டியிருந்தது. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் ‘ஃப்ளிப்கார்ட்’ போன்ற நிறுவனங்களின் வியாபாரத்துக்குத் துணை நிற்கக்கூடிய சங்கிலித் தொடர் விநியோக அமைப்பு இல்லை.

இந்தியாவின் ‘அமேசான்’ ஆக ‘ஃப்ளிப்கார்ட்’ உருவெடுப்பதாக நினைக்கிறீர்களா?

இல்லை, நாங்கள் இந்தியாவின் ‘ஃப்ளிப்கார்ட்’ நிறுவனமாகவே தொடர்வோம் (சிரிப்பு). இந்தியாவில் உள்ள சவால்கள் வித்தியாசமானவை. அதேசமயம், சீன நிறுவனங்களிடமிருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்களும், பெற வேண்டிய உத்வேகங்களும் அநேகம் என்று கருதுகிறேன்.

வேலைக்கு ஆள் எடுக்கும் திட்டம் எப்படி, இந்த ஆண்டு எவ்வளவு சம்பளம் நிர்ணயித்திருக்கிறீர்கள்?

இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களிலிருந்தும் நிர்வாக மேலாண்மைப் படிப்பைச் சொல்லித் தரும் நிறுவனங்களிலிருந்தும் புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தலாம் என்று முடிவுசெய்தி ருக்கிறோம். ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் ஊதியம் கொடுக்க உத்தேசம். இந்த ஆண்டு இத்தனை பேருக்கு வேலை என்றெல்லாம் இலக்கு நிர்ணயிக்கவில்லை. திறமைசாலிகளைக் கண்டால் அவர்களுக்கு வேலை தருவோம்.

இந்த ஆண்டு சுமார் ரூ.2,160 கோடி திரட்டியிருக்கிறீர்கள். மின்வணிக நிறுவனமொன்று திரட்டிய தொகைகளிலேயே இதுதான் அதிக பட்சமானது. இதை எப்படிச் செலவிடத் திட்டமிட்டிருக்கிறீர்கள்? மேற்கொண்டும் நிதி திரட்ட உத்தேசமா?

தொழில்நுட்பம், விநியோகத்துக்கான சங்கிலித்தொடர் அமைப்பு, மனிதவளம் ஆகிய மூன்றில்தான் அதிகம் முதலீடு செய்யவிருக்கிறோம். வெளிநாடுகளிலிருந்தும் ஆள்களைத் தேர்வுசெய்யப் போகிறோம். எங்களுடைய சந்தை எந்த அளவுக்கு வேகமாக வளர்கிறதோ அதைப் பொருத்துத்தான் முதலீடும் அதிகரிக்கப்படும். அதிக வியாபாரத்துக்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் முதலீட்டையும் அதிகப்படுத்துவோம். ‘4-ஜி’ தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வந்தால் எங்களுடைய விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய தேவை ஏற்படும். இப்போதைக்கு போதும்.

உங்களிடம் முதலீடு செய்துள்ள ‘எம்.ஐ.எச்.’ நிறுவனம் ‘ஃப்ளிப்கார்ட்’ மதிப்பு ரூ.9,900 கோடி என்று மதிப்பிட்டுள்ளதே, எப்படி இந்தத் தொகையை நிர்ணயித்தார்கள்?

பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நிறுவனங்களை மதிப்பிடுவார்கள். நிறுவனத்தின் தலைமை, நிர்வாகம் ஆகியவற்றுடன் நிறுவனம் எவற்றையெல்லாம் விற்பனைக்குத் தருகிறது என்பதைக் கணக்கில்கொள்வார்கள். இந்த மூன்று அம்சங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்றிருப்பதால்தான் ‘ஃப்ளிப்கார்ட்’டின் வளர்ச்சியும் இதைப் பற்றிய மதிப்பிடல்களும் உயர்கின்றன.

மதிப்பு கூடும்போது நிறுவன உரிமையாளர்கள் அவற்றை விற்கவும் முற்படுவார்கள், உங்களுடைய திட்டம் என்ன?

இல்லை, நான் ஃப்ளிப்கார்ட்டை ஒருபோதும் விற்க மாட்டேன்.

உலகளாவிய வர்த்தகத்தில் ‘ஃப்ளிப்கார்ட்’ ஈடுபடுமா? முதலீடு திரட்ட பங்குகளை விற்கும் உத்தேசம் உண்டா?

இந்தியாவிலேயே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இங்கு நாங்கள் அடையப்போகும் வளர்ச்சியே மிகப் பிரமாண்டமானதாக இருக்கும். உலகளாவிய வர்த்தகத்திலும் ஈடுபடுவோம். ஆனால், இப்போதல்ல. நாங்கள் திட்டமிட்டதையெல்லாம் செயல்படுத்துவதிலேயே கவனமாக இருக்கிறோம். ஓராண்டுக்குப் பிறகு பங்கு விற்பனை மூலம் நிதி திரட்டும் நடவடிக்கையிலும் இறங்குவோம்.

© ‘பிசினஸ்லைன்’, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x