போயஸ்: ஒரு அதிகாரத் தோட்டத்தின் கதை!
வேதா நிலையம், எண்: 81, போயஸ் தோட்டம், சென்னை, 600086. இதுதான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரபூர்வ முகவரி. கடந்த 30 ஆண்டு கால அதிமுகவின் அரசியல் முகவரியும் அதுதான். கடந்த 30 ஆண்டுகாலத் தமிழக அரசியல் சக்கரத்தின் மையப்புள்ளி. சில தருணங்களில் இந்திய அரசியலைத் தீர்மானித்த புள்ளி என்றும் சொல்லலாம். 1967-ல் சென்னையில் மனை வாங்கினார் ஜெயலலிதாவின் தாயும் பிரபல நடிகையுமான சந்தியா. அதனை அவரும் ஜெயலலிதாவும் தங்கள் ரசனைக்கு ஏற்பச் செதுக்கி, பிரம்மாண்ட இல்லமாக்கினர். புதுமனை புகுவிழா நெருங்கும் சமயத்தில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் சந்தியா. ஆகவே, தாயின் நினைவாகத் தனது வீட்டுக்கு வேதா நிலையம் என்று பெயர் வைத்தார் ஜெயலலிதா. சந்தியாவின் இயற்பெயர் வேதவல்லி.
அரசியல் அஸ்திவாரம்
80-களின் தொடக்கத்தில் ஜெயலலிதாவுக்கு அறிமுகமானார் சசிகலா. தொடக்கத்திலிருந்தே போயஸ் தோட்ட இல்லத்துக்கு வருபவர்களில் முக்கியமான நபராக மாறினார் சசிகலா. அதிமுகவில் சேர்ந்ததும் சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர், கொள்கைப் பரப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் என்று பல பதவிகள் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தன.
கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை பலரையும் போயஸ் தோட்டத்து இல்லத்தில் வைத்துச் சந்திப்பதையும் உத்தரவுகள் பிறப்பிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த ஜெயலலிதா தேர்வுசெய்த இடம், போயஸ் தோட்டத்து வேதா நிலையம். அவருடைய அடுத்த கட்ட அரசியல் பாதையைத் தெளிவுபடுத்தியது அன்று வெளியிட்ட அறிக்கைதான்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு கட்சி உடைந்தபோது, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் இருந்தனர். ஒருகாலத்தில் அண்ணாவே வீடு தேடிச் சென்று சந்தித்த தலைவர்கள் எல்லாம், அப்போது வேதா நிலையத்துக்குச் சென்று காத்திருக்கத் தொடங்கினார்கள்.
எம்.ஜி.ஆருக்கு ஒரு ராமாவரம் தோட்டம்போல், ஜெயலலிதாவுக்கு போயஸ் தோட்டம் என்றானது. 1989 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக (ஜெ) சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக யாரை அனுப்புவது என்ற முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் முதன்முதலில் நடைபெற்றது இங்குதான்!
1991 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரானதும் அவருக்கென்று அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதைத் தவிர்த்துவிட்டு, போயஸ் தோட்ட இல்லத்தையே தனது அதிகாரபூர்வ இல்லமாக வைத்துக்கொண்டார் முதல்வர் ஜெயலலிதா.
சோதனைகள், சந்திப்புகள்
திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. ஜெயலலிதாவைக் கைது செய்ய போயஸ் தோட்டத்து இல்லத்துக்கு வந்தது சிபிசிஐடி காவல் துறை. அப்போது அவர் பூஜையில் இருந்தார். சில மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகுதான் அவரைக் கைதுசெய்ய முடிந்தது. அந்தக் காலகட்டத்தில் போயஸ் தோட்டத்து இல்லம் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளானது. அந்தச் சோதனைகளின் ஒரு பகுதியாக, வீட்டின் மழைநீர்க் குழாய்களுக்குள் உயர் அழுத்தக் காற்று செலுத்தப்பட்டு, அதற்குள் ஆவணங்கள், நகைகள் ஏதேனும் ஒளித்து வைக்கப்பட்டுள்ளனவா என்று சோதிக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கின் சொத்துப் பட்டியலில் போயஸ் தோட்டமும் அடக்கம்!
1998 மக்களவைத் தேர்தலின்போது ராமதாஸ், வைகோ உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் தொடங்கி பிரமோத் மஹாஜன், ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் கூட்டணி குறித்துப் பேச போயஸ் தோட்டம் வந்துசெல்லத் தொடங்கினர். பிறகு, வாஜ்பாய் பிரதமரானதும், அமைச்சர்கள் இலாகா தொடங்கி ஒவ்வொரு பிரச்சினைக்கும் பிரதமரின் தூதுவர்களாக மூத்த அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் போயஸ் தோட்டத்துக்கு அடிக்கடி வரத் தொடங்கினர்.
2002-ல் நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது, அவருக்குப் பதிலாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போது ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்து இல்லத்துக்கு வந்து சந்தித்து, ஆலோசனை பெற்றுச் செல்வதை வழக்கமாக வைத்துக்கொண்டார் பன்னீர்செல்வம்.
‘மர்ம மாளிகை!’
2006 சட்ட மன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது மதிமுக. கடைசி நேரத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய வைகோ, நேராகச் சென்ற இடம் வேதா நிலையம். ஜெயலலிதா வைகோ இடையிலான போயஸ் தோட்டச் சந்திப்பு கூட்டணியாக மாறியது. அதேபோல, மிகுந்த உற்சாகத்துடன் அதிமுக அணியில் இணைந்த திருமாவளவன், தேர்தல் தோல்விக்குப் பிறகு “போயஸ் தோட்டம் ஒரு மர்ம மாளிகை” என்று சொல்லி, கூட்டணியிலிருந்து வெளியேறினார்.
2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, நரேந்திர மோடி பிரதமரானார். அப்போது அவருடைய அரசுக்கு அதிமுகவின் ஆதரவு தேவையில்லை என்றபோதும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போன்றோர் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்துக்கே நேரில் வந்து சந்தித்துப் பேசினர். திடீரென ஒருநாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்தார் பிரதமர் மோடி. அரசாங்க சம்பிரதாய நடைமுறையின்படி நாட்டின் பிரதமர் ஒரு மாநில முதல்வரை அவருடைய இல்லத்துக்கே வந்து சந்திப்பது வழக்கமில்லை. ஆனால், பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கே வந்து, விருந்து சாப்பிட்டு, தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கைப் பட்டியலைப் பெற்றுக்கொண்டது ஜெயலலிதாவின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
2016 செப்டம்பர் 22 இரவு உடல்நிலை பாதிப்பு காரணமாக இல்லத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு, அவரது உடலைத்தான் அங்கு எடுத்துவந்தனர். ஜெயலலிதா மறைந்த பிறகு, போயஸ் தோட்ட இல்லத்திலேயே தங்கினார் சசிகலா. அதற்குப் பின்னர், மீண்டும் முதல்வரான பன்னீர்செல்வம் அடிக்கடி அங்கு சென்று சசிகலாவிடம் ஆலோசனைகள் பெற்றுச் சென்றார். சசிகலாவின் முதல் செய்தியாளர் சந்திப்பு நடந்ததும் இங்குதான். ஜெயலலிதா சமாதியில் வைத்து சசிகலாவை விமர்சித்த ஓ.பி.எஸ்ஸுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சசிகலா. இன்றைக்கு வேதா நிலையத்துக்குச் சொந்தம் கொண்டாடி, அதன் வாசலில் சண்டையிட்டுக்கொள்கிறார்கள் ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள். அரசியல் பரபரப்பின் ஆணிவேராக இருந்த போயஸ் தோட்டம், இன்றைக்குச் சொத்துப் பிரச்சினையின் மையமாகச் சுருங்கிவிட்டது.
- ஆர். முத்துக்குமார்,
எழுத்தாளர். ‘தமிழக அரசியல் வரலாறு’, ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
