

தமிழ் இலக்கியத்தின் பெரும் ஆளுமைகளை இழந்துவருகிறோம். அசோகமித்திரன் புறப்பட்டு ஒரு மாதம்கூட ஆகவில்லை. இப்போது மா.அரங்கநாதன். சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்திருக்கும் அவர் எழுதிய ‘மீதி’ என்ற சிறுகதையை இங்கே நினைவுகூரலாம்.
அக்கதையின் சுருக்கம் இது: மேற்கு மாம்பலத்தில் உள்ள திரையரங்கத்துக்குத் திரைப்படம் பார்க்க வருகிறான் முத்துக்கருப்பன். திரையில் படம் ஓட, மனதில் வீடு அவனைப் பாடாய்ப்படுத்தும். வீட்டோடு வந்து தங்கிவிட்ட மாமியாரைப் பற்றிய எண்ண ஓட்டமுமாய் கதை நகரும். வீட்டையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கும் மாமியாரை வீட்டை விட்டுத் துரத்திவிட்டால்தான் தன் பிரச்சினையெல்லாம் தீரும் என்று அவன் விரும்புகிறான். அப்படித் தீர்மானகரமாக முடிவெடுத்துவிட முடியுமா எனக் குழப்பத்தோடு மாம்பலத்தில் ஏதோ கலவரம் என்று சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு வழி விசாரித்துப் போக, மறுபடியும் அதே திரையரங்கத்துக்கு வந்து சேர்கிறான். மா.அரங்கநாதனின் படைப்புகளின் சாரத்துக்கு இக்கதை ஒரு சிறந்த உதாரணம்.
அவருடைய கதைகள் எப்போதும் நம் அன்றாட வாழ்வில் நிகழ்கின்ற, நம் பகுத்தறிவு அல்லது தர்க்கவாதத்துக்கு அப்பாற்பட்டு இயங்குகின்ற, நிகழும் சம்பவங்களைக் கொண்டது. அவர் அதைத்தான் எழுத விரும்பினார் எனத் தோன்றுகிறது. தீவிரமான சில கருதுகோள்களைக் கொண்ட வராகவே அவர் இருந்திருக்கிறார். அந்தக் கருதுகோள்களை வெளிப்படுத்தும் சாதனமாகவே அவருக்குப் படைப்புகள் இருந்திருக்கின்றன. அவை சமயங்களில் கட்டுரைக்குப் பக்கத்தில் போய்விடுகின்றன. கருத்துக்களை மாத்திரம் பேசுகின்றன. அதையெல்லாம் அரங்கநாதன் பொருட்படுத்தவே இல்லை. முத்துக்கருப்பன் என்ற ஒரு கதாபாத்திரம் ஏறக்குறைய அவரது எல்லாக் கதைகளிலும் வரக்கூடிய பாத்திரமாகவே இருக்கிறார். தமிழ்ப் படைப்பாளிகளில் வேறு எவரும் இப்படி ஒரே கதாபாத்திரத்தை ஐம்பது வருடங்களாய் தங்கள் கதைகளில் உலவவிட்டதில்லை (துப்பறியும் நிபுணர்களை இதில் சேர்க்கக் கூடாது).
அரங்கநாதன் முத்துக்கருப்பனோடும் தன் தத்துவ விசாரங்களோடும் நடந்துகொண்டே இருந்தார். தமிழில் அரங்கநாதனின் உலகை ஒட்டி எழுதியவர்கள் வேறு யாரும் இல்லையென்றே சொல்ல வேண்டும். அவ்வகையில் அவர் ஒரு தனிப் பாதை. ஆன்மிகமும் அன்றாடமும் அதனூடே விரியும் தரிசனங்களுமே அவருடைய கதைகள்.
ஒரு கைப்பான அங்கதமும் அவரிடம் உண்டு. ‘ஓர் இரங்கல் கூட்டம்’ என்கிற கதையை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். முதல் நாள் இறந்துபோன படைப்பாளிக்கு அடுத்த நாளே இரங்கல் கூட்டம் நடக்கிறது. திருவல்லிக்கேணியில் நடக்கும் அந்தக் கூட்டத்துக்கு ஆட்கள் சிரமப்பட்டு வந்துசேர்கிறார்கள். கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துபவர், இறந்த படைப்பாளி தான் நடத்திவந்த சிற்றிதழின் மூன்றாவது இதழ் அவரது அகால மரணத்தால் அச்சேறாமல் நின்றுவிட்டதென்கிறார். கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து அது அச்சேறிவிட்டது என்றும் அதில் தலைமையேற்று நடத்துபவர் பற்றிய விமர்சனக் கட்டுரை வந்திருக்கிறது என்றும் சொல்லி அதை வாசிக்கிறார். அந்தக் கட்டுரை தலைமைதாங்கி நடத்திக்கொண்டிருப்பவரைக் கடுமையாக விமர்சிக்கிறது. ‘ஜெயச்சந்திரனுக்கு ஒரு எழவும் தெரியாது. எழுத்தாளர்களோடு இருப்பதாலேயே எழுத்தாளனாகிவிட்டதாக ஒரு பாவனை’ என வாசித்துக்கொண்டேபோக, தலைமையேற்று நடத்துபவர் வாசிப்பதைத் தடுப்பதுபோல ஏதோ கத்திக்கொண்டு போய் மேசையில் உள்ள சோடா பாட்டிலை எடுத்து ஜன்னலில் வீசுகிறார். அது சாலையில் விழுகிறது. பிள்ளையார் சதுர்த்திக் காலம் என்பதாலும் திருவல்லிக்கேணி என்பதாலும் அக்கம்பக்கத்தில் இருப்போர் கதவுகளை, ஜன்னல்களை இறுகச் சாத்திக்கொள்கின்றனர்.
அங்கதச் சுவையைத் தாண்டி, இதில் வெளிப்படும் சில யதார்த்தங்களுக்காகவும் கவனிக்கத்தக்க கதை இது. தமிழில் முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார். ‘உவரி’, ‘வீடுபேறு’, ‘அரணை’, ‘திருநீர் மலை’ போன்ற வற்றைச் சொல்லலாம். அவருடைய கதைகளில் பல இரண்டாவது வாசிப்பிலும் பிடிபடாதவைதாம். பிடிபடும் போது அவை அலாதியான அனுபவத்தைத் தருபவை.
அரங்கநாதனுக்குள் ஒரு தீவிர தமிழ் தேசியர் உண்டு. பொதுவாக, தமிழ் தேசியத்துக்கான பிரகடனம் இல்லாத, தமிழ், பழந்தமிழ் குறித்த ஆழ்ந்த அறிவோடு வெற்றுப் பெருமிதங்கள் இல்லாத படைப்பாளிகள் தமிழ்த் தேசியத்தில் மிகக் குறைவு. அரங்கநாதனை அவ்வகையான அரிதான படைப்பாளியென உறுதியாகச் சொல்ல முடியும். நிலப்பரப்பு எப்போதும் அவரின் படைப்புகளின் பிரதான பாத்திரமாக இருக்கிறது. அவருடைய கதை மாந்தர்கள், வாழ்வதற்கான, துல்லியமாகச் சொன்னால் மனம் ஒப்பி வாழ்வதற்கான, இடம் தேடி அலைபவர்களாகவே இருக்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள், அல்லது தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குப் போகிறார்கள் அல்லது தமிழ்நாட்டுக்குள்ளே எங்கோ அலைகிறார்கள். நிலப்பரப்பு மனிதனின் அகத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பதாகவே அரங்கநாதன் தன் கதைகளின் வழியே பேசியிருக்கிறார்.
வீடுபேறு கதையை அவர் எப்போதோ எழுதிவிட்டார். ஏப்ரல் 16-ம் தேதி அவர் வீடுபேறு அடைந்தார்.
முன்றில், முத்துக்கருப்பன்!
கன்னியாகுமரி மாவட்டத்தின் திருப்பதிசாரம் (திருவெண்பரிசாரம்) கிராமத்தில் பிறந்தவர் மா.அரங்கநாதன்(83). மனைவி, மகன், மகளுடன் சென்னையில் வசித்துவந்தார். மகன் மகாதேவன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிவருகிறார். மா.அரங்கநாதன், சங்கத் தமிழ் இலக்கியங்கள், சைவ சித்தாந்தம், மேலை நாட்டு இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘முன்றில்’ எனும் இலக்கியச் சிற்றிதழை நடத்திவந்தார். தியாகராய நகரில் அவர் நடத்திவந்த முன்றில் புத்தக விற்பனையகம், இலக்கியவாதிகளின் சந்திப்பு மையமாக இருந்தது. அவரது முத்துக்கருப்பன் என்ற கதாபாத்திரமானது சமகாலத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை அடையாளப்படுத்தும் குறியீடாக அமைந்தது.
- சாம்ராஜ், எழுத்தாளர், தொடர்புக்கு: naansamraj@gmail.com