Last Updated : 08 Aug, 2016 09:42 AM

 

Published : 08 Aug 2016 09:42 AM
Last Updated : 08 Aug 2016 09:42 AM

ஷர்மிளாவின் முடிவு சரியா?

இரோம் சானு ஷர்மிளா எப்போதுமே திகைக்க வைக்கும் முடிவுகளைத்தான் எடுத்துவந்திருக்கிறார். சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியது; கடந்த 16 ஆண்டுகளாக அதை உறுதியாகக் கடைப்பிடித்து வந்தது, அல்லது திடீரென்று அந்த அறப் போராட்டத்தை நிறுத்திவிட்டு, தேர்தல் களத்தில் குதிப்பதாக அறிவித்திருப்பது, இவை அனைத்துமே திகைப்பை எழுப்பக் கூடியவைதான். மனித வாழ்க்கைக்கு அர்த்தம் தருகின்ற சுவை உணர்வை இத்தனை ஆண்டுகளாகத் துறந்து, தனிமைச் சிறையில் வாடியபோதிலும் சமநிலை மனதோடு அவர் இருந்ததே ஒரு சாதனைதான்.

அவரது இந்த எதிர்பாராத முடிவைக் கண்டு இந்தியா, குறிப்பாக மணிப்பூர் மாநிலம் திகைத்தது உண்மைதான். அதேசமயம், இப்போது உணர்ச்சிகள் தணிந்துள்ள நிலையில், அந்த இரும்புப் பெண்ணின் முடிவு தனது பிரச்சாரத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான மிகவும் யதார்த்தமான ஒரு முடிவுதான் என்று பொதுவாகவே ஒப்புக்கொள்ளப்படுகிறது. மகத்தான மனிதருக்கான இலச்சினையாக அவர் எப்போதுமே இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் எதிர்பார்ப்பதும் நியாயமற்ற ஒன்றுதான். இந்தியாவின் ஓரப் பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட வாழ்நிலைமைகள், அவை சகிக்க முடியாத ஒன்றாக இருந்தபோதிலும், எதிர்காலத்தைப் பொறுத்ததாகவே இருக்கிறது என்பதை உணர்ந்த நிலையில், இது ஒருவித சோகமயமான சரணாகதியே என்ற தோற்றமும் எழுகிறது.

மாற்ற முடியாத சட்டம்

ஆயுதப் படைகளுக்கான (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் இதற்கு ஓர் உதாரணமாக விளங்குகிறது. இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதமோ, அவ்வப்போது மணிப்பூரின் தலைநகரான இம்பால் நகரிலோ, அல்லது காஷ்மீரின் நகர் தெருக்களிலோ வெடித்து எழும் வன்முறை நிரம்பிய எதிர்ப்புக் கிளர்ச்சிகளோ, மத்திய அரசே நியமித்த மூன்று உயர்மட்டக் குழுக்களின் பரிந்துரைகளோ இந்த கொடூரமான கறுப்புச் சட்டத்தை விலக்கிக்கொள்ளவோ, அதன் மோசமான அம்சங்களை அகற்றிக்கொள்ளவோ மத்திய அரசை உந்தவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் ‘ஆயுதப் படைகள் சட்டத்தை மனிதத் தன்மை கொண்டதாக மாற்றுவது’என்று குறிப்பிடப்பட்ட, நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான கமிஷன்; 2005-ல் வீரப்ப மொய்லி தலைமையிலான இரண்டாவது நிர்வாக சீர்திருத்த கமிஷன்; 2012 டிசம்பர் 16-ல் தலைநகர் புது டெல்லியில் நிகழ்ந்த படுமோசமான பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷன் ஆகிய இந்த மூன்று அமைவுகளில் முதல் இரண்டும், இந்த கறுப்புச் சட்டம் அகற்றப்பட வேண்டிய ஒன்று எனவும் அதன் தேவையான அம்சங்கள் ஒரு புதிய உரிமையியல் சட்டமாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தன. நீதிபதி வர்மா கமிஷன் கலவரப் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் ஒரு பகுதியாக இந்த சட்டத்தைக் குறிப்பிட்டது. “பெண்களுக்கு எதிரான ஆயுதப் படையினர் அல்லது சீருடை அணிந்தவர்களின் பாலியல் வன்முறைகள் சாதாரண குற்றச் சட்டங்களின் வரம்புகளுக்கு உட்பட்டே விசாரிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டதோடு, “உள்நாட்டுக் கலவரப் பகுதிகளில் இந்த ஆயுதப் படைகள் சட்டம் மற்றும் இதுபோன்ற சட்டரீதியான மரபுகள் தொடர்ந்து நீடிப்பது குறித்து எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்” என்றும் பரிந்துரைத்தது.

இதற்கான எதிர்ப்பு ராணுவத்தில் இருந்து மட்டுமல்ல; ராணுவத்தைப் பயன்படுத்தாவிட்டால் இந்தியா ஒன்றாகவே இருக்காது என்ற நம்பிக்கை அறிவாளிகளில் முக்கியப் பிரிவினரிடையே ஆழமாகப் பதிந்துள்ள நிலையிலும் வெளிப்படுகிறது. தன்னைக் குடியரசாக பிரகடனப்படுத்திக் கொள்ளும் ஒரு நாட்டின் நிலையை இது மோசமாகப் பிரதிபலிக்கிறது. கிட்டத்தட்ட 70 ஆண்டுகால விடுதலைக்குப் பிறகும்கூடத் தன் மக்கள் மீது அல்லது தன்னுடைய காவல் துறையின்மீது இந்தியாவுக்கு நம்பிக்கை இல்லை என்பதை எப்படிச் சொல்வது? ஒரு குடியரசு அமைப்பில், ராணுவம் என்பது போருக்கான ஒரு கருவி எனில், அது தன் சொந்த மக்களின்மீதே போர் தொடங்க முடியுமா?

இந்தியாவில் அவ்வப்போது வெடித்தெழும் வன்முறை நிரம்பிய கிளர்ச்சிகளை, குறைந்தபட்சம் ஒரு குறுகிய காலத்துக்காவது ராணுவரீதியாகவே சந்திக்க வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தபோதிலும் நிலைமை எவ்வகையிலும் தணியவில்லை எனில், நமக்குள்ளேயே ஏதோ மோசமான தவறு இருக்கிறது என்பதை அது தெரிவிக்கவில்லையா?

உள்நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டுவது காவல் துறையின் கடமை. சில நேரங்களில் காவல் துறையின் வேகம் போதுமானதாக இல்லை எனக் கருதும்போது, அந்த இடத்தில் ராணுவத்தை இறக்குவதைப் புரிந்துகொள்ள முடியும். எனினும் அந்த நேரத்தில், அந்த இடங்களில் அது காவல் துறையின் வேலையைத்தான் செய்வதாகவே கருத வேண்டும் என்றும், இந்தப் பணியை அது செய்துவரும் காலத்தில் மக்களுக்கான சட்டங்களின் வரம்புகளுக்குள் அவையும் கொண்டுவரப்படுவதுதானே சரியாக இருக்கும்? அல்லது இந்தியா இதை நாட்டுக்கு எதிரான ஒரு போராகக் கருதுகிறது என்றால் ஜெனிவா மரபுகள், ஹேக் மரபுகள் போன்ற சர்வதேச யுத்த நியதிகளை அது அனுமதித்து, ஐக்கிய நாடுகள், செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு போன்றவை இவற்றில் தலையிடவும், நெறிகாட்டவும் அனுமதிக்க வேண்டும். அல்லது அது அவ்வாறு நினைக்கவில்லை எனில், ராணுவம் காவல் துறையின் பணிகளைச் செய்யும்போது குடிமைச் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் கோருவதில் என்ன தவறு? தனது சொந்த மக்களின் மீதான அவநம்பிக்கையின் அடிப்படையில், ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வகையில், தன் சொந்த மக்களின்மீதே ராணுவரீதியான ஆக்கிரமிப்பைச் செய்வதன் மூலம் ஏகாதிபத்திய நிர்வாகத்தின் உயிர்த்தன்மையை இந்தியா தனது பாரம்பரிய சொத்தாகப் பெற்றுள்ளது. கடந்த காலத்தின் அநீதி என்ற பழியைத் துடைத்தெறிய வேண்டாமா?

தேவை ஒரு தியாகி

இரோம் ஷர்மிளா இந்தப் பிரச்சாரத்தைத்தான் இவ்வளவு நாட்களாகச் செய்துவந்தார். அவரது நிலைப்பாடு இப்போது மாறியுள்ளதால், இந்தப் பிரச்சாரம் தனது குவிமுனையை இழந்துவிடக் கூடும் என்பதே இதில் ஈடுபட்டுள்ள மற்றவர்களின் கவலைக்கான காரணமாக மாறியுள்ளது. கடந்த வாரம் ஊடகங்களிடையே பேசிய அவர், மக்களிடையே போதிய ஆதரவு இல்லை என்று கூறியபோது, விரக்தியடைந்தவராகவே தோற்றமளித்தார். குறைந்தபட்சம் சாதகமான விளைவு ஏற்பட வேண்டும் என்ற அவரது ஏக்கத்தில் மக்களின் மனநிலை குறித்து அவர் அதீதமாகவே யோசித்திருக்க வேண்டும். அவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஏராளமான செய்திகள், திகைப்பான எதிர்வினைகள் ஆகியவை இதற்குச் சாட்சியங்களாக அமைகின்றன. அவரைப் போல நடந்துகொள்ள மக்களால் முடியாது. யாராலுமே முடியாது.

இந்த கறுப்புச் சட்டத்துக்கு எதிரான பிரச்சாரம் இரோம் ஷர்மிளாவைப் பெரிதும் நம்பியிருந்தது. இந்நிலையில், அவரது முடிவு தந்திருக்கும் அதிர்ச்சியானது இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அனைவருக்குமே ஓர் அறைகூவலாகும். தலைவரை விட, அது எப்படிப்பட்ட தலைவராக இருந்தாலும் சரி, இயக்கத்துக்கான காரணமே தொடர்ந்து முக்கியமானதாக இருக்க வேண்டும். அவர்களில் பலரும் இரோம் ஷர்மிளாவில் ஒரு தியாகியைத்தான் இதுவரை பார்த்துவந்தார்கள். அவ்வகையில் அவர்கள் இப்போது அதிருப்தி அடைந்திருக்கலாம். தியாகிகளுக்கான பசி என்பது சாவையும் எதிர்நோக்கத் துணிபவர்களின் புகழ் வெளிச்சத்தில் தன்னையும் நுழைத்துக்கொள்ளும் கோழைத்தனமான முயற்சி என்ற மணிப்பூரின் பலவீனத்தின் ஓர் அறிகுறிதான். சாவை எதிர்நோக்குவது என்பதொன்றும் பெருமைப்படத் தக்க ஒரு விஷயமல்ல. எனவே, உண்ணாவிரதத்தின் மூலம் சாவோடு விளையாடிக்கொண்டிருந்ததை ஷர்மிளா கைவிட்டதில் வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை.

- பிரதீப் ஃபான்ஜுபாம்,

மணிப்பூரிலிருந்து வெளியாகும் ‘இம்பால் ஃப்ரீ பிரஸ்’ இதழின் ஆசிரியர்.

‘த நார்த் ஈஸ்ட் கொஸ்சின்: கான்ஃப்ளிக்ட்ஸ் அண்ட் ஃப்ராண்டியர்ஸ்’ என்ற நூலின் ஆசிரியர்.

தமிழில்: வீ. பா.கணேசன்

‘தி இந்து’(ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x