Last Updated : 22 Nov, 2013 12:00 AM

Published : 22 Nov 2013 12:00 AM
Last Updated : 22 Nov 2013 12:00 AM

சதுரங்கத்தின் கில்லாடிகள்: ஐராவதமும் கஜேந்திரனும்

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து முழுநேர ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து பலரும் அவரைக் கௌரவித்து எழுதும்படி என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், விஸ்வநாதன் ஆனந்த் - மாக்னஸ் கார்ல்சன் இடையே நடக்கும் உலகக்கோப்பை செஸ் போட்டி பற்றி எழுதுவது இன்னும் சவாலாக இருக்கும் என்று தோன்றுகிறது. கிரிக்கெட்டை நான் தொலைக்காட்சியில் பார்த்த அனுபவம் இருக்கிறது. செஸ் என்று வரும்போது, நான் ஆனந்தை மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் செய்தித்தாளில் மட்டும்தான். இந்தத் தகுதியை வைத்துக்கொண்டு இந்த செஸ் போட்டிபற்றி எழுதுவது நிறைவு தருவதாக இருக்கும்.

வெள்ளை ஏகாதிபத்தியம்

ஆனந்த்-கார்ல்சன் இடையிலான முதல் போட்டியே வெற்றி-தோல்வியின்றி முடிந்தது. ஆனந்த் கறுப்புக் காய்களையும் கார்ல்சன் வெள்ளைக் காய்களையும் கொண்டு ஆடினார்கள். வெள்ளைக் காய்களை வைத்து ஆடுபவருக்குக் கூடுதல் சாதக நிலை இருக்கும் என்று கூறப்படுவதற்குக் காரணம், நிறம் காரணமாக ஆட்டக்காரருக்கு வரக்கூடிய உயர்வு மனப்பான்மை. செஸ் பதத்தில் இது ‘ஒய்ட் சுப்ரீமஸி’ எனப்படுகிறது. ஆனால், செஸ்பற்றி சுத்தமாக எதுவுமே தெரியாதவன் என்ற முறையில், எனக்கு இந்தக் கோட்பாட்டில் உடன்பாடு இல்லை. ஏன் என்று விளக்குகிறேன். செஸ் மைதானம் பொதுவாக, ஆட்டக்காரர்கள் மீதோ விளையாட்டுப் பலகை மீதோ நிழல் விழாதபடிக்கு ஒளியூட்டப்பட்டிருக்கும். இங்கு இருட்டுக்கே இடமில்லை. இத்தகைய சூழலில் வெள்ளைக் காயைவிட கறுப்புக் காயே பளிச்சென்று தெரியும். தவறான காயை வெட்டி ‘சொந்த கோல்’ போடும் அபாயங்கள் குறைவு. இதற்காகத்தான் கிரிக்கெட்டில் இருட்டிய பிறகு வெள்ளைப் பந்து பயன்படுத்தப்படுகிறது.

கார்ல்சனிடம் இல்லாத தகுதிகள்

இதுவரை நடந்திருக்கும் எட்டு ஆட்டங்களில் கார்ல்சன் இரண்டை வென்று முன்னணியில் இருக்கிறார். நியாயமாக ஆனந்தின் கைதான் ஓங்கியிருக்க வேண்டும். காரணம், அவரது வயது, விளையாட்டு அனுபவம், திருமண வாழ்க்கை அனுபவம், ஒளி தணிப்புக் கண்ணாடி (ஆண்டி கிளேர் கிளாஸஸ்) ஆகியவை கார்ல்சனிடம் இல்லாத தகுதிகள். ஆனால், அவை முழு பலனளிக்காதது கார்ல்சனின் திறமைக்குச் சான்றாகும். இருவரின் அணுகுமுறையும் எப்படி வேறுபடுகின்றன என்று பார்ப்போம்.

‘ஐராவதம் மகாதேவன்’

புராதன இந்திய விளையாட்டான சதுரங்கத்தில் வெள்ளை யானைக்கு உள்ள பௌராணிக பலத்தை இளம் கார்ல்சன் அறிந்திருக்கிறாரோ என்னவோ, முதல் ஆட்டத்தில் அவர் ஆனந்தின் மந்திரியைத் தூக்க அதனைப் பயன்படுத்தினார். காஸ்பரோவின் கொசாக்குகளை அநாயாசமாகச் சமாளித்த ஆனந்திடம் கார்ல்சனின் ஐராவதத்துக்குப் பதில் இல்லை. ஆனந்த் தமது மந்திரியை அந்த யானையின் பாதையிலிருந்து விலக்கித் தமது கஜேந்திரனை வெள்ளை யானையின் பாதையில் ஏவினார். ஆனால், இந்திய செஸ் ரசிகர் வட்டாரத்தில் 'ஐராவதம் மகாதேவன்' என்றே பெயர் பெற்றுவிட்ட கார்ல்சனிடம் கறுப்பு யானையைக் காவுகொடுப்பதைத் தவிர, மந்திரியைக் காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை ‘செஸ்’ஆனந்துக்கு. இப்போது ஆனந்த் தமது யானை ஒன்றை இழந்தார். அதன் பின்னர், அடுத்தடுத்த காய் நகர்த்தல்களினூடே ஆட்டம் சமனில் முடிந்தது.

ராணியின் கண்ணியக் குறைவான செயல்

இரண்டாம் ஆட்டத்தில் ஆனந்த் குதிரையால் தாக்கத் தொடங்கினார். இதனால் கார்ல்சனின் காலாட்படையில் முதல் வரிசை ‘ஐயோ’என்று போனது. அடுத்து பின்வரிசையைக் காப்பாற்ற ராணியையே முன்னே நகர்த்தினார் கார்ல்சன். இந்த உளவியல் தந்திரம் அருமையாக வேலைசெய்தது. கார்ல்சனின் ராணி, ஆனந்தின் சிப்பாய்களில் பலரைத் தட்டிவிட்டதோடு மந்திரியையும் நிலைகுலைத்தாள். ராணியின் கண்ணியக் குறைவான நடத்தையைத் தமது ராஜா பார்த்துக்கொண்டிருந்ததை அலட்சியப்படுத்தியதுதான் கார்ல்சனின் அதிரடித் தந்திரம். விளைவு, அடுத்த 53 நிமிடங்களை ஆனந்த் தலையைச் சாய்த்து, மேலுதட்டைப் பிதுக்கி, நெற்றியைச் சுருக்கி, மோவாயைத் தடவியபடி வெள்ளை ராணியை முறைப்பதிலேயே கழித்தார். கண்ணாடியைக் கழற்றித் திருப்பி மாட்ட நான்கு நிமிடங்கள் தனி. இதனால் இந்த ஆட்டமும் சமனில் முற்றியது. ஏன், இருவருமே ஜெயிக்கவில்லை என்றும் கூறலாம்.

கார்ப்போவ் டனலின் இந்திய வேர்கள்

மூன்றாம் ஆட்டத்தில் ஆனந்த் ‘கார்ப்போவ் டனல்’(Karpov Tunnel) என்ற வியூகத்தை வகுத்தார். சிப்பாய்க் குழு, இரு கோணல்நடைக் குதிரைகள் அடங்கிய குதிரைப்படை, தந்தமற்ற இரு யானைகள் அடங்கிய யானைப்படை, ஒற்றை மந்திரி ஆகியவற்றை ராணியிடமிருந்து விலக்கினார் ஆனந்த். அதாவது, ராணியைப் பாதுகாப்பில்லாததாகக் காட்டி எதிரியின் வலுவான காய்களை உள்ளே இழுத்து, அதற்குப் பின்னர் அந்தக் காய்களைச் சூழ்ந்து ஒவ்வொன்றாகத் தூக்குவதுதான் ‘கார்ப்போவ் டனல்’.

இதன் வேர்கள் இந்திய சடுகுடு (கபடி) ஆட்டத்தில் இருக்கின்றன. ராணியைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவது இந்தியாவுக்கே உரிய பிற்போக்கு அணுகுமுறை எனலாம். அது மட்டுமல்ல, வியூகமான இந்த எதிரிகள் ஸ்திரீலோலர்கள் என்று அனுமானிக்கிறது. கார்ல்சனின் வெள்ளைக் காய்களோ கையில்லா ஆடைகளுக்கும் இறுக்கமான ஜீன்ஸுக்கும் புக்ககமான மேலைக் கலாச்சாரத்தில் பிறந்து ஊறியவை; பிகினி டிஃபென்ஸ் எனப்படும் சக்திவாய்ந்த நகர்வுக்கும் அசையாதவை. ஆக, ஆனந்தின் வியூகம் தவிடுபொடியானது. ஆனால், அதற்கு கார்ல்சன் இரு குதிரைகளைப் பலிகொடுக்க வேண்டியிருந்தது. இதில் கார்ல்சனின் தியாக மனப்பான்மை தலையைக் காட்டுவதைக் கவனிக்கலாம்.

ரசிகர்கள் அதிருப்தி

மூன்று ஆட்டத்தில் மூன்று சமன்கள். இது இரு ஆட்டக்காரர்களுக்குமே நிர்ப்பந்தமான சூழ்நிலைதான். வெற்றி-தோல்வி இல்லாத நிலை பார்வையாளர்களின் பொறுமையையும் சோதித்தது. மூன்றாம் ஆட்டம் முடிந்த பின்பு, அதிருப்தியடைந்த பார்வையாளர்கள் சிலர் ஹயாட் ரீஜன்சி ஹோட்டலின் செஸ் மைதானத்தில் நாற்காலிகளை எரித்தார்கள். ரசிகைகள் கார்ல்சனின் காதுபட அவரை இழிவாகப் பேசியதையும் நேரடி ஒளிபரப்பில் பார்க்க முடிந்தது. இதனால், இரு மேதைகளும் நான்காம் ஆட்டத்தில் வேறு மாதிரி ஆடிப்பார்த்தார்கள்.

‘கண்ணாடியைப் பார்க்கும் அழகி’ உத்தி

கார்ல்சன் அதிரடியாக ஆடத் தொடங்கினார். ஒரே சமயத்தில் எட்டு சிப்பாய்களையும் இரண்டு கட்டம் முன்னே நகர்த்தினார். ஆனந்தின் அணுகுமுறை நேரெதிரானது. அவர் ஒரு காயையும் நகர்த்தவில்லை. கார்ல்சனின் செஸ் நாணயங்கள் அருகே வரும் வரை அமைதியாக இருக்கும் ‘கண்ணாடியைப் பார்க்கும் அழகி’(பியூட்டி லுக்ஸ் அட் மிரர்) என்ற உத்தியைக் கையாண்டார் ஆனந்த். உண்மையில், இது குங்ஃபூ உத்தி. துரதிர்ஷ்டவசமாக ஆனந்துக்கு இந்தத் தந்திரம் வேலைசெய்யவில்லை. கார்ல்சனின் இரு யானைகள் மற்றும் ராணியிடம் ஆனந்தின் சக்ரவர்த்தி சிக்கிக்கொண்டார். விளைவு, அவர் (ஆனந்த்) ஜெயிக்கவில்லை.

20-20 செஸ் போட்டி ஏன் கூடாது?

ஐந்தாம் ஆட்டத்திலிருந்து எனக்கு செஸ்ஸில் இருந்த திடீர் ஆர்வம் பரிபூரணமாக விலகியது. கிரிக்கெட்டுக்கு டெஸ்ட் மேட்ச்சு கள் இருப்பதுபோல் சதுரங்கத்துக்கு செஸ் போட்டிகள். இரண்டுமே கலை வடிவங்கள்தாம் என்றாலும், ஆட்டக்காரர்கள் அடுத்த காயை நகர்த்துவதற்குள் நமக்கு நாலு கல்யாணம் ஆகிவிடுகிறது. எனவே 5, 6, 7, 8 ஆகிய ஆட்டங்களை இணையத்தில் ஹைலைட்ஸாக மட்டும் பார்த்தேன். செஸ்ஸை ஆடும்போதே எடிட் செய்த வடிவத்தில் ஆடுவது இந்த விளையாட்டுக்கு அதிக ரசிகர்களைச் சேர்க்கும் என்று பத்து நாளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதை நிரூபிப்பதுபோல் இருவரும் ஹைலைட்ஸில் ஐந்து நிமிடங்களில் ஆடி முடித்துவிட்டார்கள். ஐந்திலும் ஆறிலும் ஆனந்த் தோல்வியுற்றார். ஏழாவது, எட்டாவதில் மீசையில் மண் ஒட்டவில்லை.

ஒன்று புரிகிறது. இந்திய செஸ்ஸுக்கு ஆனந்த் ஆற்றிய சேவை மறுக்க முடியாதது. அவர் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார். எண்ணற்ற இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்துவருகிறார். இருந்தாலும், இந்த எட்டு ஆட்டங்களில் அவர் தள்ளாத வயதை எட்டிவிட்டது தெரிந்தது. மைதானத்தில் நின்று ‘ஆனந்த்... ஆனந்த்!’ என்று கத்தும் ரசிகர்களுக்காகவாவது அவர் ஓய்வுபெற வேளை வந்துவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை. அதாவது எனக்கு.

பேயோன், கவிஞர், கட்டுரையாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: writerpayon@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x