

இந்த ஆண்டு உலக சுற்றுச் சூழல் தினத்தை இந்தியா மகிழ்ச்சியாகக் கொண் டாடியதில் உண்மையிலேயே அர்த்தம் இருந்தது. இந்தியாவில் புதிதாக 313 விலங்கினங்களும் 186 தாவர இனங்களும் இருப்பது 2016-ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விலங்கியல் கணக்கெடுப்புத் துறை, இந்தியத் தாவரவியல் கணக் கெடுப்புத் துறை இந்த மகிழ்ச்சி யான கண்டுபிடிப்புகளை சமீபத்தில் ஆவணப்படுத்தியுள்ளன.
புதிய விலங்கினங்களில் 258 முதுகெலும்பற்றவை, 55 முதுகெலும் புள்ளவை. 87 பூச்சி ரகங்கள். 27 மீன் இனங்கள். 12 நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. 10 தட்டைப் புழுக்கள். 9 ஓட்டுடலிகள், 6 ஊர்வன. 61 அந்துப்பூச்சிகள் - வண்ணத்துப்பூச்சிகள். 38 வண்டுகள்.
இமயமலைப் பகுதிகள், வட கிழக்கு மாநிலப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, அந்தமான் - நிகோபார் தீவுப் பகுதிகளில் இவற்றில் பெரும்பாலானவை அடையாளம் காணப்பட்டதாக இந்திய உயிரியல் கணக்கெடுப்புத் துறை இயக்குநர் கைலாஷ் சந்திரா தெரிவித்தார்.
ஒரு லட்சம் விலங்கினங்கள்
இந்தியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ள விலங்கினங்களின் வகைகளுடன் சேர்த்தால், இந்தியாவில் வாழும் விலங்கின வகைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. புதிய எண்ணிக்கை 1,00,693. கடந்த ஆண்டு இது 97,514 ஆக இருந்தது. வெவ்வேறு வகையிலான உயிரினங்கள் பரந்துபட்டு வாழும் 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக அளவில் வசிக்கும் உயிரிகளில் 6.42% இந்தியாவில் காணப்படுகின்றன.
2016 - ல் புதிதாக 186 தாவர வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 7 புதிய தலைமுறையைச் சேர்ந்தவை. 4 ஏற்கெனவே இருக்கும் இனங்களின் துணைப் பிரிவைச் சேர்ந்தவை. 9 இந்தியாவில் மட்டும் காணப்படும் புதிய வகைகள்.
புதிய தாவரங்களில் 17% மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், 15% கிழக்கு இமயமலைப் பகுதிகளிலும், 13% மேற்கு இமயமலைப் பகுதிகளிலும் 12% கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் 8% மேற்குக் கரைப் பகுதியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 8 புதிய வகை காட்டு பிசின்கள், 5 காட்டு இஞ்சி ரகங்கள், ஒன்று காட்டு நெல்லி ரகம். 39 வகைக் காளான்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தோட்டக் கலைப் பயிராக வளர்க்கப்படக் கூடிய இவற்றில் சில மருத்துவக் குணங்களைக் கொண்ட மூலிகை ரகங்களாகும் என்கிறார், இந்தியத் தாவரவியல் கணக்கெடுப்புத் துறை இயக்குநர் பரம்ஜீத் சிங்.
தமிழில்: சாரி