தூக்கம் வராமல் புரளுகிறீர்களா?

தூக்கம் வராமல் புரளுகிறீர்களா?

Published on

கண்ணை மூட முடியாதது மட்டும் அல்ல.. மனம் அல்லது மூளை விழித்தே இருக்கும் தருணம் அது

நரகம் என்றால் என்ன என்பதைத் தூக்கமின்மையால் அவதிப்படுகிறவர்களைக் கேட்டால்தான் புரியும்! உடலைத் தளர்வாக வைத்து, மனதை லேசாக்கிக்கொண்டு, எப்படி எப்படியெல்லாமோ படுத்துப் பார்த்தாலும்கூட இமையை மூட முடியாத அந்த இம்சை இருக்கிறதே.. எந்தத் தண்டனையும் அதற்கு ஈடாக முடியாது. அப்படி என்ன இம்சை அதில்? கண்ணை மூட முடியாதது மட்டும் அல்ல மனம் அல்லது மூளை விழித்தே இருக்கும் தருணம் அது!

அடுத்தடுத்து ஏதாவது சிந்தனைகளாக தோன்றிக்கொண்டே இருக்கும். ஒருவித பதற்றம் தலைதூக்கும். இந்த நிலை முற்ற முற்ற உங்களுடைய கவலை, சோர்வு, எதிலும் கவனம் செலுத்த இயலாமை என்று எல்லாமுமே அதிகரிக்கும். இப்படி அவதிப்படுவது யாரோ ஒருவர், ஓராயிரம், சில லட்சம் அல்ல; உலகில் கோடிக்கணக்கானவர்கள் இரவில் இன்றைக்கு இப்படிப் படுக்கையில் பாம்பாக நெளிகிறார்கள் (இப்போது உங்களுக்குச் சற்று நிம்மதியும் ஆறுதலும் ஏற்பட்டிருக்குமே!)

பிரிட்டனைச் சேர்ந்த நடிகை கிம் காட்ரால், ‘ரேடியோ டைம்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில், தூக்கமின்மை ஒரு நோயாகத் தன்னைக் கடுமையாகப் பாதித்துக்கொண்டிருப்பதாகச் சமீபத்தில் கூறியிருக்கிறார். பிரிட்டனின் அனைத்துப் பகுதி மக்களின் சுகாதாரம் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்வோர் அவர்களுடைய தூக்க நேரம் குறித்து மட்டும் கவனம் செலுத்தியதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. நாட்டுமக்களில் மூன்றில் ஒரு பங்கினர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். 2010-ல் நடத்திய ஆய்வில் இந்த அளவு 27% ஆக இருந்தது. 2012-ல் நடத்திய ஆய்வின்போது, தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தோர், 11 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாங்கள் இதை அனுபவித்துவருவதாகக் கூறியுள்ளனர். ‘தி கார்டியன்’ பத்திரிகை தன்னுடைய வாசகர்களிடம் இதுபற்றிக் கேட்டபோது 147 வாசகர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தூக்கமின்மை நோய் பற்றி விவரித்துள்ளனர். அவர்களில் சிலர் இதையும் மீறி எப்படித் தூங்கப் பழகினோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

யோகம் தரும் உத்வேகம்

அன்னி டாயல் (45): ‘‘இது பரம்பரையாக வரும் குடும்ப நோய். மன அழுத்தம் அதிகரிக்கும்போது தூக்கமின்மை மட்டுமல்ல; தூக்கமற்ற - பக்கவாதம்கூட ஏற்பட்டுவிடுகிறது. மனம் விழித்துக்கொண்டே இருக்கிறது. அதே சமயம் கை, கால்களைக்கூட விருப்பப்படி நீட்டவோ, மடக்கவோ முடிவதில்லை. கனவு வராமல் இருப்பதற்காகக் கண்விழி அப்படியும் இப்படியுமாக உருண்டுகொண்டே இருப்பதைப் போன்ற ஒரு நிலை.

தூக்கமின்மை ஏற்பட்டுவிட்டால் மனம் உற்சாகமிழந்துவிடுகிறது; உடலியக்கமும் மெத்தனமாகிவிடுகிறது. பக்கத்தில் யாராவது இருப்பதை விரும்புவதே இல்லை. அந்நேரத்தில், எந்த முடிவெடுத்தாலும் சரியாகவே இருப்பதில்லை. யாராவது வந்து ஏதாவது கேட்டால்கூட எரிந்துவிழத் தோன்றுகிறது. காரை ஓட்டிச் செல்லும்போது எதன் மீதாவது மோதிவிடலாமா என்றுகூட ஆத்திரம் ஏற்படுகிறது. ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் யோக நித்திரை என்ற பயிற்சியை மேற்கொண்டேன். அமைதியற்ற மன நிலையிலிருந்து நீங்கி, நல்ல தூக்கத்துக்குக் காரணமாக இருக்கும் அமைதியான மன நிலைக்குச் செல்ல யோகாசனம் உதவுகிறது. மன அழுத்தத்தை அதிகரிக்கும் நிலையிலிருந்து விலகி வாழவும் கற்றுக்கொண்டுவிட்டேன்.’’

ஆடுகளை எண்ணுங்கள்

லைன் (48): ‘‘நண்பரின் இறப்பினால் தூக்கத்தை இழந்து அவதிப்பட்டேன். 2005 ஜனவரியில் நண்பர் இறந்தார். அந்த ஆண்டு செப்டம்பர் வரையில் நாள் முழுக்க ஓரிரு மணி நேரம் மட்டுமே அரைகுறையாகத் தூங்குவேன். ஒரு நாள் இரவு விமானத்தில் ஏறி வெளியூர் சென்றேன். அப்போது தூங்க ஆரம்பித்தேன்; மறுநாளிலிருந்து வழக்கமான 7 மணி நேரத் தூக்கம் கிடைத்துவிட்டது.

தூக்கம் வராவிட்டால் அதையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள், தூக்கம் இல்லை என்று புலம்பாதீர்கள்; தூக்கம் வராதபோது முதலில் கடிகாரத்தைப் பார்ப்பேன். சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்ப்பேன். தூங்குவதற்காக மந்தையில் உள்ள ஆடுகளை எண்ணுவதைப் போன்று கற்பனை செய்துபார்த்தேன். ஆடுகள் ஆயிரக்கணக்கில் இருந்தனவே தவிர, தூக்கம் வரவில்லை. இப்போது அப்படிப்பட்ட நிலை வந்தால் மணி என்ன என்று கடிகாரத்தைப் பார்ப்பதில்லை. அறையில் விளக்குகளை அணைத்துக் கூடுமானவரை இருட்டாக்குவேன். அறை ரொம்பச் சூடாகவோ, ரொம்பக் குளிர்ச்சியாகவோ இல்லாமல் உற்ற தட்ப வெப்பத்தில் இருக்கும்படி மாற்று வேன். மூச்சைத் தொடர்ந்து லேசாக இழுத்து விடுவேன் அது தூக்கத்தைக் கொண்டுவந்து சேர்க்கும்.’’

மன அழுத்தத்துக்கு மருந்து

லின் (44): ‘‘மன அழுத்தமும் பதற்றமும்தான் தூக்கமின்மைக்குக் காரணம். வாழ்நாளின் பெரும் பகுதி தூக்கமில்லாமல் அவதிப்பட்டுவருகிறேன்.

தூக்கத்தை வரவழைப்பதற்காக ஆரம்பத்தில் ஆல்கஹால் அல்லது ஒவ்வாமையை முறிக்கத் தரப்படும் மாத்திரை போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினேன். தூக்கம் வராவிட்டால் மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதோ மதுவை நாடுவதோ பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாகப் பெரிதாக்கிவிடும்.

தூக்கம் வராவிட்டாலும் கை - கால்களைத் தளரவிட்டு, சும்மா படுத்திருப்பதே நல்லது. மன அழுத்தத்தைப் போக்க சிகிச்சை பெற ஆரம்பித்ததும் தூக்கம் வரத் தொடங்கிவிட்டது. இப்போதும் தினந்தோறும் அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகிறது. மீண்டும் முயற்சி செய்து காலை 4.30 மணிக்குத் தூங்கத் தொடங்கிவிடுவேன்.’’

உடலை வறுத்தெடுங்கள்

டேவிட் ஆண்ட்ரூஸ் (49): ‘‘அதிகாலையில் நல்ல உடற்பயிற்சிகளைச் செய்வது இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். சுவாசப் பயிற்சிகளால் இதயத் துடிப்பு குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். சில வேளைகளில் தூக்கம் வராத அறையைவிட்டு வேறு அறைக்குச் சென்று தூங்க முயல்வதுகூட நல்லது.’’

சாப்பாட்டைக் கவனியுங்கள்

ஜான் வாட்சன் (70): ‘‘தூக்கமின்மைக்குச் சாப்பாடும் முக்கிய காரணம். சமீபத்தில்தான் கொஞ்சம்கூட மாவுச்சத்து இல்லாத உணவுக்கு மாறினேன். அதிலிருந்து தினமும் 7 மணி நேரம் இரவில் தூங்குகிறேன். தூக்கமின்மை போய்விட்டதா என்று என்னை நானே வியப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’’

படுக்கையறை தூங்க மட்டும்

அமி (28): ‘‘நல்ல படுக்கையறைப் பழக்கங்களும் சுகாதாரமும் முக்கியம். 25 வயது முதல் 27 வயது வரை தூக்கமின்றி மிகவும் அவதிப்பட்டேன். பிறகு, நண்பர்களிடம் அதுகுறித்துப் பேசினேன். அவர்கள் கூறிய ஆலோசனைப்படி மன இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டேன். படுக்கை அறையில் நல்ல காற்றும் வெளிச்சமும் வரச் செய்தேன். தூய்மையைப் பராமரித்தேன்.

இப்போதைய உலகில் நிரந்தர வேலை கிடைக்கும் என்பது உத்தரவாதமல்ல, அதற்காக மனதை அலட்டிக்கொள்ளக் கூடாது என்ற பாடத்தை எனக்கு நானே படித்துக்கொண்டேன். இப்போது இரவில் நன்றாக உறங்குகிறேன். படுக்கை அறையைத் தூங்க மட்டும் பயன்படுத்துங்கள். அங்கே மடிக்கணினியோ தொலைக்காட்சியோ இருக்கக் கூடாது. சாப்பாடு, பானம் ஆகியவற்றிலும் கவனம் தேவை. இரவு 7 மணிக்கு மூலிகைத் தேநீர் சாப்பிடுவது நல்லது. வேலைக்குப் பிறகு ஓய்வு தேவை என்ற நிலையில் யாராவது பேச வந்தாலோ, வெளியில் அழைத்துச்செல்ல வந்தாலோ தாட்சண்யப்படாதீர்கள், எனக்கு ஓய்வு தேவை - நான் தூங்க வேண்டும் என்று சொல்லிவிடுங்கள்.’’

எளிய வழி தூக்கம்

பிரான்சல் டெஸ்மாண்ட் (30): ‘‘தொடர்ந்து 3 நாட்களுக்கு வெறும் 3 மணி நேரம் மட்டுமே தூங்குவேன். அடுத்தடுத்து 2 முழு இரவுகள் தூக்கமில்லாமல் தவித்திருக்கிறேன். சில வாரங்களில் மொத்தமே 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தூங்கியிருக்கிறேன். தேர்வுகளுக்கு முன்னாலும் அலுவலகத்தில் முக்கியமான வேலைகளுக்கு முன்னதாகவும் இரவுகளில் தூக்கம் வராமல் தவிப்பேன். தூக்கம் வரவில்லை என்பதற்காகக் கோபமோ ஆத்திரமோ கொள்ளாதீர்கள். நமக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அச்சப்படாதீர்கள். மூச்சை நன்றாக இழுத்துவிடுங்கள். உங்களுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள். தூக்கம் வரவில்லை என்பதை யதார்த்தமாக எடுத்துக்கொள்ளுங்கள்.. அதற்காகக் கத்திக் கூச்சலிட்டு தலையணையைக் குத்திக் கிழித்து ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள். அமைதியாக இருங்கள். தூக்கமின்மையைத் தூங்கியே வெல்லுங்கள்.

© ‘தி கார்டியன்' தமிழில் : சாரி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in