

இந்திய ஆங்கில வாசகர் வட்டாரத்தின் வெகுஜன எழுத்தாளராக அறியப்படுபவர் சேத்தன் பகத். ‘ஃபைவ் பாயின்ட்ஸ் சம் ஒன்’, ‘ஒன் நைட் அட் தி கால் சென்டர்’, ‘2 ஸ்டேட்ஸ்’ போன்ற ஆங்கில நாவல்கள் மூலம் புகழ்பெற்றவர். அவரது நாவல்கள் திரைப்படங்களாக (‘3 இடியட்ஸ்’, ‘கை போ சே’, ‘2 ஸ்டேட்ஸ்’) எடுக்கப்பட்டுப் பெரும் வெற்றிபெற்றவை.
ஐஐடி மாணவர்களின் உலகம், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், மொழி - கலாச்சார வேறுபாட்டை எதிர்கொள்ளும் இளைஞர்கள் என்று இவர் கையாளும் கதைகள் சமகால இந்திய இளைஞர்களைப் பிரதிபலிப்பதால், இவருடைய புத்தகங்கள் ஏராளமாக விற்றுத்தீர்கின்றன. ‘பாலிவுட் படங்களுக்கான கதையை எழுதுபவர்’ என்ற பெயர் விமர்சக வட்டாரத்தில் இவருக்கு உண்டு.
இரு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தனது ‘ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்ட்’ நாவலை சமீபத்தில் வெளியிட்டார் சேத்தன் பகத். இந்த நாவலை ஏற்கெனவே விமர்சகர்கள் குதறிவிட்டனர். “இதற்கு முந்தைய நாவல்கள் சொந்தக் கதையை வைத்து எழுதப்பட்டதால், படிக்கவாவது முடிந்தது. ஆனால், இந்த நாவல்…” என்றெல்லாம் விமர்சனங்கள். ஆனால், ஓடாத படத்துக்கு உண்மையான கதாசிரியர் நான்தான் என்று அவ்வப்போது தொடரப்படும் வழக்குகள்போல், இப்போது சேத்தன் பகத்மீது புகார் எழுந்திருக்கிறது.
பாட்னாவில் ஆங்கில மொழிப் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவரும் டாக்டர் பீர்பால் ஜா என்பவர், ‘ஹாஃப் கேர்ள் பிரெண்ட்’ நாவல், தான் எழுதிய ‘இங்கிலிஷியா போலி’ என்ற நாடகத்தின் அப்பட்டமான நகல் என்று கூறியிருக்கிறார். சேத்தன் பகத்தின் நாவலில் பிஹாரைச் சேர்ந்த மாணவர் ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’வில் டெல்லி கல்லூரி ஒன்றில் சேர்கிறார். ஆங்கில மொழியறிவுக் குறைவால் தாழ்வுமனப்பான்மை கொண்ட அந்த மாணவர், நவநாகரிக டெல்லி மாணவியை ஒருதலையாகக் காதலிக்கிறார். இதுதான் சேத்தன் எழுதிய நாவலின் அடிப்படைக் கதை. “இந்தக் கதை அப்படியே எனது நாவலிலிருந்து உருவப்பட்டது” என்கிறார் பீர்பால்.
“நான் நடத்தும் பயிற்சி நிறுவனத்துக்கு சேத்தன் பகத் வந்திருந்தார். ஆங்கிலப் பயிற்சிக்காக நான் எழுதிய புத்தகங்களை அவரிடம் கொடுத்தேன். மேலும், எனது மேடை நாடகம் ஒன்றையும் அவர் பார்த்தார். கடைசியில் என் கதையைத் தழுவி நாவல் எழுதிவிட்டார்” என்று கூறியிருக்கிறார். இதைத் தவிர இந்த நாவலில் தங்கள் குடும்பத்தை இழிவுபடுத்திவிட்டார் சேத்தன் பகத் என்று தும்ராவ் பகுதியின் அரச குடும்பத்தினரும் அவர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். தவிர, பிஹார் மக்கள் ஆங்கிலம் அறியாதவர்கள் என்று நாவல் சித்தரிப்பதால் ஆத்திரமடைந்த பிஹார் இளைஞர்கள் நாவலின் பிரதிகளைத் தீயிலிட்டு எரித்துள்ளனர்.
இந்த விவகாரங்களால் சற்றே கிலேச மடைந்திருக்கும் சேத்தன் பகத், ட்விட்டரில் குமுறிக்கொண்டிருக்கிறார். ஆனால், இரு கதைகளுக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து அவர் தரப்பில் விளக்கம் தரப்பட வில்லை. இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், நாவலைப் படமாக்க ஏக்தா கபூர் தயாராகிவிட்டார். படம் வெளிவரும்வரை பொறுத்திருந்து அப்புறமாக பீர்பால் அந்தப் புகாரைச் சொல்லியிருந்தால் ஏதாவது ‘கொஞ்சம்’ தேறியிருக்கும். மனிதர் சற்று அவசரக்காரர் போலிருக்கிறது!
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in