

பார்வையற்றோருக்கான புத்தகங்கள்!
“இவ்வளவு பெரிய புத்தகக் காட்சியில், பார்வையற்றோருக்கென்று ஒரு புத்தகம் கூட இல்லையா? என்ற ஏக்கத்தைப் போக்கியிருக்கிறது இந்திய பார்வையற்றோர் சங்கம். இங்கே பார்வையற்ற குழந்தை களுக்கான பள்ளிப் பாடநூல்கள், கையேடு, தமிழ் அகராதி, சிறுவர் இலக்கியம், வாழ்க்கை வரலாறு என்று நூற்றுக் கணக்கான புத்தகங்களை பிரெயில் எழுத்துக்களில் அச்சடித்து வைத்திருக்கிறார்கள். எழுத்தாளர் இமையத்தின் சில படைப்புகளும் பிரெயில் வடிவில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்த பார்வையற்றோருக்கு இந்தத் தகவலைச் சொல்லுங்கள். முடிந்தால், நீங்களே ஒரு புத்தகத்தை வாங்கிப் பார்வையற்றோருக்குப் பரிசளியுங்கள். அவர்களைப் புதிய உலகுக்குக் கரம் பிடித்து அழைத்துச் சென்ற மனநிறைவு கிடைக்கும்! பார்வையற்றோர் தொட்டு வண்ணங்களை உணரக்கூடிய வரைபடங்கள், எழுத்தறியும் கருவிகள் உள்ளிட்டவையும் இங்கே கிடைக்கின்றன. மிகச் சிறந்த பிரெயில் அச்சகத்துக்கான தேசிய விருதைப்பெற்ற நிறுவனம் இது என்பது கூடுதல் தகவல்.
வாசகர்களைக் கவர்ந்த நா.முத்துகுமார்!
இறந்தும் கொண்டாடப்படுகிறார் நா. முத்துக்குமார். அவர் எழுதிய ‘பட்டாம்பூச்சி விற்பவன்’, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’, ‘குழந்தைகள் நிறைந்த வீடு’, ‘அ.. ஆ...’ போன்ற கவிதை நூல்கள் அனைத்தும் ‘நா. முத்துக்குமார் கவிதைகள்’ என்று ஒரே புத்தகமாக வந்துள்ளது. இந்தப் புத்தகமும், ‘கண் பேசும் வார்த்தைகள்’, ‘பாலகாண்டம்’ போன்ற அவரது உரைநடை நூல்களும் சிவகுரு பதிப்பக அரங்கில் (எண்:193) கிடைக்கின்றன. ஜப்பானியக் கவிதைகளை மொழிபெயர்த்து அவர் வெளியிட்ட ‘என்னை சந்திக்கக் கனவில் வராதே’ புத்தகமும் இங்கே கிடைக்கிறது. அதேபோல ‘அணிலாடும் முன்றில்’, ‘வேடிக்கை பார்ப்பவன்’ போன்ற நூல்களின் விற்பனையும் படுஜோர்!
காவிரி மன்றத் தீர்ப்பும், முல்லை பெரியாறு ஒப்பந்தமும்!
மதுரை மண்ணைச் சேர்ந்த கருத்துப்பட்டறை பதிப்பக அரங்கில் (10), முல்லை பெரியாறு அணை தொடர்பாக திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும், பிரிட்டிஷ் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் தமிழாக்கம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் (2007) தமிழாக்கம் போன்ற இன்றைக்கு அவசியத் தேவையாக உள்ள ஆவணங்கள் புத்தகங்களாக உட்கார்ந்திருக்கின்றன. வெளிவராத ஆவணங்கள், புறக்கணிக்கப் பட்ட, திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறுகள் போன்றவற்றைப் புத்தகமாக வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டும் கருத்துப்பட்டறையின், ‘சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர்’ நூல் சாதித் துவேஷங்களைக் கடந்து ஆய்வுநோக்கில் எழுதப்பட்டுள்ளது.
‘மருத்துவர்’ மகாத்மா காந்தி!
மதுரை காந்தி அருங்காட்சியகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, ‘காந்திய இலக்கிய சங்கம்’ செயல்பட்டுவருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். காந்தியின் எழுத்துக்களை ஏராளமான சிறுநூல்களாக அச்சிட்டு, 10 ரூபாய், 20 ரூபாய் என்று மலிவு விலையில் விற்பனை செய்துவருகிறார்கள். உலகமே இயற்கை மருத்துவத்தின் பால் கவனத்தைத் திரும்பியுள்ள இந்த காலகட்டத்தில், காந்தியின் புலனடக்கம், ஆரோக்கிய உணவு, மண் சிகிச்சை குறித்த புத்தகங்கள் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. தவிர, வினோபா, மகரிஷி க. முனியாண்டி, சுவாமி நாகலிங்கம், மகரிஷி க.அருணாசலம், மருத்துவர்கள் வெங்கடராவ், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் எழுதிய இயற்கை மருத்துவ நூல்கள் மற்றும் இயற்கை விவசாயம், தேசிய தலைவர்கள், சுய முன்னேற்றம் போன்ற புத்தகங்களும் இங்கே கிடைக்கின்றன. அரங்கு எண்: 191.
பதில் சொன்னால் புத்தகம் பரிசு!
புத்தகக் காட்சிக்கு வரும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் சூரியன் எப்.எம். நிறுவனம் சார்பில் கேள்விகள் கேட்டுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, புத்தகம் வாங்க வசதியில்லாத மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான புத்தகத்தின் பெயரை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தந்துவிட்டுப் போகலாம். தினமும் குலுக்கல் முறையில் 10 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் விரும்பிய புத்தகத்தையும் வாங்கித் தருகிறோம் என்கிறார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சுப்பிரமணிகண்டன்.
ஏவ்... திருப்தியோ திருப்தி!
புத்தகக் காட்சிக்குச் செல்வோரெல்லாம் ‘மிளகாய் பஜ்ஜியும், மினி இட்லியும்தான் நமது தேசிய உணவா?’ என்று சிந்திக்கிற அளவுக்கு கேன்டீன்வாலாக்கள் பாடாய்ப் படுத்துவார்கள். மதுரை புத்தகக் காட்சியில் ஒரு நல்ல விஷயம். 80 ரூபாய்க்கு ரெண்டு கூட்டு, அப்பளம், சாம்பார், ரசம், மோருடன் முழுச் சாப்பாடே போடுகிறார்கள். காலையில், தக்காளி, தயிர் சாதமும் உண்டு. புத்தகக் காட்சி மரபுப்படிதான் சாப்பிடுவோம் என்று அடம் பிடிப்பவர்களுக்காக, மிளகாய் பஜ்ஜி, காலிபிளவர் 65, பேல் பூரி, பானி பூரி, டெல்லி அப்பளம் வகையறாவும் இருக்கிறது.
‘தி இந்து’ அரங்கில்...
மதுரை புத்தகத் திருவிழாவில் இவ்வாண்டும் ‘தி இந்து’அரங்கு இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இருந்த அதே இடத்தில்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
ஏற்கெனவே விற்பனையில் சக்கை போடு போடும் நூல்களுடன் புதிய வரவான, ‘மண் மணம் சொல்லும் மாவட்ட சமையல்’, ‘ஆங்கிலம் அறிவோமே’, ‘நம் கல்வி நம் உரிமை’, ‘இந்தியாவும் உலகமும்’, ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’, ‘வீடில்லா புத்தகங்கள்’, ‘ஆங்கிலம் அறிவோமே பாகம்- 2’, ‘மனசு போல வாழ்க்கை’, ‘பெண் எனும் பகடைக்காய்’, ‘ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு’, ‘காற்றில் கலந்த இசை’, ‘தொழில் கலாச்சாரங்கள்’, ‘தொழில் ரகசியம்’, ‘ஸ்ரீ ராமானுஜர் 1000’, ‘ஆனந்த ஜோதி’ உள்ளிட்ட நூல்களும், ஆங்கில வெளியீடுகளும் கிடைக்கின்றன. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதத் தள்ளுபடி உண்டு.