

வங்கக் கடலில் விழுந்த விமானத்தை மாதக் கணக்கில் தேடிக்கொண்டு இருக்கிறோம் நாம். வால்நட்சத்திரத்தில் விழுந்த விண்கலத்தையே கண்டுபிடித்து விட்டார்கள் ஐரோப்பிய விஞ்ஞானிகள்.
அது எப்படி அங்கே போய் விழுந்தது என்று கேட்கிறீர்களா?
வால்நட்சத்திரம் என்பது நட்சத்திரம் கிடையாது. விண்கற்கள், சிறுகோள்கள் மாதிரி சூரியனைச் சுற்றிக்கொண்டிருப்பது. அதன் நடுவில் பனிக்கட்டி இருக்கும், சுற்றிலும் தூசிப்படலம் இருக்கும். சூரியனை நெருங்கும்போது, எல்லாம் உருகி வால்போல ஒன்று அதற்கு உருவாகும்.
கூடுதலாகத் தெரிந்துகொள்வதற்காக, ‘67பி சுரியமோவ் கெரசமென்கோ’(67P Churyumov - Gerasimenko) என்ற வால்நட்சத்திரத்துக்கு ‘பீலே’(Philae) என்கிற விண்கலத்தை அனுப்பியது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம். வால்நட்சத்திரத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு அதை ஆராய்வதுதான் இந்த விண்கலத்தின் நோக்கம். 2004-ல் அனுப்பப்பட்ட இந்த விண்கலம், 3,907 நாட்கள் கழித்து (கிட்டத்தட்ட 10 ஆண்டுகள்) 2014 நவம்பர் 12-ம் தேதி போய்ச் சேர்ந்தது. உலகிலேயே முதன்முறையாக வால்நட்சத்திரத்தில் விண்கலத்தைத் தரையிறக்கிய பெருமையும் அவர்களுக்குக் கிடைத்தது.
ஆனால், சின்ன தொழில்நுட்பக் கோளாறு. பூப்போல போய் இறங்கியிருக்க வேண்டிய விண்கலம், தூக்கியெறிந்த பந்து மாதிரி தொப்பென விழுந்து கடகடவென உருண்டது. ஆனாலும், அது பூமியோடு தொடர்பில் இருந்தது. திடீரென பேட்டரியில் சார்ஜ் இறங்கி, தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது எங்கே கிடக்கிறது, வால்நட்சத்திரத்துலதான் இருக்கா என்று விஞ்ஞானிகளுக்குக் குழப்பமோ குழப்பம்.
கடந்த வாரம் அந்த வால்நட்சத்திரம் சூரியனை நெருங்கியபோது, டக்கென்று விண்கலத்தின் பேட்டரி சார்ஜ் ஆகிவிட்டது. செல்போன் மாதிரி டக்கெனத் தொடர்பு எல்லைக்குள்ளும் வந்துவிட்டது. சுமார் 60 மணி நேரம் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்தி, விண்கலம் கிடக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிட்டார்கள் விஞ்ஞானிகள். ஏற்கெனவே, விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் தங்களது ‘ரொசட்டா’ விண்கலத்தைப் பக்கத்தில் அனுப்பி, பீலே கிடக்கிற இடத்தை இன்னும் நெருக்கமாகப் புகைப்படம் எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்ப சொல்லுங்க… இது சாதனைதானே?
‘கண்டுபிடிச்ச விண்கலத்தைப் பூமிக்கு எடுத்துக்கிட்டு வருவாங்களா’ன்னு கேட்கிறீங்களா? விண்வெளியில விண்கலங்கள் செயலிழந்துபோனால், ‘யூஸ் அன்ட் த்ரோ’தான். விண்வெளியில நம்மாளுங்க கொட்டியிருக்கிற பல ஆயிரம் டன் குப்பைகள்ல பீலேயும் ஒன்று.. அவ்வளவுதான்!