Published : 30 Jan 2014 09:50 AM
Last Updated : 30 Jan 2014 09:50 AM

ஜனவரி 30, 1948

அந்த மெலிந்த தேகமுடைய மனிதர் மிகவும் களைப்படைந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டியது என்ன என்பது தொடர்பாக அமைப்புச் சட்டத்தில் இடம்பெற வேண்டிய கருத்துகளைச் சிலசமயம் அவர் வாய்மொழி மூலமாக உதவியாளரிடம் கூறினார். சில நேரங்கள் கவனமாகவும் தெளிவாகவும் தமது கைப்பட எழுதினார். நகல் திட்டத்தில் தேவையான திருத்தங்களை மிகவும் கவனமாகத் தாமே செய்து முடித்தார்.

நாடு விடுதலை பெற்ற பிறகு, கட்சியின் திட்டம்குறித்து அவர் முன்வைத்த முக்கியக் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தன: “ஒரு பிரச்சார வாகனம் மற்றும் நாடாளுமன்ற வாகனம் என்ற வகையில் காங்கிரஸ் கட்சியின் பயன்பாடு முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியாவின் ஏழு லட்சம் கிராமங்களும் சமூக, பொருளாதார மற்றும் நெறிமுறைகள் அடிப்படையிலான விடுதலையைப் பெற வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகளுடன் ஆரோக்கியமற்ற போட்டி எதிலும் காங்கிரஸ் கட்சி ஈடுபடக் கூடாது.

எனவே, தற்போதுள்ள காங்கிரஸ் அமைப்பைக் கலைப்பது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானிக்கிறது. அது லோக் சேவக் சங்கம் என்ற அமைப்பாக மலர வேண்டும் என்றும் முடிவு செய்கிறது. அதன் அமைப்புச் சட்டத்தில் சூழ்நிலைகளின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான விதிகள் இணைக்கப்பட்டிருக்கும்.”

ஒவ்வொரு கிராமத்திலும் வயது வந்த ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட கிராமப் பஞ்சாயத்துகள் அமைக்கப்பட வேண்டும் என்று காந்திஜி ஆலோசனை தெரிவித்தார். அருகருகே உள்ள இரண்டு கிராமப் பஞ்சாயத்துகள் இணைந்து கட்சியின் செயல்படும் அமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் உறுப்பினர்கள் மத்தியிலிருந்து ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். நூறு பஞ்சாயத்துகளின் உறுப்பினர்கள் 50 முதல் ரகத் தலைவர்களைத் தங்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.

இப்படிப்பட்ட பஞ்சாயத்துகளின் குழு இந்தியா முழுவதும் அமைக்கப்படும். தேச வளர்ச்சிப் பணியில் ஈடுபடும் ஒவ்வோர் ஊழியரும் காதித் துணியை மட்டுமே அணிந்துகொள்வார். அகில இந்திய நூல் நூற்போர் சங்கத்தின் சான்றிதழ் பெற்ற நூலைப் பயன்படுத்தித் தாமே காதித் துணியைத் தயாரித்துக்கொள்வார். அவர் மது அருந்தக் கூடாது. தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது. இனம், பிரிவு மற்றும் பாலின வேற்றுமையின்றி அனைவருக்கும் சமவாய்ப்பும் சம அந்தஸ்தும் அளிக்க வேண்டும்.

பல்வேறு சமூகப் பிரிவினரின் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவராக அனைத்து மதங்களுக்கும் சமமான மதிப்பு மற்றும் மரியாதை அளிப்பவராக அவர் இருக்க வேண்டும். லோக் சேவக் சங்கைச் சேர்ந்த ஆக்கப் பணியாளர்கள் கிராமவாசிகளுடன் தொடர்ச்சியான தொடர்புவைத்துக்கொள்ள வேண்டும். மேலும் மேலும் அதிக ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

கால அட்டவணையில் ஜனவரி 30-ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குத் துவங்குகிறது. காந்திஜியின் வேலை அட்டவணை மூன்று மணி நேரம் கழித்துத் துவங்கியது. காலைத் தயாரிப்பு வேலைகளை முடித்துக்கொண்டார். பிறகு, மன அமைதியை ஏற்படுத்திக்கொண்டு பிரார்த்தனை செய்தார்.

பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கினார். மிகுந்த கவலையுடன் அவரைச் சந்தித்த ஒரு முஸ்லிம் குழுவினருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார். டெல்லியிலிருந்து தாம் குறுகிய காலத்துக்கு வெளியூர் செல்லும் சமயத்தில் அவர்கள் பாதுகாப்பாகவே இருப்பார்கள் என்று உறுதி அளித்தார். எனினும் சேவாகிராமிலிருந்து தான் விரைவில் திரும்பிவிடப்போவதாகவும் தெரிவித்தார். அவரைச் சந்தித்த சிந்தி அகதிகள் குழுவினரிடம், அவர்கள் எதிர்கொண்டுவரும் அவலநிலை குறித்து தாம் மிகவும் வருத்தம் அடைந்ததாகக் குறிப்பிட்டார்.

ஒரு அகதி காந்திஜியை இமயமலைக்குச் சென்று ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டிருந்தார். அவரது கோபம் நிறைந்த கருத்துகளை நினைவுகூர்ந்த காந்திஜி தமக்குள் சிரித்துக்கொண்டார். பின்னர், அவர் கூறினார்: “மக்களிடமிருந்து வெகுதொலைவுக்கு விலகிச்சென்று இமயமலைச் சாரலின் பாதுகாப்பில் ஓய்வு எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை.” ஒரு நண்பரிடம் அவர் பின்வருமாறு தெரிவித்தார்: “நான் உயிருடன் இருக்கும்வரை நிலைமையைச் சீர்திருத்த என்னால் இயன்றவரை முயற்சிப்பேன்.”

மாலை நான்கு மணிக்கு சூரியன் தனது ஒளியை இழந்தது. மாலை நிகழவுள்ள சோகத்தின் முன்னோடியாக வானத்தில் கருமை படரத் தொடங்கியது. தனது சகோதரியார் மணிபென் படேலுடன் சர்தார் படேல் வந்திருந்தார். அவரது கருத்துகளைக் கேட்ட காந்திஜி அவருக்குத் தமது சிறந்த ஆலோசனைகளை வழங்கினார்.

நேருவுக்கும் சர்தார் படேலுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காந்திஜி கருதினார். இருவரில் ஒருவர் அமைச்சரவையிலிருந்து விலகிக்கொண்டால் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என்று காந்திஜி முதலில் கருதிவந்தார். பின்னர், அவர் தமது கருத்தை மாற்றிக்கொண்டார்.

“உயர்மட்டத் தலைமையில் நீங்கள் இருவரும் நீடிக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது.”

மாலையில் பிரார்த்தனை முடிந்து உரை யாற்றும்போது இந்த முக்கிய பிரச்சினைகுறித்துப் பேசப்போவதாக அவர் சர்தாரிடம் உறுதிகூறினார்.

பிரார்த்தனைக் கூட்டம் சரியாக மாலை 5.00 மணிக்குத் துவங்க இருந்தது. சர்தார் படேலுடன் காந்திஜி பேசிக்கொண்டிருந்ததால் அவர் பிரார்த்தனைக் கூட்டத்துக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. கூட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். ரத்தம் சிந்தும் ஒரு கொடிய செயலை அரங்கேற்றுவதன் மூலம் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறபோகும் ஒரு மனிதனும் அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவனாக இருந்தான். “நான் இப்போது உங்களிடமிருந்து பிய்த்துக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது” என்று காந்திஜி சர்தாரிடம் தெரிவித்தார்.

அபா மற்றும் மனுவின் தோள்களில் சாய்ந்த வண்ணம் காந்திஜி மேடையை நோக்கி நகர்ந்தார்.

அப்போது கரங்களைக் குவித்து வணக்கம் தெரிவித்துக் கொண்டே புஷ்சர்ட் அணிந்த தடித்த மனிதன் ஒருவன் அவரை நெருங்கினான்.

மெலிந்த தேகமுடைய அந்த மனிதர் கடைசியாக அடிகளை வைத்த நேரத்தில் இரண்டு குண்டுகள் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று அவரது மார்பின் வலது பக்கத்தைத் துளைத்துச் சென்றன. முதல் குண்டு தாக்கியவுடனே கால் தடுமாறியது. இரண்டாவது குண்டும் மூன்றாவது குண்டும் தாக்கியபோது அவர் மெல்லத் தரையில் சரிந்தார். அவரது வாயிலிருந்து ‘ஹே ராம்’ என்ற இரண்டு சொற்கள் வெளியே வந்தன. அவை இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலோ அல்லது கடவுளிடம் தனது பணிவான வேண்டுதலைத் தெரிவிப்பதுபோலவோ அமைந்திருந்தன.

ஒரு சகாப்தம் முடிந்தது. ஒரு மகத்தான வாழ்க்கையின் கடைசி நாளாக அது அமைந்தது.- © தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: கி.இலக்குவன்.

(ஆங்கிலத்தில் ‘தி இந்து’வில் வெளியான ‘காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ தமிழில் பாரதி புத்தகாலய வெளியீடாக வந்திருக்கிறது. அதிலிருந்து சிறு பகுதியே மேலே எடுத்தாளப்பட்டுள்ளது.)


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x