Last Updated : 10 Sep, 2016 11:30 AM

 

Published : 10 Sep 2016 11:30 AM
Last Updated : 10 Sep 2016 11:30 AM

ஏ.கே.செட்டியார்: மறக்கப்பட்ட ஒரு சாதனையாளர்

நியூயார்க்கிலிருந்து 1937 அக்டோபர் 2-ல் டப்ளின் நகருக்கு அட்லாண்டிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த சமாரியா கப்பலில் 26 வயதுகூட நிரம்பாத ஒரு தமிழ் இளைஞர் கனவொன்று கண்டார் - காந்தியின் வாழ்க்கையை ஓர் ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று. இரண்டரை ஆண்டுகள். இருமுறை உலகைச் சுற்றினார். கப்பலிலும் விமானத்திலும் ரயிலிலும் ஒரு லட்சம் மைல் பயணித்தார். 30 ஆண்டுகளில், 100 கேமராகாரர்கள் படம் பிடித்த 50,000 அடி நீளப் படச் சுருள்களைக் கண்டெடுத்தார். 1940-ல் ‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்’ என்ற இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படம் ஆகஸ்ட் 1940-ல் வெளிவந்தது.

காந்தியைப் பற்றிய முதல் முழு நீளப் படம் என்ற பெருமை இதற்கு உண்டு. தமிழ் வடிவம் வெளிவந்த சில மாதங்களில், அப்படம் தெலுங்கு விவரணையுடன் வெளி வந்தது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் சூடுபிடித்த வேளையில், சில ஆண்டுகள் அதன் படச்சுருள்கள் தலைமறைவாயின. சுதந்திரக் கொண்டாட்டம் கோலாகலமாக அரங்கேறிக்கொண்டிருந்த வேளையில், 14 ஆகஸ்ட் 1947 இரவு புது டெல்லியில் இப்படம் திரையிடப்பட்டது. காந்தியின் இறுதிக்கட்ட வாழ்க்கை வரையுள்ள நிகழ்ச்சிகளையும் சேர்த்து முழுமைப்படுத்தி அதனை 1950-ல் இந்தியில் தயாரித்தார் அவ்விளைஞர். சில ஆண்டுகள் கழித்து, ஜோசப் மக்கார்த்தியின் கம்யூனிச எதிர்ப்பு வேட்டை ஹாலிவுட்டைப் பதம் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், அப்படத்தை ஆங்கிலத்தில் தயாரித்து, அமெரிக்காவிலும் வெளி யிட்டார். இப்படி சாதனைக்கு மேல் சாதனை புரிந்த இளைஞர் ஏ.கே. செட்டியார்.

தன்னை முன்னிலைப்படுத்தாதவர்

குடத்திலிட்ட விளக்குகளுக்குத் தமிழுலகில் பஞ்ச மில்லை. அவர்களுள் ஒருவர் அ.ராம.அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்ற ஏ.கே.செட்டியார் (4.11.1911 -10.9.1983). (‘ஏ.கே. செட்டியார்’ என்ற பெயரிலேயே தம் நூல்களையெல்லாம் வெளியிட்டபோதும், பல இடங்களில் ‘அ.க.செட்டியார்’ எனவும் கையெழுத்திடும் வழக்கம் அவருக்கு இருந்துள்ளது.) தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை - தம்மை முதன்மைப்படுத்திக்கொள்ளாமல் - ஆவணப்படுத்தியவர்களில் அவர் மிக முக்கியமானவர். ஏ.கே.செட்டியாரின் அடக்கத்தின் காரணமாக, அவர் பெருமை பரவலாக அறியப்படாமல் போய்விட்டது. தமிழக அரசு பாரதி நூற்றாண்டு விழா எடுத்தபோது, பாரதியியலுக்கு அவர் ஆற்றிய பங்கைப் பாராட்டி ஒரு கேடயம் வழங்க முன்வந்தது. அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்த ஏ.கே.செட்டியார், விழா நாளன்று பனகல் பூங்காவில் அமர்ந்திருந்ததாகச் சொல்வார்கள்.

விளம்பரத்தை விழையாததால் ஏ.கே.செட்டியாரின் புகைப்படம் கிடைப்பதுகூட அரிதாக இருக்கிறது. பின்னாளில், அவர் தம் புகைப்படம் வெளிவருவதை முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார். ஆனந்த விகடன் பொன் விழா ஆண்டில், ஒவ்வோர் ஆண்டு இதழையும் தொகுத்து அறிமுகம் செய்யும் பொறுப்பு, பெயர்பெற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு, அத்தொகுப்புகள் அவ்வவ் வெழுத்தாளரின் படத்தோடு வெளியிடப்பட்டன. 1959-ம் ஆண்டுத் தொகுப்பை ஏ.கே.செட்டியார் தொகுத்தளித்தபோது ‘திரு.ஏ.கே.செட்டியார் தமது புகைப்படத்தைப் பிரசுரிக்கக் கொடுப்பதில்லை என்ற கொள்கையுடையவராதலால் அவரது புகைப்படத்தைப் பிரசுரிக்க இயலவில்லை’ என்ற விகடன் ஆசிரியர் குறிப்பு மட்டுமே இடம்பெற்றது.

ஏ.கே.செட்டியார் பிறந்தது செட்டிநாட்டுக் கோட்டையூரில். லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் நூற்பட்டியிலிருந்து, அவருடைய முதலெழுத்தின் விரிவு ‘அண்ணாமலை’ என்று அறிய முடிகிறது. ஆகவே, இது அவருடைய தந்தையின் பெயராகும். தாயார் பெயரைக் கண்டறிய இயலவில்லை. ஏ.கே.செட்டியாருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால், அவர் மனைவியின் பெயர்தானும் தெரியவில்லை. திருமணம் நிகழ்ந்த காலமும் தெரியவில்லை. அறியவரும் செவிவழிச் செய்திகள் வள்ளலாரின் இல்லற வாழ்க்கையை நினைவூட்டுகின்றன.

கோட்டையூர் செட்டியார்

1928-ம் ஆண்டு ஆனந்த விகடனில் ‘சாரதாம்பாள் - சிறு தமாஷ்’ என்ற (ஒரே) கதை கோட்டையூர் ஏ.கே.செட்டியார் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. அப்போது அவருக்கு வயது 17.

1930-ம் ஆண்டின் கடைப்பகுதியில் தனவணிகன் என்ற மாத இதழுக்கு நிர்வாக ஆசிரியராக அவர் அமர்ந்தார். சில காலம் அது வெளிவந்தது. அதன் பின்பு, ஏ.கே.செட்டியார் பர்மா சென்றிருக்கிறார். இது 1933-ன் இறுதியாக இருக்கலாம். பர்மா நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கம் நடத்திய ‘தனவணிகன்’ இதழுக்கு ஆசிரியராக அவர் சென்றதாகச் சோமலெ குறிப்பிடுகிறார். எனக்குப் பார்க்கக் கிடைத்த 1934, 1936 பர்மா ‘தனவணிகன்’ பொங்கல் மலர்களில், ஆசிரியர் அ.ராம.அ.கருப்பன் செட்டியார் (A.Rm.A.Karuppan Chettiar) எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. 1937 பொங்கல் மலர் ஏ.கே.பூங்காவனம் என்பவரை ஆசிரியராகக் குறிப்பிடுகிறது. எனவே, 1933 கடைசியிலிருந்து 1936 இடைப் பகுதி வரை பர்மா ‘தனவணிகன்’ ஆசிரியராக ஏ.கே.செட்டியார் விளங்கினார் எனக் கொள்ளலாம்.

பாரதியிடம் ஈடுபாடு

அவர் 40 ஆண்டுக் காலம் நடத்திய ‘குமரி மலர்’ மாத இதழைத் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை ஆவணப் படுத்துவதற்கு முக்கியக் கருவியாகக் கைக்கொண்டார். மாதம் ஒரு புத்தகமாக 1943-ல் தொடங்கிய குமரி மலர், ஏ.கே.செட்டியார் மறையும்வரை ஒரு சிறு இடைவெளி நீங்கலாக, மாதந் தவறாமல் வெளிவந்தது. ச.வையாபுரிப் பிள்ளை, க.அ.நீலகண்ட சாஸ்திரி, தி.நா.சுப்பிரமணியன், கி.ஸ்வாமிநாதன், அ.முத்தையா உள்ளிட்ட அறிஞர்களும், டி.எஸ்.சொக்கலிங்கம், ராய.சொக்கலிங்கன், ‘சக்தி’ வை.கோவிந்தன், ஏ.என்.சிவராமன், ஏ.ஜி.வேங்கடாச்சாரி போன்ற இதழாளர்களும், பாரதிதாசன், டி.கே.சி., வ.ரா., தி.ஜ.ர., கல்கி, க.நா.சுப்ரமண்யம், த.நா.குமாரசாமி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரிசாமி போன்ற இலக்கியவாணர்களும் குமரி மலரில் எழுதியிருக்கின்றனர்.

பாரதியிடம் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டிருந்த ஏ.கே.செட்டியார், அவருடைய தொகுக்கப்படாத படைப்புகளைக் கண்டெடுத்து வெளியிடுவதில் பெரும்பங்காற்றினார். ரா.அ.பத்மநாபன் ‘பாரதி புதையல்’ பலவற்றை முதலில் குமரி மலரிலேயே வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பாரதியின் இந்தியா, சக்கரவர்த்தினி, கர்மயோகி மற்றும் சில சுதேசமித்திரன் கட்டுரைகளை முதலில் வெளியிட்டதில் குமரி மலருக்கு முக்கியப் பங்குண்டு.

தமிழ் இதழியல் வரலாற்றைத் துலக்கமுறக் காட்டும் பெரும் பணியையும் ஏ.கே.செட்டியார் செய்தார். சுதேசமித்திரன் நிறுவனர் ஜி.சுப்பிரமணிய ஐயர் பற்றிய சிறப்பிதழ், பழந் தமிழ் இதழ்களின் முதல் இதழ்களின் ஆசிரியவுரைகளை மறுபதிப்பிட்ட ‘முதல் தலையங்கம்’ என்ற தொடர், எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடுவின் கட்டுரைகள், ரா.அ. பத்மநாபன் எழுதிய இதழியல் வரலாற்றுத் தொடர் போன்றவை தனியே குறிப்பிடப்பட வேண்டியவை.

காந்தியம் சார்ந்த சமூகச் சீர்திருத்தம் தொடர்பான செய்திகளுக்கும் ஏ.கே.செட்டியார் முதன்மை அளித்தார். கதர், கள் ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு முதலானவை பற்றிய அரிய ஆவணங்களைக் குமரி மலரில் பரக்கக் காணலாம். தமிழ்ச் சமூகம், அரசியல், பண்பாடு ஆகியவை பற்றிய முக்கியமான கட்டுரை களையும் குறிப்புகளையும் மறுபதிப்பிடுவதே குமரி மலரின் தலையாய பணியாக மாறியது. ஏ.கே.செட்டியார் மறுபதிப்பிட்ட ஆவணங்களை இந்திய தேசிய இயக்கத்தில் தமிழரின் பங்கு, தமிழ்ச் சமூக - பண்பாட்டு மாற்றங்கள் என்ற இரு பெரும் பிரிவுகளில் அடக்கலாம்.

உலகம் சுற்றிய தமிழன்

பயண நூல்கள் பல எழுதியவர் என்று இன்றளவும் பரவலாக அறியப்படும் ஏ.கே.செட்டியாருக்கு, அவர் எழுதிய உலகம் சுற்றும் தமிழன் என்ற நூற்பெயரே அடைமொழியாகவும் சிறப்புப் பெயராகவும் அமைந்துவிட்டது.

1936-37-ம் ஆண்டுகளில், படமெடுக்கும் தொழில் நுட்பத்தில் ஜப்பானிலும் அமெரிக்காவிலும் முறையான பயிற்சி பெற்றார் ஏ.கே.செட்டியார். டோக்கியோவின் பேரரசப் புகைப்படக் கல்லூரியில் (Imperial College of Photography) படித்தபோது, டோக்கியோ அசாஹியின் உருத்துலக்கும் துறையில் பயின்றார். நியூயார்க் புகைப்பட நிறுவனத்தில் (New York Institute of Photography) படித்தபோது, பதே செய்தி நிறுவனத்தில் பயின்றார். இதற்குப் பிறகு, 1937-ம் ஆண்டின் பிற்பகுதியில் பெர்லினுக்குச் சென்று, நாஜி பரப்புரை வாரியத்தின் காரல் வாஸ் என்பவரிடமும் பயிற்சி பெற்றிருக்கிறார். இருப்பினும் அவர் நாஜிக்களையும், நாஜிக்களின் யூத வெறுப்பையும் கடுமையாகவும் கேலியாகவும் பலமுறை கண்டித்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் - டிசம்பர் 1937-ல் - அவர் ஆஸ்திரியாவிலுள்ள பாட்காஸ்டீனுக்குச் சென்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்து, அவரைப் படம் பிடித்திருக்கிறார்.

காந்தி படம் ஒரு கப்பல் பயணத்தில் கருக்கொண்டது. உடன் பயணித்த ஒரு நண்பருடன் விவாதித்துக் குறித்துக்கொண்ட தாளே திட்டத்துக்கான வரைபடமாக அமைந்தது.ஏ.கே.செட்டியார் காந்தி ஆவணப்படத்தைச் ‘செய்திப் படச் சம்பிரதாய’த்தில் (news reel) தயாரிக்கப்பட்ட படமாகக் கருதினார். ‘ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க் கையை, அவரது வாழ்க்கையின் மூலமாகச் சித்தரிக்கும் ஒரு முழு நீளமுள்ள சரித்திரப் படம் முதன்முதலாகத் தயாரிக்கப்படுவது இதுதான்’ என்றும் அவர் நம்பினார்.

நேர்மையும் சிக்கனமும்

1938-ல் ‘டாக்குமெண்டரி ஃபிலிம்ஸ் லிமிடெட்’ என்ற குழுமத்தை ஏ.கே.செட்டியார் நிறுவினார். முதலில் இந்தியாவில் காந்தி பற்றிய படப் பதிவுகளைத் திரட்டிய ஏ.கே.செட்டியார், பிறகு வெளிநாடுகளில் தம் தேடலைத் தொடர்ந்தார். இரண்டு ஆண்டுகளில் மூன்று கண்டங்களில் ஒரு லட்சம் மைல்களைக் கப்பலிலும் விமானத்திலும் ரயிலிலும் கடந்தார். இரண்டாம் உலகப் போர் வெடிக்கவிருந்த நெருக்கடியான தருணம் இது என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கூடவே, அவர் நிறவெறியையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விடுதிகளில் அறை கொடுக்க மறுத்த முதலாளிகள்; பயணச்சீட்டு விற்க மறுத்த கப்பல், ரயில், விமான முகவர்கள்; அவமானப்படுத்திய பணியாளர்கள் - இவர் களைப் புறங்கண்டே ஏ.கே.செட்டியார் தம் பணியை மேற் கொள்ள வேண்டியிருந்தது.

படங்களைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பெரிய விடுதிகளிலேயே ஏ.கே.செட்டியார் முதலில் தங்குவார். காரியம் முடிந்ததும் மலிவான விடுதிக்கு இடம்மாறிவிடுவார். குறைந்த நிதி ஆதாரத்தைக் கொண்டு காந்தி படத்தை உருவாக்கிய ஏ.கே.செட்டியார், செலவினங்களில் கறாரான சிக்கனத்தையும் நேர்மையையும் கடைப்பிடித்திருக்கிறார். செலவழித்த ஒவ்வொரு காசுக்கும் அன்றன்றே கணக்கு எழுதியிருக்கிறார். ஹாலிவுட்டில் படத்தைத் தயாரித்து, உலகப் பிரமுகர்களுக்கு அரங்கேற்றக் காட்சியைத் திரையிட்டுவிட்டு, நியூயார்க் புறப்படு முன்னர் வாஷிங்டன் விமான நிலையத்தில் படுத்துறங்கியிருக்கிறார்!

அனைத்துலகுக்கும் காந்தி

23 ஆகஸ்ட் 1940-ல் வெளியிடப்பட்ட காந்தி ஆவணப் படம் பெரும் வெற்றிபெற்றது. இந்தியா விடுதலை பெற்ற இரவு புது டெல்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள ரீகல் அரங்கில் படத்தைத் திரையிட ஏ.கே.செட்டியார் ஏற்பாடு செய்தார். அரசியல் நிர்ணய அவையின் தலைவர் இராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பார்வையாளர் வரிசையில் அமர்ந்தனர். இந்தப் படத்தை அனைத்துலகுக்கும் எடுத்துச்செல்ல விழைந்திருக்கிறார் ஏ.கே.செட்டியார்.

10 பிப்ரவரி 1953-ல் ஆங்கிலத்தில் திரையிடப்பட்ட (Mahatma Gandhi: Twentieth Century Prophet) படத்தின் முதல் காட்சி வாஷிங்டனில் அரங்கேறியது. அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் தொடங்கி, ஐ.நா.வின் தலைவரும் உலக நாடுகளின் தூதுவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

புகைப்படம் எடுப்பதிலும் திரைக் கலையிலும் தேர்ச்சிபெற்று, காந்தி ஆவணப்படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்த ஏ.கே.செட்டியார், தம் வாழ்நாளில் வேறொரு படத்தையும் எடுக்கவில்லை!

ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்து, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ஏ.கே.செட்டியாரின் ‘அண்ணலின் அடிச்சுவட்டில்’ நூல் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.

ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்று ஆய்வாளர், தொடர்புக்கு: chalapathy@mids.ac.in

செப்டம்பர் 10 - ஏ.கே.செட்டியார் நினைவு நாள்

காந்தியின் முதல் ஆவணப்படத்தை எடுத்த தமிழர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x