பெற்றால்தான் பிள்ளையா?

பெற்றால்தான் பிள்ளையா?
Updated on
2 min read

பெற்றால்தான் பிள்ளையா? என்றொரு திரைப்படப் பாடல் உண்டு. தத்தெடுத்தாலும் பிள்ளைதான் என்று ‘இந்து தத்தெடுப்புச் சட்டம்’ கூறுகிறது. தலைமுறைக்குப் பின், சொத்துக்களை அனுபவிக்கவும் வம்சாவளியைத் தொடரவும் இந்து மதம் தத்தெடுப்பை அங்கீகரித்துள்ளது. 1956-ம் வருட சட்டம் வருவதற்குமுன் காலனி ஆதிக்கத்தில் 1890-ல் கொண்டுவரப்பட்ட ‘காப்பாளர் மற்றும் இளங்கணர்’ சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்பட்டது. விதவைகளின் வேண்டுகோளின்படி மைனர் வாரிசுகளின் ஜமீன் சொத்துக்களுக்கு காப்பாளர்களாக அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். வாரிசு இல்லாத விதவை, தத்தெடுத்துக் கொள்ள இந்து மதம் அனுமதித்தாலும் அந்நியர் ஆட்சி வாரிசுரிமையை ஏற்க மறுத்து அரசியல் சதுரங்கம் விளையாடியது.

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளைப் பெற்றோர்களின் ஒப்புதலுடன் தத்தெடுத்துக் கொள்வது தவிர அனாதைகளான குழந்தைகளையும் நீதிமன்ற நியமன காப்பாளர் மூலம் தத்தெடுத்துக் கொள்ளவும் சட்டம் அனுமதித்தது.

கிறித்துவ மதத்தை சேர்ந்தோரும் தத்தெடுத்துக் கொள்ளலாமென்று 2009ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2000-ம் வருடத்திய இளம் குற்றவாளிகளுக்கான நீதி (குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் 41-ம் பிரிவின்கீழ் சமய பாகுபாடில்லாமல் எச்சமயத்தவரும் ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

பெத்துக்கொள்ளவும் முடியவில்லை, தத்துப்பிள்ளைகளும் வேண்டாம் என்பவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான் பதிலித்தாய் (surrogate mother) மூலம் வாரிசை உருவாக்குவது.

குழந்தைப் பேறு அற்ற தம்பதியினர், சூலுற்ற கருவை வாடகைத்தாயின் கருப்பையில் வைத்து பராமரித்து பிரசவிக்கும் குழந்தையை தங்களுடையதாக்கிக் கொள்வதே இப்புதிய முயற்சி. இந்த முயற்சிக்கு சமூக வரவேற்பு பெருமளவில் இல்லாதது மட்டுமன்றி அரசுக்கும் இதுபற்றி சரியான புரிதல் இல்லாதது வருத்தமளிக்கிறது.

இதுபற்றிய சட்டவிதிகளும், நீதிமன்றத் தீர்ப்புகளும் மேலைநாடுகளில் பெருமளவில் இருப்பினும் பதிலித்தாய் மூலம் பெறப்படும் குழந்தைகளின் உரிமைகளைப் பற்றி தெளிவான சட்டமியற்ற இதுவரை மத்திய அரசு முன்வரவில்லை. இரவல் கருப்பையில் உருவான குழந்தையின் உண்மைத்தாய் யாரென்பதும் அக்குழந்தைக்கு தனது பெற்றோரிடமிருந்து எதிர்காலத்தில் கிடைக்கும் வாரிசுரிமை பற்றிய சட்டத் தெளிவு இன்மையால் சமூகத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

சமீபத்தில் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் வேலைபார்த்த பெண் ஒருவர், 20 வயதடைந்த தனது ஒரே மகனை சாலை விபத்தில் பறிகொடுத்து தனக்கு மற்றொரு வாரிசு உருவாகாத இயற்கைப் புறக்கணிப்பால், மருத்துவர் ஆலோசனையின் பேரில் பதிலித்தாய் உதவியால் பெண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்தார். தன் பணி காலத்தின் பின்னர் பெற்றுக் கொள்ளக்கூடிய அக் குழந்தையை வாரிசாக பதிவு செய்யவும், மருத்துவ வசதிகள் அட்டை வழங்கவும் நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தார். மறுப்பு தெரிவித்த நிர்வாகம் இப் பிரச்சினையில் சட்ட சிக்கல்களும், தார்மீக மற்றும் நெறிமுறை குறித்த பிரச்சினைகளும் உள்ளதாலும், மத்திய அரசு புதிய சட்டமொன்றைக் கொண்டுவரும்வரை நிவாரணம் வழங்க முடியாதென்றும் கூறியது.

அதையெதிர்த்து அப்பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில் பதிலித்தாய் மூலம் பெற்ற குழந்தையின் உண்மைத்தாய் அவர்தான் என்றும் தத்தெடுத்துக் கொள்ளும் குழந்தைகளின் பெற்றோருக்கு கொடுக்கப்படும் அனைத்து சலுகைகளும் பதிலித்தாய் மூலம் பெற்ற குழந்தைகளுக்கும் கொடுக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றி விரிவான சட்டமியற்றவும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.

இதயம், இரைப்பை, சிறுநீரகம், கண் என்று மாற்று உறுப்பு சிகிச்சையை வரவேற்கும் சமுதாயம் இரவல் கருப்பையில் உருவான குழந்தையை ஏற்றுக்கொள்ள மனமாற்றம் அடையுமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in