Last Updated : 25 Nov, 2013 12:00 AM

 

Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM

இந்தியப் பெண்களின் கதறல்

சகோதரிகளே, இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் பலாத்காரமும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. அயல் நாடுகளில் இருந்து இந்தியாவை நோக்கிப் பயணிக்கும் பெண்கள் கடுமையான அச்சத்துக்கு ஆளாகியிருப்பதுடன், இந்தியா பற்றிய சுற்றுலாவுக்கான குறிப்பில், ‘இந்தியா: பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடு’ என்பதும் பதிவாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு, இது மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்படுவதுடன், 'பெண்கள் மீதான மரியாதை' விஷயத்தில், இந்தியாவுக்கு சர்வதேச அளவில் இருக்கும் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.

பெண்கள் மீதான சமீபத்திய வன்முறைகள் நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்கின்றன. ஒன்று, பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை. இரண்டு, ஆண்களுக்குப் பெண்கள்மீது எந்த அடிப்படையிலும் மரியாதை இல்லை. மூன்று, ஏழை, பணக்காரர், இளமை, முதுமை என எந்த நிலையைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் மீதான ஆண்களின் அதிகாரமும் வன்முறையும் எந்த நிலைக்கும் சளைத்ததல்ல. நான்கு, இந்த வன்முறைகளுக்குத் தண்டனை வழங்க வேண்டுமென்று போராட்டங்கள் அதிகமானாலும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகமாகின்றன.

இவைதான் காரணங்களா?

ஆண்கள் என்றால் இதையெல்லாம் செய்யலாம் என்ற சலுகையும், பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும், ஒரு தாயின் அடிமனதிலிருந்து உயர் பதவியில் இருக்கும் ஆண் அரசியல் தலைவர் வரை மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதையே நாம் இதுவரை, 'இந்தியப் பண்பாடு' என்று கூறிவந்திருக்கிறோம். பெண்கள் உடைதான், ஆண்களிடம் இச்சையை எழுப்பி வன்முறையைச் செயல்படுத்தத் தூண்டுகிறது என்றார்கள். உடல் முழுக்க மூடிச் செல்லும் பெண்ணையும், சுடிதார் சீருடை அணிந்து செல்லும் பள்ளி மாணவியையும் பலாத்காரம் செய்து கொன்றார்கள்.

பெண்கள், மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் தனியாகச் செல்வதுதான் காரணம் என்றார்கள். பட்டப்பகலிலேயே இது நடக்கிறது. இவ்வாறு, பெண்களுக்குப் பாதகமாகவும் ஆண்களுக்குச் சாதகமாகவும் வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுவது, இயல்பாகவே இந்தக் குற்றச் செயலைப் பாதுகாப்பதற்குத்தான் என்பது தெளிவாகிறது.

போராட்டங்களில் பாரபட்சம்

டெல்லியில் டிசம்பர் 16-ம் தேதி நடைபெற்ற பாலியல் வன்முறை இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. பழங்குடியினப் பெண்கள், வெவ்வேறு அரசு, அரசு சாரா நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், வீடுகளிலேயே குடும்பங்களை நிர்வகிக்கும் பெண்கள், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பெண்கள் போன்றோர் மீது தினம்தோறும் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் யாரையும் உலுக்குவதே இல்லை. டெல்லி சம்பவம், இவ்வளவு தூரம் கவனம் பெற்றதற்குக் காரணம், பொதுமக்கள் தொடர்ந்து போராடினார்கள். அந்த நிகழ்வை நோக்கி ஊடகங்கள் தம் கவனத்தைத் திருப்பும்படி அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டுப் போராடியதற்கு இது ஒரு பெரிய உதாரணம். தொடர்புடைய குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிப்பதே இவர்கள் எல்லோரின் நோக்கமாக இருந்ததே தவிர, இதுபோன்று தினமும் தொடர்ந்துகொண்டிருக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கான போராட்டங்களாக இவை இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தண்டனை எதற்காக?

தண்டனை, அந்தக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக மட்டுமே. பிற இடங்களில், பிற பெண்கள்மீது காட்டப்படும் வன்முறைகள், குற்றங்கள் ஆகியவற்றைக் குறைப்பதற்காகவோ தடுப்பதற்காகவோ இல்லை அந்தத் தண்டனை. டெல்லி சம்பவத்தில் குற்றவாளிகளுக்குக் கொடுத்த தண்டனை மற்ற எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், ஏன் டிசம்பர் 16-க்குப் பின் இந்தக் குற்றங்கள் குறையாமல் அதிகரிக்கின்றன? தண்டனை கிடைக்கும் என்று அறியாமலா குற்றங்களைச் செய்கிறார்கள்?

ஏற்றத்தாழ்வான நீதி

இந்த நாட்டில் நீதி என்பது ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி வாய்ப்புகள் இருப்பவர்களுக்கு ஒன்றாகவும் இருப்பதை முதலில் நாம் உணர வேண்டும். டெல்லி சம்பவத்தில் நாம் நீதியைப் பெற முடிந்ததற்கும் அதே மாதிரியான மற்ற பாலியல் வன்முறைகளிலும், 'வாச்சாத்தி' போன்ற கொடூரமான சம்பவங்களிலும் பலர் தண்டனையைப் பெறாமல் தப்பித்ததற்கும், தாமதமான நீதிக்கும் காரணம், அரசு மக்களைப் பார்க்கும் பார்வையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுதான்.

அதுமட்டுமன்றி, டெல்லி சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் எல்லாரும் அடித்தட்டிலும் வறுமையிலும் உழல்பவர்கள். அவர்கள் ஏழைகள் என்று சொல்லி, அவர்கள் செய்ததை இதனால் நியாயப்படுத்த முடியாது. இதுபோலவே, பாலியல் வன்முறைகளைச் செய்துவரும் அதிகாரம் உடைய அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களுக்கு எல்லாம் நாம் எப்போது இதுபோல தண்டனை பெற்றுத்தரப்போகிறோம்?

'சூரியநெல்லி' வழக்கில் ஏன் நம்மால் இதுபோல நீதிக்கான போராட்டத்தை நடத்த முடியாமல் இருக்கிறது? அந்த அரசியல்வாதிகள் பற்றிய செய்திகளைக் கேட்டும், இம்மாதிரியான பாலியல் வன்முறைகளை ஊக்கப்படுத்தும் உற்சாகப்படுத்தும் காட்சிகளைப் பார்த்தும்தானே இதுபோன்ற கடைக்கோடி ஆண்கள் எல்லோரும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். ஆக, நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒட்டுமொத்தமான நீதியைப் பெறுவதற்காகப் போராட வேண்டியதுதான்.

அதிகார பலமற்ற குரல்கள்

இம்மாதிரியான சம்பவங்கள், நாளை நம் வீட்டிலோ, நாம் பணிபுரியும் இடங்களிலோ, நாம் புழங்கும் இடங்களிலோ நிகழலாம். அப்படி நடக்கும்போதும் நாம் நீதியைப் பெறுவோம் என்ற நம்பிக்கைக்கு எந்த இடமும் இல்லை. அதிலும், அடித்தட்டுப் பெண்கள் தினம்தோறும் ஏதோ ஒரு வகையில், அவர்களைச் சுற்றி இருக்கும் வெவ்வேறு ஆண்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். வறுமையாலும் கல்வியறிவின்மையாலும், அவற்றை வெளிப்படுத்த ஊடக ஆதரவு இன்றியும், எந்த அதிகார பலமும் இன்றியும் அவர்களின் எதிர்ப்புக் குரல் அவர்களுக்குள்ளேயே அடங்கிப்போகிறது. இந்த நிலை, அவர்கள் நிரந்தர வன்முறைக்கு உள்ளாவதற்குக் காரணமாகிவிடுகிறது.

டெல்லி சம்பவத்தில் நாம் நீதியைப் பெற விரும்பினோம், பெற்றோம். அதுபோல பிற நிகழ்வுகளிலும் நீதியைப் பெற, குற்றங்கள் குறைய, நாம் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும் என்பதே டெல்லி சம்பவம் நமக்குக் கொடுத்திருக்கும் நம்பிக்கை. எந்த ஒரு பெண்ணின் மீதான கொடுமை என்றாலும், ஒட்டுமொத்தமாகப் பெண்கள் எழுந்தால்தான் அவளுக்கான நீதியைப் பெற முடியும். அந்த ஒரு பெண்ணுக்கான நீதிதான் பெண்களாகிய நம் எல்லோருக்குமான நீதியாகும்.

நம் கதறலும் முழக்கமும் ஒன்றாக எழ வேண்டும். அப்போதுதான் நம் மகள்கள், சகோதரிகள், அன்னைகள் எல்லோரும் இந்த நாட்டில் நிம்மதியாகவும் வலியின்றியும் வாழ முடியும். இதை உணர்வதுதான் நமக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த நேரத்தில் மிகமிக அவசியம்.

- குட்டி ரேவதி, கவிஞர், தொடர்புக்கு: kuttirevathi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x