

காபிக் கொட்டைகளில் மிகச் சிறந்தது எது என்று தெரிந்தால், காபி சாப்பிடுவதையே நாம் விட்டுவிடுவோம். ஆம், பிராணிகள், பறவைகள் காபிப் பழத்தை உண்டு, மலம் கழிக்கும்போது வெளியேறும் கொட்டைகளையே ருசியில் சிறந்தவை என்று தரம்பிரிக்கிறார்கள். குரங்குகள், எலிகள் உண்பதை ‘குரங்கு வஸ்து, எலி வஸ்து’என்று வகை பிரிப்பார்கள். இதிலேயே மிக உயர்வானது ‘புனுகுப்பூனை வஸ்து’தான்.
புனுகுப்பூனைகளை, காபித் தோட்டத்தில் குடியானவர்கள் வளர்க்கிறார்கள். அவை வேண்டாம் என்றால்கூட, காபிப் பழத்தையே தொடர்ந்து தின்னக் கொடுக்கிறார்கள். சுகாதாரமற்ற கூண்டுகளில், நகரக்கூட இடமின்றி அடைத்துவைக்கப்படும் புனுகுப்பூனைகளும் - காபிப் பழத்தைத் தவிர, வேறெதுவும் சாப்பிடக் கிடைக்காது என்ற நிலையில் - அதைத் தின்கின்றன. பிறகு, குடியானவர் அவை கழிக்கும் ‘புனுகுப்பூனை வஸ்து’வைப் பத்திரப்படுத்தி, தினமும் விற்பனைக்குத் தந்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ‘பெடா’ என அழைக்கப்படும் பிராணிகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
பூனைகளைக் கூண்டில் அடைப்பதால், அவற்றின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது. காலாற நடப்பது, இணையுடன் சேருவது, பிடித்ததை வேட்டையாடி உண்பது, தன் வயதொத்த பூனைகளுடன் விளையாடுவது என்ற சுதந்திரம் பறிக்கப்பட்டு, பணம் சம்பாதிப்பதில் ஒத்துழைக்க வேண்டிய உயிருள்ள இயந்திரமாக மாற்றப்படுகின்றன.
காபிப் பழத்தைத் தவிர, வேறெதுவும் தரப்படாததால் அவை உடல் தளர்ந்து மெலிகின்றன. பித்தம் அதிகமுள்ள காபிப் பழங்களால், நரம்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பித்துப்பிடித்ததுபோல நடந்துகொள்கின்றன. கூண்டில் இருக்கும் இடத்தில் அங்கும் இங்கும் நடக்கின்றன. முடியாமல் சுற்றிச்சுற்றி விழுகின்றன. கூண்டின் கம்பிகளை அவ்வப்போது கடிக்கின்றன. தலையைத் தூக்குவதும் கீழே தணிப்பதுமாக வேதனைப்படுகின்றன.
புனுகுப்பூனைக்கு காபிப் பழங்களை உண்ணக் கொடுத்து, அதிக அளவு காபிக் கொட்டைகளைத் தரமாக எடுத்துவிட முடியாது என்றாலும், அந்த ஜீவன்களை முடிந்த அளவு வதைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள். புனுகுப்பூனையின் படங்களைப் போட்டு, வனத்தில் எடுத்தது என்று பெருமையாக விளம்பரம் செய்கிறார்கள். இந்த காபிதான் இப்போது உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம்.
சில காலத்துக்குப் பிறகு, பூனைகள் இரையெடுக்கவே தயங்கும்போது கூண்டுகளிலிருந்து அவற்றை வெளியே விட்டுவிடுகிறார்கள். பனைமரக் காடுகளில் வசிக்கும் அந்தப் பூனைகள் காடுகளுக்குள் சென்ற உடனேயே இறந்துவிடுகின்றன.