நிக்ஸனும் மோடியும் பின்னே நெட்டிசன்களும்!

நிக்ஸனும் மோடியும் பின்னே நெட்டிசன்களும்!
Updated on
2 min read

அமெரிக்காவின் கம்யூனிச எதிர்ப்பு உலகப் பிரசித்தி பெற்றது. கம்யூனிச ஆதரவாளர் என்று சந்தேகித்ததால், புகழ்பெற்ற திரை மேதை சார்லி சாப்ளின் லண்டன் சென்றிருந்த சமயத்தில் அவரது பாஸ்போர்ட்டையே ரத்துசெய்த ‘பெருந்தன்மை’அவர்களுடையது. நீண்ட காலம் கம்யூனிச நாடு என்பதாலேயே சீனாவை ஒரு நாடாகவே அங்கீகரிக்காமல் இருந்தது அமெரிக்கா.

இத்தனை வெறுப்பு நிலவிய காலத்தில், 1970-களின் தொடக்கத்தில் அமெரிக்காவின் 37-வது அதிபரான ரிச்சர்டு நிக்ஸன், சீனாவுடனான உறவை மேம்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். 1972 பிப்ரவரியில் சீனாவுக்குப் பயணித்த அவர், சீன அதிபராக இருந்த மா சே துங்கைச் சந்தித்துப் பேசியது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. காரணம், நிக்ஸனும் கம்யூனிச எதிர்ப்பாளர்தான். அதுவும் கம்யூனிச எதிர்ப்புக்காகவே பேர் போனவர். அப்படிப்பட்டவர் திடீரென சீனாவுக்குச் செல்ல முடிவெடுத்தது எத்தனை பரபரப்பைக் கிளப்பியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

அதன் பிறகு ‘ஒன்லி நிக்ஸன் குட் கோ டு சைனா’ (நிக்ஸனால் மட்டும்தான் சீனாவுக்குச் செல்ல முடியும்) எனும் சொற்றொடர் பிரபலமானது. அதாவது, எவர் ஒருவர் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைச் செய்யவே மாட்டார் என்று நினைக்கிறோமோ, அவர் திடீரெனத் தடாலடியாக அந்த விஷயத்தைச் செய்வதைக் குறிப்பிட இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

ஆப்கனிலிருந்து திரும்பும் வழியில், பாகிஸ்தானில் இறங்கி அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பேத்தியின் திருமணத்தில் கலந்துகொண்டு திரும்பிய மோடி, நிக்ஸனைத்தான் ஞாபகப்படுத்துகிறார். தனது வாழ்நாள் முழுவதும் பாகிஸ்தான் எதிர்ப்பில் கழித்த தலைவரான மோடி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பாகிஸ்தானுடனான இந்திய உறவு குறித்துக் கடும் விமர்சனங்கள் செய்துவந்தவர். இரு நாட்டு நல்லுறவுக்காகச் சின்னச் சின்ன அளவில் மன்மோகன் சிங் செய்த முயற்சிகளையும்கூடக் கடுமையாக விமர்சித்தவர். இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவிய சமயத்திலும், எல்லையில் பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல், பயங்கரவாதிகளின் ஊடுருவல் என்று ஒவ்வொரு சமயத்திலும் மன்மோகன் சிங் அரசைக் கடுமையாக விமர்சித்தவர் மோடி. சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ‘பாகிஸ்தானுக்கு என்ன பதில்?’ என்று கேட்டு மன்மோகன் சிங் அரசைச் சீண்டிக்கொண்டே இருந்தனர்.

இந்நிலையில், எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் பாகிஸ்தானுக்குச் சென்றுவந்ததைப் பற்றி காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல் இணையவாசிகள் பலரும் விமர்சித்துவருகின்றனர்.

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப் படை தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் விஷயத்திலும் பாகிஸ்தானை மோடி நேரடியாகக் கண்டிக்கவில்லை. “இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், மனித குலத்துக்கு எதிரானவர்கள் நடத்திய தாக்குதல்” என்றே குறிப்பிட்டார். “பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையைக் குலைக்கும்வகையில் யார் என்ன செய்தாலும் அதனால் நாங்கள் தூண்டப்பட மாட்டோம்” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தான் விஷயத்தை ஐமு கூட்டணி அரசு கையாண்ட விதம் குறித்து, மோடி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோ ட்விட்டரில் எழுதிய கருத்துகளைத் தற்போது வெளியிட்டு, ‘எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்னர் வேறொரு நிலைப்பாடா?’ என்று விளாசுகிறார்கள் நெட்டிசன்கள். ஒரு நெட்டிசன் ‘டைமிங்’காக ஒரு ட்வீட் இட்டிருக்கிறார். “நிக்ஸன் பெயருக்குப் பதிலாக மோடியையும், சீனாவின் இடத்தில் பாகிஸ்தானையும் வைத்தால் எத்தனை பொருத்தமாக இருக்கும்!”

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in