Published : 26 Apr 2017 10:16 AM
Last Updated : 26 Apr 2017 10:16 AM

விளாத்திகுளம் நல்லப்பர் சுவாமிகள்!

இயற்கை அவரின் குருபீடம். கண்மாய்க் கரையும் ஆற்றங்கரையுமே அவர் சாதகம் செய்த குருபீடங்கள்ஒருமுறை மைசூர் மகாராஜாவின் அழைப்பின் பேரில் அரண்மனைக்குள் நுழைகிறார் அந்த இசை மேதை. அப்போது மகாராஜா முன்னிலையில் ஒரு இசை வித்துவான் ஒரே ராகத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆலாபனை செய்து சாதனை படைத்தார்.

அதிசய சாதனை புரிந்த வித்துவானுக்கு மகாராஜா பண முடிப்பும் வைரக்கல் பதித்த தங்க மோதிரமும் பரிசாக அளித்தார். பரிசைப் பெற்றுக்கொண்ட வித்துவான், என்னைப் போல் யாராவது ஒரே ராகத்தை மூன்று நாட்கள் ஆலாபனை செய்து பாடினால், அவருக்குத் தான் பெற்ற பரிசுகளைத் திருப்பி அளித்துவிடுவதாகக் கூறினார். இதைக் கேட்ட விளாத்திகுளம் சுவாமிகள் மேடையேறி ‘கரகரப் பிரியா’ ராகத்தை ஐந்து நாட்கள் வரை பாடினார். சவால்விட்ட வித்துவான் மெய்ம்மறந்து சுவாமிகளின் காலடியில் விழுந்து வணங்கி, தான் பெற்ற பரிசுகளை சுவாமிகளுக்குத் திருப்பி அளித்தார். மகாராஜா சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, நல்லப்பரை அணைத்துப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, சன்மானமும் தங்கப் பதக்கமும் அணிவித்துச் சிறப்பித்தார்.

பாரதியும் சுவாமியின் ரசிகர்

பாரதியாருக்கும் சுவாமிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. சுவாமியின் பாட்டை ரசிப்பதற்காக “பாடு.. பாண்டியா பாடு” என்பாராம் பாரதி. எல்லோரும் எட்டயபுரம் அரண்மனை சென்று கவிமாலைகளும் இசைச் சரங்களும் சூடியபோது, அரண்மனைப் பக்கமே எட்டிப்பார்க்காதவர் நல்லப்பர். எட்டயபுரம் சென்றால் இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் மண்டபம் சென்று இசைத்துக் களிப்புற்றுத் திரும்புவார்.

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஒருமுறை பரமக்குடியில் நாடகம் முடித்துவிட்டு காரில் விளாத்திகுளம் வழியே வந்திருக்கிறார். விளாத்திகுளம் எல்லை தொட்டதும் காரை நிறுத்தச்சொல்லி, “இது விளாத்திகுளம் சுவாமி இருக்கிற இடம். இந்தப் பூமியில் நம் பாதம் பட்டாலே பெருமை. நான் நடந்தே வருகிறேன்” என்றாராம்.

இயற்கையுடன் இசைந்த வாழ்வு

விளாத்திகுளம் சுவாமிகள், காடல்குடி ஜமீன்தார். காடல்குடியில் இருந்து பத்துக் கல் தொலைவுள்ள விளாத்திகுளத்துக்கு குடிபெயர்ந்து வந்தவர். சுவாமிகள் என்ற பட்டமும் தொண்டைக்குழியில் இசையும் மட்டுமே அவர் கொண்டுவந்தவை. தாளக் கருவிகளாய் இரு கைகள்; இசைப் பிரவாகமெடுக்கும் ஒரு தொண்டைக் குழி. இசை கற்கக் குருபீடம் இல்லை: இயற்கை அவரின் குருபீடம். கண்மாய்க் கரையும் ஆற்றங்கரையுமே அவர் சாதகம் செய்த குருபீடங்கள். காலை இளங்காற்றில் காது மடலடியில் கனியும் குயில் கீதம், மரத்தின் தாட்டிக் கொப்புகளில் பறவைகளின் ‘கெச் சட்டம்’, நீர்நிலைகளின் அலைத் தாவல், விலங்குகளின் கத்தல் என்று பிரபஞ்ச ஓசைகளிலிருந்தே தன் இசையை அவர் உருவாக்கிக்கொண்டார். கண்மாய்க் கரை மரத்தடியில் பாட்டுக் குரலும் தாளக் கைகளுமாய் நல்லப்ப சுவாமிகள் ஆலாபனை செய்துகொண்டிருப்பார். அங்குதான் ராகங்களைப் பிரித்துப் பிரித்துப் பின்னுவார்.

“கோவில்பட்டிக்கும் விளாத்திகுளத்துக்கும் இடையில் 32 கி.மீ. தொலைவு. சப்த நெரிசல் இல்லாத காலம். கோவில்பட்டி ஆலைகளில் சங்கு ஊதினால், விளாத்திகுளம் மந்தைக்குக் கேட்கும். உள்ளே இருக்கும் தொழிலாளிகளை வெளியே அனுப்பவும், வெளியிலிருப்

பவர்களை உள்ளே அழைக்கவுமான சங்கு ஊதல் ஐந்து நிமிடங்கள் நீடிக்கும். சங்கொலி மெல்ல மெல்ல ஏறி உச்சிக்குப்போய் ஒரு பாட்டம் அந்தரத்தில் நிற்கும். ஆகாயத்தில் நின்று ‘எல்லாம் சரியா இருக்கா’ என்று பார்ப்பதுபோல் தோன்றும். வழுக்கு மரம் ஏறியவன் தானே கீழிறங்குவதுபோல், மெதுமெதுவாக வழுக்கிக்கொண்டே வரும். விளாத்திகுளம் மேற்கில் வடகயிறு போல் கிடக்கும் வைப்பாற்றின் வெட்டவெளியில் நின்று சங்கொலிக்கு இணையாக நல்லப்பர் குரல் பிடிப்பார். மேலே மேலே ஏறி ‘கும்’மென்று உச்சியில் நிறுத்திக் கீழே கொண்டுவருவார்” என பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

மற்றவருக்கு மழை இரைச்சல்; நல்லப் பருக்கு அது இசை. இடி, மின்னல் ஒலி - ஒளிக் காட்சியோடு இசையாகக் கொட்டுகிறது மழை. ஏற்ற இறக்கங்களுடன் ‘பிர்க்காவை’ மழை நடத்திக்கொண்டு போகிறது. அவரும் மழையுடன் சரிக்குச் சரியாய் பிர்க்காக்களைப் போட்டுக்கொண்டு கலந்தார்.

மேதைகள் வியந்த இசைத் திறம்!

மழை ஓய்ந்ததும் முன்னிரவில் அவர் தாமசிப்பது கண்மாய்ப் பக்கம். நீர்நிலைகளில் தவளைக் கச்சேரி. ‘வித்தெடு, விதையெடு - வித்தெடு, விதையெடு’ என்று ஒழுங்கான ஓசைக் கோர்வையாய் தாளம் பிசகாமல் தவளைகள் தொடங்கும். நல்லப்பர் அதை இசையாகக் கொண்டார். நீர்நிலையின் வாகரையில் நின்று சுவாமிகள் கைத்தாளமும் நாக்கை உள்மடித்துக் கிளப்பும் ஓசையுமாய் தவளைக் கும்மாளத்துக்கு ஈடாய் இசைத்துக்கொண்டிருப்பார். பின்னொரு காலத்தில் தன் முன்னால் அமர்ந்து கே.பி.சுந்தராம்பாள், எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.எம்.மாரியப்பா, காருகுருச்சி அருணாசலம், மதுர கவி பாஸ்கரதாஸ் போன்ற இசை மேதைகள் எல்லோரும் கண் சொருக, சொக்கட்டம் போட்டு தலையாட்டிக் கொண்டிருக்குமாறு ஆக்கியது இந்தத் தன் பயிற்சிதான்.

ஆதித் தமிழனின் கலைகளில் இசை முதன்மை கொண்டதெனில், அதனைச் செப்பம் செய்து வளர்த்த பெருமக்கள் வரலாற்றில் நினைக்கப்பட வேண்டிய சிலர் - நல்லப்பர் போல!

இசை ஆர்வலரான என்.ஏ.எஸ்.சிவகுமார், விளாத்திகுளம் சுவாமிகள் என்றழைக்கப்படும் நல்லப்பர் பற்றி ஏராளமான தரவுகளை, தகவல்களை உள்ளடக்கி ஒரு நூலையும் ஆவணப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார். அது இன்று (26.04.2017) விளாத்திகுளத்தில் வெளியிடப்படுகின்றன.

- பா.செயப்பிரகாசம், எழுத்தாளர்

தொடர்புக்கு: jpirakasam@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x