Published : 06 Nov 2013 03:14 PM
Last Updated : 06 Nov 2013 03:14 PM

அந்நியனே வெளியேறு!

ஒரு பெரிய கலவர களேபரத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது ரஷ்யா. கடந்த சில மாதங்களாகவே அங்கே ரஷ்யா ரஷ்யர்களுக்கே என்னும் கோஷம் தீவிரமடையத் தொடங்கியது. என்னடா விவகாரம் என்று கேட்டால், உள்நாட்டில் ரஷ்யர்களுக்கு வேலை வாய்ப்பே இல்லை; எல்லா நிறுவனங்களும் பிற தேசத்தவருக்கே வேலை கொடுத்துக்கொண்டிருக்கின்றன என்று சொன்னார்கள்.

இதுதான் பிரச்னையா என்றால் இது ஒரு பெரிய பிரச்னை ஆகிக்கொண்டிருப்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதனைக் காட்டிலும் வலுவான காரணங்களை வைத்துக்கொண்டு ரஷ்யர்கள் இப்போது கோஷம் போட்டுக்கொண்டு வீதிக்கு இறங்கியிருக்கிறார்கள். அரசுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. போராட்டக்கா ரர்களை அடக்குவது என்பது எளிய தொடக்கம். ஆனால் நாளுக்கு நாள் பல்வேறு நகரங்களில் கொடி பிடித்து ஊர்வலம் செல்லும் கூட்டம் பெரிதாகிக் கொண்டே இருப்பதுதான் பெருங்கவலையாகி நிற்கிறது.

பழைய சோவியத் யூனியனில் இருந்து விலகிப் போன பல்வேறு குட்டி தேசங்களில் இருந்து உத்தியோக நிமித்தம் ரஷ்யாவுக்கு வந்து செட்டில் ஆகியிருப்போரும் இனக்குழு அடையாளத்துடன் தனி தேசமாகப் பிரிந்து சென்றபோது இடம்பெயராமல் ரஷ்யாவிலேயே தங்கிவிட்டோரும்தான் ரஷ்யர்களின் டார்கெட். தங்கள் வேலைகளை அவர்கள் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். தங்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளைக் கிடைக்கவிடாமல் செய்துவிடுகிறார்கள். தவிரவும் தேசமெங்கும் தினசரி நடக்கும் பல கொலைச் சம்பவங்களுக்கு இந்த அயலான்களே காரணமாயிருக்கிறார்கள்.

ஒன்று, இரண்டு, மூன்று என்று தொடங்கி சம்பவ உதாரணங்களை எடுத்துப் போடுவதில் அவர்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் என்ன சொன்னாலும் அரசுத் தரப்பில் இதற்கு சரியான பதில் இல்லாததுதான் கொதிப்படையச் செய்திருக்கிறது.

ரஷ்யாவில் ஏகப்பட்ட இனக்குழுக்கள் உண்டு. அதிகாரபூர்வமாக 185 இனக்குழுக்கள் இருப்பதாக ஒரு கணக்கு இருக்கிறது. ஆதி ரஷ்யர்கள், டாதர்கள், பாஷ்கிர்கள், செச்னியர்கள், அவார்கள், ஆர்மீனியன்கள், கசக்கியர்கள், டார்கின்கள் என்று தொடங்கி தேசமெங்கும் பரவிக்கிடக்கும் மக்களுக்கு இடையே பெரும்பஞ்சாயத்துகள் ஏதும் இதற்குமுன் வந்ததில்லை. பிரச்னை என்றால் அது அரசிடமிருந்து வரும். ஒன்று ஏற்றுக்கொள்வார்கள், அல்லது எதிர்ப்பார்கள். தீர்வு கிடைக்கும் அல்லது சகித்துக்கொள்வார்கள். இதுதான் நடந்த சரித்திரம். தத்தமது இனத்தாருக்குத் தனித் தேசம் வேண்டும் என்று ஒரு கட்டத்தில் வாங்கிக்கொண்டு பிரிந்தும் சென்றார்கள்.

அப்படிப் போனவர்கள் ஏன் மொத்தமாகப் போகவில்லை என்பதுதான் ரஷ்யர்களின் இப்போதைய கேள்வி. ரஷ்யாவுக்குள் இருக்கும் அயல் தேசத்தவர் அத்தனை பேரும் மொத்தமாக வெளியேற வேண்டும் என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏழைமை ஆற்றவும் பட்டோம், இனி என்றும் பேச்சு வார்த்தைக்கு வாரோம். முதலில் அவர்களை வெளியே அனுப்புகிறாயா இல்லையா? இரண்டிலொரு பதில் வேண்டும்.

என்ன ஒரு பத்து பதினைந்தாயிரம் பேர் இருப்பார்களா என்றால், பிரச்னையே அங்கேதான். ரஷ்யர்கள் வெளியேற்ற நினைக்கும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு கோடியே பத்து லட்சம் பேர். எங்களை எப்படி வெளிநாட்டவர் என்று சொல்லலாம்? நாங்கள் பிறந்ததிலிருந்து இங்கேயேதானே இருக்கிறோம் என்கிறார்கள் மாற்று இனக்குழு மக்கள் பிரதிநிதிகள். அதான் உங்கள் இனத்தவர்கள் தனி நாடு வாங்கிக்கொண்டு பிரிந்து போய்விட்டார்களே, நீங்கள் எதற்காக இங்கேயே கடை விரிக்கிறீர்கள் என்பது ரஷ்யர்களின் கேள்வி.

இது இப்போதைக்குத் தீராது என்று தட்டிவிட்டு நகர்ந்து போய்விட முடியாத அளவுக்கு நாளொரு பேரணி, பொழுதொரு கடையடைப்பு, கலவரம் என்று ரஷ்யாவின் பல்வேறு முக்கிய நகரங்கள் தினசரி தீபாவளி நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. வேலை வாய்ப்பு பெரும் பிரச்னையாக இருக்கும் சூழ்நிலையில் ரஷ்ய மக்களை இந்தப் போராட்டத்துக்குள் இழுக்கிற வேலை போராட்டக்காரர்களுக்குச் சுலபமாகவும் இருக்கிறது. தொழிற்சங்கங்கள், கல்லூரிகள், பெண்கள் அமைப்புகள் என்று தேடித்தேடிப் போய் பிரசாரம் செய்து போராட்டத்துக்குக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அரசுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. போராட்டத்தின் அடுத்தக் கட்டம் மேலும் தீவிரமடைந்து அபாய எல்லையைத் தொடலாம் என்று உளவுத்துறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். குறைந்தபட்சம் சிலநூறு கொலைகள் விழக்கூடுமென்று அச்சமூட்டியிருக்கிறார்கள்.

அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யப் போகிறார் புதின்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x