Last Updated : 28 Nov, 2013 12:00 AM

 

Published : 28 Nov 2013 12:00 AM
Last Updated : 28 Nov 2013 12:00 AM

அமைதிப் புறாவைப் பறக்கவிட்டு சமைத்துப் பார்!

சொல்லி வாய்மூடி எண்ணி பத்து நாள்தான் ஆகிறது. ஜனவரியில் நடக்கவிருக்கும் ஜெனிவா அமைதி மாநாட்டுக்கு நான் வரமாட்டேன் என்று சுதந்தர சிரியன் ராணுவம் (Free Syrian Army - FSA) அறிவித்துவிட்டது. எதிர்த்தரப்பு நாற்காலிகளில் FSAவின் பிரதிநிதிகளாக யார் யார் உட்காரப் போகிறார்கள் என்று மேற்குலகம் ஆரூடம் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் வந்திருக்கும் இந்த அறிவிப்பு, ஐநாவுக்கு மிகுந்த அயர்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்காவும் பிரிட்டனும் குடைச்சல் கொடுக்கும் ஆயுததாரிகளிடம் எப்படியாவது நைச்சியமாகப் பேசி ஆளுக்கொரு அமைச்சர் பதவி மாதிரி என்னத்தையாவது கொடுத்து தாற்காலிக அமைதிக்காவது வழி பார்க்கலாம் என்று எண்ணியிருந்தார்கள். அது கெட்டது. FSA ஜெனிவாவுக்கு வரமாட்டேன் என்று சொன்ன சூட்டில் அதிபர் பஷார் அல் அஸாத் ரொம்ப டிப்ளமடிக்காக ஓர் அறிக்கை விட்டார்.

யார் வந்தாலென்ன? வராவிட்டால் எனக்கென்ன? அமைதிப் பேச்சில் என் பிரதிநிதிகள் அவசியம் இருப்பார்கள். எந்த முன் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படாமல் திறந்த மனத்துடன் சிரியா அரசாங்கம் பேச்சுவார்த்தையில் பங்குபெறும். நியாயமான எந்த ஒப்பந்தத்துக்கும் சம்மதிக்கும்.

மேற்கண்ட நாலு வரி அறிவிப்பில் நாம் கவனிக்க வேண்டியது முதல் வரியை மட்டும்தான். முந்தாநேத்து வரைக்கும் முதல் சீட்டில் என் துண்டு என்று சொல்லிக்கொண்டிருந்த அதிபர் பெருமான் இப்போது என் பிரதிநிதிகள் வருவார்கள் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். அதாவது, அவர் வரப்போவதில்லை!

சரி எனக்கென்ன போச்சு? அதிபர் இல்லாவிட்டாலும் எதிர்த்தரப்பு முக்கியஸ்தர்கள் இல்லாவிட்டாலும் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தே தீரும் என்கிறது ஐநா. இந்த கேலிக்கூத்து எங்கு சென்று முடியும் என்று இப்போதே ஒருவாறு யூகித்துவிட முடிகிறதல்லவா?

சிரியாவில் அமைதி என்று ஆளாளுக்குச் சொல்லிக்கொண்டிருந்தாலும் அடிப்படையில் யாருக்கும் அதில் விருப்பமில்லை என்பதுதான் உண்மை. பஷார் அல் அஸாத் பதவி விலக ஒப்புக்கொண்டால் அடுத்த வினாடி சிரியா அமைதிப் பூங்காவாகிவிடும். இது அமெரிக்காவுக்கும் தெரியும், அதன் அடிப்பொடிகளுக்கும் தெரியும். FSA மட்டுமல்லாமல், அரசாங்கத்தை வீழ்த்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டி, மல்லுக்கு நிற்கும் அத்தனை போராளிக் குழுக்களும் இதைத்தான் முதல் நிபந்தனையாக வைக்கின்றன. அமைதிப் பேச்சுக்கு வரத் தயார் என்று இஸ்தான்புல் செயற்குழுவில் கூடிப் பேசி முடிவெடுத்த போராளிகள்கூட, ஆனால் அதற்கு முன்னால் அதிபர் பதவி விலக வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தார்கள்.

உண்மையில் அமைதி விரும்பிகளாக இருக்கும் பட்சத்தில் அதைத்தானே இந்நேரம் செய்திருக்க வேண்டும்? சிரியா மக்கள் சர்வ நிச்சயமாக அதிபரை விரும்பவில்லை. அவர் ஒழிந்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள். மக்களின் இந்த மனநிலை உறுதிப்பாடுதான் போராளிக் குழுக்களுக்கு சாதகமாக இருக்கிறது. அடித்துத் துவைத்துக் காயப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போதிருக்கும் சூழ்நிலை அமைதிப் பேச்சுக்கு சாதகமாக இருப்பதாகத் தோன்றவில்லை; நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதாகவும் இல்லை என்று FSA தெளிவாகச் சொல்லிவிட்டது. உள்ளதிலேயே பெரிய குழு இதுதான் என்னும் நிலையில், ஜெனிவா டூருக்குப் போய்த்தான் பார்ப்போமே என்று நினைத்த இதர குழுவாலாக்களும் இனி வரிசையாகப் பின்வாங்க ஆரம்பிக்கக் கூடும். அரசுத் தரப்பை இது மேலும் கடுப்பாக்கி, தாக்குதலை இன்னும் உக்கிரமடையச் செய்யும்.

ஷியாக்கள் நிறைந்த ஈரானுடன் அமெரிக்கா இப்போது திடீரென்று ஒட்டி உறவாடத் தொடங்கியிருக்கும் நிலையில், அதிபர் பஷார் ஒரு ஷியா முஸ்லிம் (சிரியாவில் இது மைனாரிடி பிரிவு) என்பதால் இவர் மீது உள்ள வெறுப்பின் சதவீதம் நிச்சயமாக இன்னும் கூடும்.

மக்களின் அரசு மீதான கோபம் என்பது வெகு விரைவில் ஷியாக்கள் மீதான பொதுப் பாய்ச்சலாக உருவெடுக்கும் அபாயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அது நடக்கத் தொடங்கிவிட்டால் சிரியாவில் அமைதி என்பது ஜென்மத்துக்கும் இல்லாது போய்விடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x